019. புறங்கூறாமை - 01. அறங்கூறான்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     பிறரைக் காணாத இடத்தில், அவரை இகழ்ந்து பேசுவது புறம் பேசுதல் ஆகும். பொறாமை காரணமாகப் பிறர் பொருளைக் கவர விருப்பம் கொள்ளுதல் மனத்தின் குற்றம் ஆகும். புறம் பேசுதல் என்பது மனத்தின் குற்றத்தை அடுத்து, வாக்கின் குற்றமாக வருவது.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "ஒருவன் அறத்தின் கூறுகளாகிய நற்செயல்களைப் போற்றிக் கூறாதவனாக இருந்தாலும், பாவச் செயல்களைச் செய்தாலும், பிறர் ஒருவரைக் காணாத போது, அவரைப் பற்றி இகழ்ந்து பேசமாட்டான் என்று உலகத்தவர் கூறுவது இனியது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒருவன் அறம் கூறான், அல்ல செயினும் --- ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;

     புறம் கூறான் என்றல் இனிது --- பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று,
        
         (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்....

பொய்ம்மேல் கிடவாத நாவும், புறன் உரையைத்
தன்மேல் படாமைத் தவிர்ப்பானும், --- மெய்ம்மேல்
பிணிப்பண்பு அழியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை.       --- அறநெறிச்சாரம்.
    
இதன் பதவுரை ---

     புறன் உரையைத் தன்மேல் படாமை தவிர்ப்பான் ---புறங்கூறலாகிய தீமை தன்கண் நிகழாமல் காப்பவன், பொய் மேல் கிடவாத நாவும் --- பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய் மேல் பிணிப் பண்பு அழியாமையும் --- மெய் பேசுதலில் பிணிப்புண்டு இருக்கும் பண்புடைமை நீங்காமையையும், பெற்ற பொழுதே --- பெற்ற அப்போதே, தணிக்கும் மருந்து தலை ---பிறவிப் பிணி தணிக்கும் தலையாய மருந்தைப் பெற்றவன் ஆவான்.

அறங்கூற நாவென்ப நாவுஞ் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர்-பிறன்றாரத்(து)
அற்றத்தை நோக்காத கண்ணென்ப யார்மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு.      --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     அறம் கூறும் நா என்ப நாவும் --- அறத்தினைக் கூறுகின்ற நாவே நா ஆகும் என்பர், செவியும் புறங்கூற்று கேளாத என்பர் ---புறங்கூறுதலைக் கேளாத செவியே செவியாகும் என்பர், பிறன் தாரத்து அற்றத்தை நோக்காத கண் என்ப --- அயலான் மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே கண் என்பர், யார் மாட்டும் செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு --- தீமை செய்வாரிடத்தும் பகைமையின்றி இருப்பதே மனம் ஆகும்.


பிறர் மறையின்கண் செவிடாய், திறன் அறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறம்கூற வேண்டா அவற்கு.       --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     பிறர் மறையின்கண் செவிடாய் --- பிறருடைய மறைந்த கருத்துக்களைக் கேட்டலில் செவிட்டுத் தன்மை உடையவனாய், ஏதிலார் இல்கண் குருடனாய் --- அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலில் குருடு உடையவனாய். தீய புறங்கூற்றின் மூகையாய் --- தீய ஆகிய புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமைத் தன்மை உடையவனாய், திறன் அறிந்து நிற்பானேல் --- வாழ்க்கையில் துன்பம் உண்டாகும் கூறுகள் இவை என்று அறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், யாதும் அறம் கூறவேண்டா அவற்கு - அவனுக்குப் பிறர் வேறு யாதும் அறத்தை அறிவுறுக்க வேண்டா.

தாக்கு உற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்கு உற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்
மூக்கு அற்றதற்கு இல் பழி.          ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     என் ஆனும் --- எப்படி ஆயினும், மூக்கு அற்றதற்கு பழி இல் --- மூக்கு அறுபட்டதற்குப் பழிப்பு இல்லை (அதுபோல), தாக்கு உற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து --- ஒருவரைத் கண்ட பொழுது தம் உறவினரைப்போல் அன்புடன் நன்றாகப் புகழ்ந்து உரைத்து, போக்கு உற்ற போழ்தில் --- அவர் நீங்கிய இடத்து, புறன் அழீஇ --- புறம் பேசுபவர்களைப் பற்றி இழித்துப் பேசுபவரால், மேன்மைக்கண் நோக்கு அற்றவரை --- மேன்மைக் குணத்தின்கண் கருத்து இல்லாதவர்களை, பழித்தல் என் ---இகழ்ந்துரைத்தல் ஏன்?


மை ஏர் தடங்கண் மயில் அன்னாய்! சாயலே
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்
மறலையின் வாயினவா மற்று.      ---  ஏலாதி.

இதன் பதவுரை ---

     மை ஏர் தடம் கண் மயில் அன்னாய் --- மை தீட்டிய அழகான, பெரிய கண்களையுடைய மயிலைப்போன்ற பெண்ணே!, உணர்ந்தார் --- சான்றோர், சாயலே --- மென்மையான நற்சொற்களையும், மெய்யே --- மெய்யையும், மிக உரைப்பர் --- மிகவும் பேசுவார், பொய்யே --- பொய்யும், குறளை --- புறங்கூறலும், கடுஞ்சொல் --- வன்சொல்லும், பயனில சொல் --- பயனில்லாத சொற்களும், நான்கும் --- ஆகிய இவை நான்கும், மறலையின் வாயின --- புல்லறிவுடையான் வாயில் வருவனவாம்.

     பெரியோர் வாயில் நன்மொழிகள் பிறக்கும், சிறியோர் வாயில் தீச்சொற்கள் பிறக்கும்.


தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;
முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;
நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா
தொன்மை உடையார் கெடல்.   ---  இன்னா நாற்பது.

இதன் பதவுரை ---

     தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா --- ஒருவன் மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடங்கி, தன்னைத் தானே காத்துக்கொள்ளாது நடத்தல் மிகவும் துன்பமாம்; முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா - முன்னே சொல்லாமல் புறத்தே பழித்துரைக்கும் புறங்கூற்று துன்பமாம்; நன்மை இலாளர் தொடர்பு  இன்னா --- நற்குணம் இல்லாதவரது நட்பு துன்பமாம்; ஆங்கு --- அவ்வாறே, தொன்மை உடையார் கெடல் இன்னா --- தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழமையான குடியினர் செல்வம் கெடுதல் துன்பமாம்.

நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,

அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள் செய்வான்

பல்லார் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த

கல்லார் கடல் நாகைக் காரோணத்தானே. --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்கள் ஆகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவர் அல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலரது தலை ஓடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

     புறம் கூறுபவரக்ககும், அலர் தூற்றுபவர்க்கும் இறையருள் கிட்டாது. அறம் கூறுபவர்க்கே இறையருள் கிட்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...