018. வெஃகாமை - 05. அஃகி அகன்ற





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பிறர் பொருள்களை விரும்பி, எல்லோரிடத்தும் அறிவோடு பொருந்தாத செயல்களை ஒருவன் செயிவானாயின்,  அவன் எல்லா நூல்களையும் கற்று விரிந்த அறிவானது என்ன பயனை உடையது ஆகும்". என்கின்றது.

     எல்லோரிடத்தும் அறிவோடு பொருந்தாத செயல்கள் என்பது, மேன் மக்களிடத்தும், கீழ் மக்களிடத்தும், இழிந்த, கொடிய செயல்களைச் செய்தல்.

திருக்குறளைக்  காண்போம்...

அஃகி அகன்ற அறிவு என்ஆம், யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின்.             

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அஃகி அகன்ற அறிவு என்னாம் --- நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்;

     வெஃகி யார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.

         ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)

     இதற்கு ஒப்பாக அமைந்த பின்வரும் பாடலைக் காணலாம்...

அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? - ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
ஆவதே போன்று கெடும்.        ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ --- ஒல்லென்று ஒலிக்கும் நீர் கல்பாறை மீது பாய்வதே போன்று விளங்கும் கடல் துறையை உடையவனே!, கேள் --- கேட்பாயாக, தீயன ஆவதே போன்று கெடும் --- தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதே போன்று தோற்றுவித்துத் தன் எல்லையைக் கடந்து கெட்டுப் போகும் (ஆதலால்), அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை --- தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை, நல்லது செய்வார் நயப்பவோ --- நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்புதலிலர்.)

         நல்லோர், தீயது செய்வார் செல்வம் நிலையாமையை அறிந்து, அதனைப் பொருளாக மதிக்கமாட்டார் என்பதால், தீவினை செய்து பொருள் ஈட்டல் ஆகாது என்பது கருத்து.

         புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டு போனதுபோல, தீயார் செல்வம் வருவது போன்று தோன்றி, உள்ளதையும் கொண்டு போகும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...