020. பயனில சொல்லாமை - 02. பயனில பல்லார்முன்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "பயன் இல்லாத வெற்றுச் சொற்களை, அறிவுடையார் பலரின் முன்னிலையில் ஒருவன் சொல்லுவது, தனது நண்பர்களிடத்தில் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்வதிலும் தீயது" என்கின்றது.

     சொல்லல் என்பதால், பயனில என்பது பயன் இலவாகிய சொற்கள் என்பதும், செய்தல் என்பதால், நயனில என்பது, விருப்பம் இல்லாத செயல்கள் என்பதும் பெறப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...

பயன்இல பல்லார்முன் சொல்லல், நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.

இதற்குப் பரிமேழகர் உரை ---

     பயன் இல பல்லார்முன் சொல்லல் --- பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்,

     நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது --- விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.

         ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ஊன்றப் - பல்லா
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்
உரைத்தால் உரைபெறுதல் உண்டு.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     பல் ஆநிரை புறங்காத்த நெடியோனே யாயினும் --- பலவாகிய பசுக்கூட்டங்களைக் காத்த நீண்ட வடிவெடுத்த திருமாலே ஆயினும், உரைத்தால் --- அவையில் ஒருவனை இகழ்ந்து உரைத்தால், உரை பெறுதல் உண்டு --- (தாமும் அவனால்) இகழ்ச்சி உரையை அடைதல் உண்டு. (ஆகையால்), பல்லார் அவை நடுவண் --- நல்லோர் பலரும் கூடியிருக்கும் அவையின் இடையே, பால்பட்ட சான்றவர் --- நன்னெறிப்பட்டு ஒழுகும் சான்றோர், ஒருவரையும் உள் ஊன்ற சொல்லார் ---எவரையும் மனம் உளையும்படி இகழ்ந்து கூறார்.

     இனிய சொல் சொன்னால் இனிய சொல் கிடைக்கும். கடுஞ்சொல் சொன்னால் அதுவே திரும்பக் கிடைக்கும்.

சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்,நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம், மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம், ஞெண்டிற்குத் பன்பார்ப்பு,
நாவிற்கு நன்றல் வசை.        ---  சிறுபஞ்சமூலம்

இதன் பதவுரை ---

     சிலம்பிக்கு தன்சினை கூற்றம் --- சிலந்திப் பூச்சிக்கு தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும்; விலங்கிற்கு நீள்கோடு கூற்றம் --- எருது முதலிய மிருகங்களுக்கு,  அவற்றின் நீண்ட கொம்புகளே எமனாகும்; வலம் படா மாவிற்கு மயிர்தான் கூற்றம் --- வெற்றி உண்டாகாத கவரிமானுக்கு, அதன் மயிரே எமனாகும்; ஞெண்டிற்கு தன் பார்ப்பு (கூற்றம்) --- நண்டுக்கு, தன் குஞ்சுகளே எமனாகும்; நாவிற்கு நன்று அல் வசை (கூற்றம்) --- ஒருவனுடைய நாவுக்கு நன்மையல்லாத பழிமொழிகள் எமனாகும்.

         சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையே சாக்காட்டைக் கொடுக்கும்.  நீண்ட தமது கொம்புகள் துன்பங் கொடுக்கும். ஆதலால் விலங்கிற்கும் அவையே கூற்றம். வெற்றி இல்லாத கவரிமாவிற்கு, தன் மயிரே கூற்றம். நண்டிற்கு அதன் குஞ்சே கூற்றம்.  ஒருவனது நாவிற்குப் பழியைக் கொடுக்குமாதலால் பிறரை நன்று அல்லாத வசை சொல்லுதல் கூற்றமாம்.

அறந்தரு மைந்தன் தன்னை அறன்அலாது இயற்றி, நம்பி
திறந்தரு செல்வம் யாவும் தீமையில் கவர்தல் உற்றாய்,
மறந்தரு வலியும் அன்று, மணந்தரு வாழ்வும் அன்று 
திறந்தரு புகழும் அன்று நெறிதரு மதியும் அன்றே.
                       ---  வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

இதன் பதவுரை ---

     (விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);- 'நம்பி --- சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை --- அறக்கடவுள் பெற்ற புதல்வனாகிய தருமபுத்திரனை, அறன் அலாது இயற்றி --- தருமவிரோதமாகிய சூதாடுதலைப் புரியும்படி செய்து, திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் --- (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீயவழியால் கவரத் தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது), மறம் தரு வலியும் அன்று --- வீரத்தைத் தருகிற சாமர்த்தியமும் அல்ல; [இது சுத்த வீரர்க்குச் சிறிதுந்தகாது]; மணம் தரு வாழ்வும் அன்று ---மங்களகரமான வாழ்க்கையும் அல்ல; திறம் தரு புகழும் அன்று --- பெருமையைத் தருகிற புகழும் அல்ல; நெறி தரு மதியும் அன்று --- தரும சாத்திரங்களிற் கூறிய புத்தியும் அல்ல.

     'நீ மாயச் சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்; இது வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய், நினது நாசத்திற்கே காரணமாயுள்ளது' என்று கூறி விதுரன் துரியோதனனுக்கு அவனதுசெயல் தகாததென எடுத்துக் காட்டினன் என்க.
திருத்தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும், செவ்வி
மருத்தகு தெரியல் மாலை மாசிலாமன்னர் முன்னர்
உருத்தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல் கண்டாய், கடவுளர் கற்பம் வாழ்வாய்.
                       ---  வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

இதன் பதவுரை ---

     (விதுரன் மேலும் துரியோதனனுக்கு அறிவுறுத்தியது) திரு தக --- (உனக்குச்) சிறப்பு உண்டாம்படி, மொழிந்த எல்லாம் --- (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை யெல்லாம், செய்தனை எனினும் --- செய்து முடித்தாயானாலும், செவ்வி மரு தகு தெரியல் மாலை --- அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையை அணிந்த, மாசு இலா மன்னர் --- குற்றமற்ற அரசர்கட்கு எதிரில், உரு தகு கற்பினாளை --- அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையும் உடையவளான திரௌபதியைக் குறித்து, உரை அலாது உரைக்கும் மாற்றம் --- சொல்லத்தகாத சொற்களைச் சொல்லுதலை மாத்திரம், கருத்தினில் நினையல் --- மனத்தில் எண்ணாது இருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்), கடவுளர் கற்பம் வாழ்வாய் --- தேவர்களது ஆயுளளவும் அழியாது [நீடுழிகாலம்] வாழ்ந்திருப்பாய்.

    தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும், மகா பதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை மாத்திரம் தவிர்ந்திடு; இதனால், உனக்கு மிக்க நன்மை உண்டாகும் என்று விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறினன்.

     உருத் தகு கற்பினாள் - (கண்டவர்) அஞ்சத்தக்க [மிக்க] கற்பை உடையவளான திரௌபதி.  கற்பாவது - கணவனைத் தெய்வமாக மதித்து அவனை வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாயிருக்கும் போது தாய் தந்தை முதலியோராலும் திருமணம் ஆன பின்னர்க் கணவன் முதலியோராலும் கற்பிக்கப்படுவதாதலின், இது கற்பு ஆயிற்று.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...