022. ஒப்புரவு அறிதல் - 02. தாளாற்றித் தந்த





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "முயற்சியுடன் உழைத்துத் தேடிய பொருள் யாவும், தகுதி உடையவர்க்கு உதவி செய்தல் பொருட்டே ஆகும்" என்கின்றது.

     தகுதி என்பது, கல்வி, கேள்வி அறிவுகளால் உண்டான யோக்கியத்தைக் குறித்தது. இதனால், தேடிய பொருளைக் கொண்டு, தக்கார்க்கு உபகரித்துத் தானும் அனுபவித்து வரவேண்டும் என்பது பெறப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...
        
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம், தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.

அதற்குப் பரிமேலழகர் உரை ---

     தக்கார்க்கு --- தகுதி உடையார்க்கு ஆயின்,

     தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் --- முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும்,

     வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.

      (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற் பொருட்டும், வைத்து இழத்தற் பொருட்டும் அன்று என்பதாயிற்று.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் முனையடுவார் நாயனார் புராணத்தைக் காட்டி, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் பாடல்...

வினை அடுவார் வந்துஅடுக்க என்றுகொண்ட கூலி
தனை அடுவார் சைவர் தமக்கே - முனையடுவார்
தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.

         முனையடுவார் நாயனார், நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். "அறைகொண்ட வேல் நம்பி முனையடுவார்க்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

         சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மை உடையவர். போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணை வேண்டினால், நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையால் கூலி பேசிக்கொண்டு, அவர்களுக்காகப் போர்செய்து, பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்து இருந்து உமையொருபாகர் திருவருளால் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

         தகுதி உடையார்க்கு ஆயின் முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுதும் ஒப்புரவு செய்தல் பயத்தவாம் எனத் திருவள்ளுவ நாயனார் அருளியமை காண்க.

         வினைஅடுவார் --- நல்வினை தீவினைகளை அழிப்பார். தாள் ஆற்றி --- முயற்சி செய்து. வேளாண்மை --- உபகாரம்.
                                                                       
     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம்; - தெரியுங்கால்,
செல்வம் உடையாரும் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.         ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     பெரியார் பெருமை சிறு தகைமை --- கல்வி கேள்விகளில் சிறந்த பெரியாருடைய பெருமைக் குணமாவது யாண்டும் தாழ்வுடைமையாய் இருத்தல்; ஒன்றிற்கு உரியார் உரிமை அடக்கம் --- வீடுபேற்றிற்கு உரியரான மெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாது மனமொழி மெய்கள் அடக்கமாய் இருத்தல்; தெரியுங்கால் --- ஆராயுமிடத்து, செல்வமுடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப எனின் --- தம்மை அடைந்தவர்கள் உடைய வறுமைத் துன்பங்களை   நீக்குவார்களாயின் செல்வம் உடையாரும் செல்வர் --- செல்வம் படைத்தவர்களும் செல்வரே ஆவர்.

ஈட்டிய ஒண்பொருள் இன்று எனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்று ஏறாய் விடும். --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஏற்றுக் கன்று --- நல்ல எருதிற்குப் பிறந்த ஆண் கன்று, ஆற்றவும் போற்றப்படாதாகி --- மிகவும் பாதுகாக்கப் படாததாய், புல்லின்றி மேயினும் --- பசும் புற்கள் இன்றி யாதானும் ஒன்றை மேய்ந்தாலும், ஏறு ஆய்விடும் --- பின்னர் எருதாக ஆகிவிடும்; (அதுபோல) மனை பிறந்த சான்றவன் --- நல்ல குடியின்கட் பிறந்த அறிவுடையோன், ஈட்டிய ஒண்பொருள் இன்று எனினும் --- தான் தேடிய மிக்க செல்வம் இல்லை யாயினும், ஒப்பரவு ஆற்றும் --- உலக நடையினை அறிந்து செய்யவல்லனாம்.

         நற்குடிப் பிறந்தார் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்.

         'ஈட்டிய ஒண்பொருள்' என்றமையால் தான் தேடிய பொருளைக் கொண்டே ஒப்புரவு செய்தல் வேண்டும் என்பது பெறப்படும். பிறர் ஈட்டிய பொருளைக் கொண்டு செய்யின், நன்மை அவர் மேலும் தீமை தன்மேலும் நிற்குமாதலின், தான் தேடிய பொருளைக் கொண்டே செய்யவேண்டும்.

         'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு' என்பதும் இக்கருத்துப் பற்றியதே.


ஊர்முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிகஇனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன்இனிதே;
வாள்மயங்கு மண்டு அமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.        --- இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிது --- ஊரார் வெறுக்காதனவற்றைச் செய்து வருகின்ற பெருமை மிகவும் இனிது;  தானே மடிந்திரா தாள் ஆண்மை முன் இனிது --- (தலைவனாகிய) தானே (ஒரோ வழித் தாமத குணத்தான் யாவர்க்கும் வருகின்ற சோம்பலின் கண்) வீழ்ந்திராது முயற்சியை ஆளுந்தன்மை மிக இனிது; வாள் மயங்கும் மண்டு அமருள் மாறாத மாமன்னர் தானை தடுத்தல் இனிது --- வாட்கள் (நெருக்கத்தால் ஒன்றோடொன்று) கலக்கின்ற மிக்க போரில், மீளாத பெருமையுடைய அரசர்களது சேனைகள் (பொருதலை), ஓரரசன் விலக்குதல் இனிது.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...