திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
20 - பயனில சொல்லாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "நற்குணம் உடையவர்கள்
பயனற்ற சொற்களைப் பேசினால், அவருடைய தகுதியும், அதனால் வரும்
மரியாதையும் அவரிடத்தில் இருந்து நீங்குவிடும்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்...
சீர்மை
சிறப்பொடு நீங்கும், பயன் இல
நீர்மை
உடையார் சொலின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பயன் இல நீர்மையுடையார் சொலின் ---
பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்,
சீர்மை சிறப்பொடு நீங்கும் --- அவரது
விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.
(நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும்
நூலில் வரும் ஒரு பாடல்...
வேந்தை
வதிட்டன் வியத்தல் பழுது என்ற முனி
ஏந்து
தவம் தோற்றான், இரங்கேசா! -
ஆய்ந்தக்கால்
சீர்மை
சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை
யுடையார் சொலின்.
இதன்
பதவுரை
---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வேந்தை ---
அரிச்சந்திர மகாராஜனை, வதிட்டன் --- வசிட்ட
முனிவர், வியத்தல் ---
புகழ்ந்து பேசுதல், பழுது --- பிசகு, என்ற --- (என்று தேவேந்திர சபையில்)
சொன்ன, முனி ---
விசுவாமித்திர முனிவர், ஏந்து தவம் தோற்றான் ---
தமது செய்தவத்தை இழந்தார். (ஆகையால், இது) ஆய்ந்தக்கால் --- ஆராய்ந்து
பார்த்தால், பயன் இல --- வீண்
வார்த்தைகளை, நீர்மை உடையார்
சொல்லின் --- பெருந்தன்மை உடையவர்கள் பேசினால், சீர்மை --- அவர்களுடைய பெருந்தன்மையானது, சிறப்பொடு --- அதனால் வரும் புகழோடு, நீங்கும் --- அழியும் (என்பதை
விளக்குகின்றது).
கருத்துரை --- வாதாடி
வழக்குரைத்துத் திரிய வேண்டாம்.
விளக்கவுரை --- முற்காலத்தில்
தேவேந்திரன் சபையில் வசிட்ட விசுவாமித்திர முனிவர்களுக்குள், பூலோகத்திருந்த அரிச்சந்திரனுடைய உண்மை
நெறியைப் பற்றி வாதம் உண்டாயிற்று. விசுவாமித்திரற்குப் பித்தம் மேலிட்டு, சித்த சுவாதீனமின்றி, அரிச்சந்திரனைப் பொய்யன் என்று
சாதித்தார். வசிட்டர் சாந்தமாய், அரிச்சந்திரன் மெய்யன், துய்யன் என்று வாதித்தார். இருவரும்
சூள் உரைத்துக் கொண்டார்கள். வசிட்டர் தமது கூற்றுப் பிசகி அரிச்சந்திரன் பொய்யன்
ஆனால், தாம் புலைச்சேரியில்
மண்டை ஓட்டில் பிச்சை புக்கு உண்டு திரிவதாக வஞ்சினம் உரைத்தார்.
விசுவாமித்திரரும் அப்படியே அரிச்சந்திரன் தாம் இயற்றும் சோதனைக்குத் தவிக்காமல் உறுதியாய்
நின்று மெய்யன் ஆனால், தமது செய் தவத்தில்
பாதியை இழந்து விடுவதாக வாக்குறுதி கூறினார். பிறகு, அவர் அதற்காகவே பூலோகத்திலிருந்த
அரிச்சந்திரனிடத்திற்கு வந்து அநேக மாயச் சூதுகள் செய்து, அவனைப் பொய்யனாக்க முயன்றார். முயன்றும்
பயனின்றித் தமது அருந்தவத்தில் பாதியை அவ் அரிச்சந்திரற்கே வழங்கி, வசிட்டர் முன்னிலையில் தமது சீரும்
சிறப்பும் குன்றி நின்றார். விசுவாமித்திரர் முன் பின் எண்ணாமல் வசிட்டரிடத்தில்
அரிச்சந்திரனைப் பற்றி வீண் வார்த்தைகள் பேசி விவேக சூனியராய் விளங்கினமையும், செய்தவத்தின் சூரும் சிறப்பும் இழந்தமையும்
உலகப் பிரசித்தம்.
பல்லார்
முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும்
எள்ளப் படும்.
என்பதையும்
ஒப்பிடுக.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
நா
அன்றோ நட்பு அறுக்கும், தேற்றம் இல் பேதை
விடும்
அன்றோ வீங்கிப் பிணிப்பின், அவாஅப்
படுமன்றோ
பன்னூல் வலையில், கெடும் அன்றோ
மாறுள்
நிறுக்கும் துணிபு. --- நான்மணிக்கடிகை.
இதன்
பதவுரை ---
நா நட்பு அறுக்கும் அன்றோ --- பதறிப் பேசும்
நாக்கு நேசத்தைக் கெடுக்குமல்லவா; வீங்கிப் பிணிப்பின் தேற்றம் இல் பேதை விடும்
அன்றோ --- வற்புறுத்துக் கட்டாயப்படுத்தினால் தெளிவில்லாத அறிவிலி, - நற்செய்கையையும் கைவிடுவான் அல்லவா; பல நூல் வலையின் அவா படும் அன்றோ --- பல
அறிவு நூல்கள் என்னும் வலையினால் அதன்கண் அகப்பட்ட
நன்மாணாக்கரது தீய அவா கெட்டு ஒழியும்
அல்லவா; மாறுள் நிறுக்கும்
துணிபு கெடுமன்றோ --- பகைமைக்கண் ஒருவன் வைக்குந் துணிவு
எண்ணத்தால அவன் விரைவில் கெட்டுவிடுவான் அல்லவா?
பதறிய நாக்கினால் நட்புக் கெடும்; கட்டாயப் படுத்தினால் தெளிவில்லாத பேதை
மக்கள் நற்செய்கைகளைக் கைவிடுவர்;
நூல்களைப்
பயில்வதால் மாணாக்கர்க்கு அவாக் கெடும்; பகைமைக்கண்
துணிவு நிறுத்துதல் அங்ஙனம் நிறுத்துவானுக்கே கேடாம்.
செந்நீரார்
போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார்
போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர்
அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின்
தண்ணீர் தெளித்து. --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும் ---
செம்மையான தன்மை உடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தம் காரியம் சிதையுமாறு
நினைக்கின்றவர்களுக்கும், பொய் நீரார் போன்று
பொருளை முடிப்பார்க்கும் --- பொய்ம்மையான தன்மை உடையாரைப் போன்று தோன்றி தாம்
நினைத்த செயலை முடிக்கின்ற உள்ளம் உடையார்க்கும், வெந்நீரில் தண்ணீர் தெளித்து --- மிக்க
வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல, அந் நீர் அவரவர்க்கு தக்காங்கு --- அந்த
இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம், ஒழுகுப --- ஒழுகுவார்கள் காரியத்தில்
கண்ணுடையார்.
காரியத்தில் கண்ணுடையார் நல்லவர்களுக்கு
நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத்
தீயாரைப் போலவும் இருந்து தம் கருத்தை நிறைவேற்றுவார்.
உள்ளத்தில் கரவு உடையாரிடத்தில் நாமும்
அவரினும் மிக்க கரவு உடையாராகவே இருத்தல் வேண்டும். அவரிடத்தில் செம்மையுடையராக ஒழுகின், அவர்கள் தாம் உள்ளுறச் செய்த இடையூறுகள்
இவ்ர் அறியுமாறு இல்லையே என்று தாம் ஏமாற்றியதற்கு மகிழ்வது அல்லது, நமது செம்மை கண்டு திருந்துதல் இலர்.
ஆகவே, அவரினும் தாம் கரவு உடையார்
என்பதை அவர்க்குக் காட்டினால் அன்றி,
நாம் நினைத்த காரியம் முடிவு பெறாது என்பதாம்.
உள்ளத்தில் அன்புடையராய்த் தமது செயலை
முடிப்பார்க்குத் தாமும் அவரே போல் உள்ளன்பு கொள்ளல் வேண்டும். தமது செயலை
முடிப்பாரிடத்தில் தாம் அன்பு இல்லாதார் போன்று ஒழுகவே, அன்பைப் பெறும்பொருட்டு நமது
காரியத்தில் கண்ணுடையவராக இருப்பர் எனின், அவ்வன்பின்மை அவர் முயற்சியைக்
குறைக்குமேயன்றி ஊக்கந்தராது என்பதாம். ஆகவே, அன்புடையாரிடத்தில் அவரே போன்று ஒழுகுக.
வெந்நீரில் தண்ணீர் கலந்து பதமாக்கிக் கொள்ளுதல் போல, அவரவர்க்குத் தக்கவாறு ஒழுகிக் காரியம்
கொள்க என்பதாம்.
No comments:
Post a Comment