திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
16 - பொறை உடைமை
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறள், "சான்றாண்மை
என்னும் பெருந்தன்மை தன்னிடத்தில் இருந்து நீங்காமையை ஒருவன் விரும்புவான் ஆயின், பொறுமை உடைமையை
அவன் தவறாமல் காத்து ஒழுகவேண்டும்" என்கின்றது.
நிறை உடைமை எனப்படுவது, நல்ல குணங்கள் எல்லாம் முழுமையாகப்
பொருந்தி இருத்தல்.
"கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார்
இடர் களையாய், நெடுங்களம்
மேயவனே" என்னும் திருஞானசம்பந்தப் பெருமானார் அருள்வாக்கை எண்ணுங்கால், நிறையுடைமை
உடையவர்க்கு இடர் வராமல் இறைவன் காத்து அருள் புரிவான் என்பது தெளிவாகும்.
இறைநெறியில் நின்றார், பிறர்க்குத் துன்பம் செய்யார்.
நிறையுடைமையில் நீங்கியவர், இறைநெறியில் நீங்கியவர் ஆவார்.
திருக்குறளைக்
காண்போம்....
நிறைஉடைமை
நீங்காமை வேண்டின் பொறை உடைமை
போற்றி
ஒழுகப் படும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
நிறை உடைமை நீங்காமை வேண்டின் --- ஒருவன்
சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்;
பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும் --- அவனால்
பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
(பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை
என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி
வெண்பா" என்னும்
நூலில் இருந்து ஒரு பாடல்....
மன்னவனால்
தன்னைஒறுப் பித்தும் அருவாவசுதன்
முன்னவனைக்
காத்தான், முருகேசா! - உன்னும்
நிறையுடைமை
நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி
ஒழுகப் படும்.
இதன்
பதவுரை ---
முருகேசா! --- முருகப் பெருமானே! அருவாவசு --- அருவாவசு என்பவன், மன்னவனால் தன்னை ஒறுப்பித்து ---
அரசனால் தனக்கு ஒறுத்தலை உண்டாக்கிக் கொண்டு, தன் முன்னவனைக் காத்தான் --- தன்னுடைய
தமையனைத் துன்பத்திலிருந்து விடுபடச் செய்தான். உன்னும் --- எண்ணுகின்ற, நிறையுடைமை --- நிறை
உடையவனாக இருக்கும் தன்மை, நீங்காமை வேண்டின் ---
தன்னைவிட்டு நீங்காமல் இருத்தலை விரும்பினால், பொறை உடைமை --- பொறுமையை, போற்றி ஒழுகப்படும் --- பாதுகாத்து
நடக்கவேண்டும்.
அருவாவசு என்பவன் அரசனால் தனக்கு
ஒறுத்தலை உண்டாக்கிக் கொண்டு, தன்னுடைய தமையனைப்
பாதுகாத்தான். ஒருவன் நிறைந்த நன்மை
உடையவனாக இருத்தலை விரும்பினால் பொறுமையை மேற்கொண்டு நடக்கவேண்டும் என்பதாம்.
அருவாவசு கதை
பிருகத்துய்மன் என்னும் அரசன் இரயிப்பிய
முனிவருடைய மக்களாகிய பராவசு அருவாவசு என்னும் இருவரைக் கொண்டு வேள்வி ஒன்றைச்
செய்தான். அவர்கள் இருவரும் அவ் வேள்வியை முறைப்படி செய்துகொண்டு
இருந்தார்கள். ஒருநாள் மாலையில் மூத்தவனாகிய
பராவசு என்பவன் தன் தந்தையின் இருப்பிடத்திற்குச் சென்றான். அப்பொழுது இரயிப்பிய
முனிவராகிய தந்தை குளிரின் பொருட்டு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு ஒரு மூலையில்
இருந்தார். புலி வந்து பதுங்கி
இருக்கிறதென்று மாறுபட எண்ணித் தடியை ஓங்கித் தலைமேல் அடித்தான். அவ் அடிக்கு
ஆற்றாத முனிவர் விழுந்து மாண்டார். பராவசு மாண்டது தன்னுடைய தந்தை என்று
உணர்ந்தான். செய்யவேண்டிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தான். பிறகு தன்னுடைய
தம்பியிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறினான். தந்தையைக் கொன்றதற்குக் கழுவாய் செய்தல்
வேண்டும். ஒப்புக் கொண்டிருக்கிறபடியால் அரசனுடைய வேள்வியையும் முடித்தல்
வேண்டும். என்னுடை பழியை ஏற்றுக் கொண்டு கழுவாய் தேடினால், நான் மட்டும் தனியே
வேள்வியைச் செய்து முடித்துவிடுகிறேன் என்று சொன்னான். அருவாவசு தன் தமையன்
கூறியதற்கு உடன்பட்டான். கழுவாயின் பொருட்டுக் காட்டிற்குச் சென்று பன்னீராண்டுகள்
தவம் செய்து பின்னர் வேள்விச் சாலையை அடைந்தான். பராவசு தன் தம்பியாகிய அருவாவசுவை
வஞ்சிக்க எண்ணினான். அரசனைப் பார்த்து, தந்தையைக்
கொன்ற இவன் இங்கிருந்தால் வேள்வி பலிக்காது என்று சொன்னான். அரசன் கொலை புரிந்தவன்
எவன் என்று தெளியாமல் அருவாவசுவை நீக்கினான். அருவாவசு வேறு காட்டை அடைந்து
கதிரவனை வழிபட்டுத் தந்தை உயிர்பெற்று எழச் செய்தான். தமையனையும் சேதுவில் நீராடச் செய்து
தூய்மைபடுத்தி உடன் வாழ்ந்தான். அருவாவசு பழியேற்ற தன்மை, தமையன் செய்த குற்றத்தைப் பொறுத்தமை
முதலியவற்றைப் பலரும் பெரிதும் பாராட்டினார்கள்.
பொறுமையுடன்
அறிவுடையார் இருந்தஇடம்
விளக்கேற்றிப் புகுத
வேண்டும்,
கெருவம் உள்ளார் அகந்தையுடன் இறுமாந்து
கெருவம் உள்ளார் அகந்தையுடன் இறுமாந்து
நடந்து தலை கீழா
வீழ்வார்,
வறுமையினும் மறுமையினும் காணலாம்,
வறுமையினும் மறுமையினும் காணலாம்,
தண்டலையார் வாழும் நாட்டில்
நிறைகுடமே தளும்பாது, குறைகுடமே
நிறைகுடமே தளும்பாது, குறைகுடமே
கூத்தாடி நிற்பதாமே.
--- தண்டலையார் சதகம்.
இதன்
பதவுரை ---
தண்டலையார் வாழும் நாட்டில் --- திருத்தண்டலை ஈசர் எழுந்தருளி இருக்கும்
நாட்டில்,
பொறுமையுடன்
அறிவுடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் --- பொறுமையும் அறிவும்
உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச் சென்று காணவேண்டும்!, கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து
நடந்து தலைகீழாய் வீழ்வர் --- செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து தலைதடுமாறி அழிவார்கள்; வறுமையினும் மறுமையினும் காணலாம் ---
வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம்; (எப்போதும் ஒரு மாதிரியே
இருப்பர்), நிறைகுடமோ தளும்பாது ---
நீர் நிறைந்தகுடம் எனிலோ தளும்புவதும் செய்யாது; குறை குடமே கூத்தாடி நிற்பது ஆம் ---
நீர் குறைந்த குடந்தான் கூத்தாடி நிற்கும்.
நிறை
உடைமை, நீர்மை உடைமை, கொடையே,
பொறை
உடைமை, பொய்ம்மை புலாற்கண்
- மறையுடைமை,
வேய்அன்ன
தோளாய்! இவை உடையான் பல்லுயிர்க்கும்
தாய்
அன்னன் என்னத் தகும். --- ஏலாதி
இதன்
பதவுரை ---
வேய் அன்ன தோளாய் --- மூங்கிலை ஒத்த தோள்களை
உடைய பெண்ணே, நிறை உடைமை ---
நெஞ்சடக்கம் உடைமையும், நீர்மை உடைமை ---
நல்லியல்பு உடைமையும், கொடை (உடைமை)யே ---
வறியார்க்கு ஒன்று கொடுத்தல் உடைமையும், பொறை
உடைமை --- பிறர் தனக்குத் தீங்கு செய்யுங்கால் பொறுத்தல் உடைமையும், பொய்ம்மை --- பொய் கூறுதலிலும், புலாற்கண் --- ஊன் உண்ணுதலிலும், மறை உடைமை --- மறுத்தல் உடைமையும், இவை உடையான் --- என்று கூறப்படும் இந்த
நல் இயல்புகளை உடையவன், பல் உயிர்க்கும் ---
பலவகைப்பட்ட எல்லா உயிர்களுக்கும்,
தாய்
அன்னன் என்னத் தகும் --- தாயை ஒத்தவன் என்று புகழ்தற்கு உரியவன் ஆவான்.
மூங்கிலை ஒத்த தோளை உடையவளே! புலன்வழி
போகாது தன் மனதை நிறுத்தல் உடைமையும், நற்குணம்
உடையனாதலும் ஈதலும் பொறுமையோடு இருத்தலும், பொய்கூற விடாது தன்னை அடக்குதலும், ஊன் தின்னவிடாது தன்னை அக்குதலும் ஆகிய
இவ்வாறும் பொருந்திய ஒருவன், பல உயிர்கட்கும் தாயினைப்
போலும் அன்பினை உடையவன் என்று யாவரும் சொல்லத் தகுந்தவன் ஆவன்.
'பெருமையும் வண்மை
தானும்,
பேர் எழில் ஆண்மைதானும்,
ஒருமையின்
உணர நோக்கின்,
பொறையினது ஊற்றம் அன்றே!
அருமையும், அடர்ந்து நின்ற
பழியையும் அயர்ந்தாய் போல
இருமையும்
கெடுக்கல் உற்றாய்;
என் நினைந்து, என் செய்தாய் நீ! --- கம்பராமாயணம், மகுடபங்கப் படலம்.
இதன்
பதவுரை ---
ஒருமையின் உணர நோக்கின் --- மனத்தை ஒருமுகமாக்கி
உணர்ந்து
பார்த்தால்; பெருமையும் வண்மை தானும்
--- பெருமைப் பண்பும் வண்மைக் குணமும்; பேர் எழில் ஆண்மை தானும் --- பேரழகுடைய வீரப் பண்பும்; பொறையினது ஊற்றம் அன்றே
--- பொறுமையெனும் (பெரும்)
பண்பிலிருந்து சுரப்பனவேயன்றோ? அருமையும் --- உன்னுடைய
அருமையினையும்; அடர்ந்து நின்ற பழியையும் --- (உன் செயலால்) நெருங்கி வந்த
பழியினையும்; அயர்ந்தாய் போல --- (நீ
) மறந்தாய் போலும்! இருமையும் கெடுக்கல் உற்றாய் ---
இம்மை, மறுமை எனும் இரண்டினையும் கெடுக்க இருந்தாய்; நீ என் நினைந்து என் செய்தாய் --- நீ என்ன நினைத்து என்ன செய்துவிட்டாய்?
‘நிறையின் நீங்கிய மகளிர்
நீர்மையும்,
பொறையின்
நீங்கிய தவமும், பொங்கு அருள்
துறையின்
நீங்கிய அறமும், தொல்லையோர்
முறையின்
நீங்கிய அரசின் முந்துமோ? --- கம்பராமாயணம், திருவடி சூட்டு படலம்.
இதன்
பதவுரை ---
நிறையின் நீங்கிய --- கற்பு நெறியிலிருந்து விலகிய; மகளிர் நீர்மையும் --- பெண்களின் தன்மையும்; பொறையின் நீங்கிய தவமும் --- பொறுமையில் இருந்து விலகிய
தவ ஒழுக்கமும்; பொங்கு அருள் துறையின் நீங்கிய --- விளங்குகின்ற கருணை வழியிலிருந்து
விலகிய; அறமும் --- தருமமும்; தொல்லையோர் --- முன்னோர்களது; முறையின் நீங்கிய --- முறைமையிலிருந்து விலகிய; அரசின் --- அரசாட்சியைக்
காட்டிலும்; முந்துமோ --- (கொடுமையில்
முற்படுமோ? (முற்படாது என்றபடி)
அரசு முறைமையில் தவறுதல், மற்றவற்றைக் காட்டிலும்
பெருங்கேடு பயப்பது.
வீமன்
கதைமேல் கைவைக்க,
விசயன்சிலைமேல் விழிவைக்க,
தாமம்
புனைதோள் இளையோரும்
தத்தம் கருத்தில் சினம் மூட்டத்
தூமம்
படுசெந் தழலவியச்
சோனைமேகஞ் சொரிவதுபோல்
நாமம்
தருமன் எனத்தக்கோன்
இளையோர் ஆற நவிலுற்றான். --- வில்லிபாரதம், சூதுபோர்ச்சருக்கம்.
இதன்
பதவுரை ---
(திரௌபதியைத் துச்சாதனன் அலங்கோலமாக இழுத்து வருவதைக்
கண்டபோது),- வீமன் கதைமேல் கை வைக்க
--- வீமசேனன் (தனது சத்துருக்காதினி
என்னுங்) கதாயுதத்தின்மேற் கையை வைக்கவும், விசயன் சிலைமேல் விழி வைக்க --- அருச்சுனன், (தனது காண்டீவம் என்னும்) வில்லின்மேல் நோக்கம் வைக்கவும்,- தாமம் புனை தோள் இளையோரும் --- மலர்
மாலையணிந்த தோள்களை உடைய மற்றைத் தம்பியராகிய நகுல சகதேவர்கள் இருவரும், தம் தம் கருத்தில் சினம்
மூட்ட --- தம் தம் மனத்திலே கோபத்தை மிகுதியாகக் கொள்ளவும்,- தூமம் படு செம் தழல் அவிய சோனை
மேகம்
சொரிவதுபோல் --- புகையமைந்த சிவந்த அக்கிணி தணியுமாறு விடாப் பெருமழையை மேகங்கள் பொழிவதுபோல, நாமம் தருமன் என தக்கோன் --- தருமன் என்று பெயர் கூறத்தக்க தகுதியை உடையவனாகிய
(அவர்களது மூத்தோனான)
யுதிஷ்டிரன், இளையோர் ஆற --- அந்தத்
(தனது) தம்பியர் நால்வரும்
(மனத்திற்) சினந்தணியும்படி, நவில் உற்றான் --- சொல்லத் தொடங்கினான்.
வீமன் கதைமேல் கையை வைத்ததும், விசயன் சிலைமேல் கையை வைத்ததும் - திரௌபதிக்குப் பெருந்தீங்கு இழைத்த பகைவரை
அவற்றால் அழிப்போம் என்று குறிப்பித்தது. மற்றை நால்வரைப் போலவே தானும் சினங்கொள்ள வேண்டிய இச்சமயத்திலும் தருமபுத்திரன் தான்
பொறுத்ததோடு நில்லாமல், மற்றையோரையும்
பொறுப்பித்து இவ்வாறு தரும குணத்தை மேற்கொண்டிருத்தலால், 'நாமம் தருமன் எனத் தக்கோன்' என்றார்; தழலைச் சோனைமாரி சொரிந்து தணிப்பது போலத் தம்பிமாரது
சினத்தைத் தருமனது சாந்தமொழிகள் தணித்து
அடக்கும் என்க.
தேம்போது
அனைத்து மெய்சாயும்,
சிலபோது அலரும், சிலபோது
வேம்போது
அங்கு வாழ்வ எலாம்
வெங்கான் உடனே வேவாவோ?
ஆம்போது
ஆகும், அது அன்றி
ஆயபொருள்கள் அம்முறையே,
போம்போது
அனைத்தும் போம், முன்னம்
பொறுத்தீர், இன்னம் பொறும் என்றான். --- வில்லிபாரதம், சூதுபோர்ச்சருக்கம்.
இதன்
பதவுரை ---
(தருமன் தனது தம்பியரை நோக்கி),- 'தேம்போது அனைத்தும் ---
தேன்பொருந்திய (மற்றை) மலர்களெல்லாம், மெய்சாயும்
--- வாடிக்கிடக்கின்ற, சிலபோது --- சில சமயங்களிலே, சிலபோது --- சில சாதி மலர்கள், அலரும் --- மலர்வனவாய் இருக்கும்; [அது போலவே நாமெல்லோரும் வருந்தும் இச்சமயத்தில் துரியோதனாதியர்கள் மகிழ்கின்றார்கள்]; (ஆயினும்),- ஆம் போது
ஆகும் --- நல்வினை பலிக்கும்பொழுது (பொருள்கள் தாமே) வந்து சேரும்; வெம் கான் வேம் போது --- கொடிய காடு தீப்பற்றி
எரியும் பொழுது, அங்கு வாழ்வ எலாம் ---
அவ்வனத்தில் வாழ்கின்ற பிராணிகளெல்லாம், உடனே வேவாவோ --- அக் காட்டோடு ஒரு சேர அழிந்து
விடுமன்றோ! அம் முறையே ---
அம்முறையிலே, அது அன்றி --- உண்டாகும் போது உண்டாவதல்லாமல், ஆய பொருள்கள் போம் போது --- அங்ஙனம் உண்டாகிய
பொருள்கள் (தீவினைப் பயனால்) அழியவேண்டிய
காலத்தில், அனைத்தும் போம் --- எல்லாம் போய் விடும்; (ஆகையால்), முன்னம் பொறுத்தீர் --- முன்பு பல சமயங்களிற் பொறுத்திருந்தீர்கள்:
இன்னம் பொறும் --- இன்னும் சிறிது காலம் (நமக்கு நல்லகாலம் வரும் வரையில்) பொறுத்திருங்கள், என்றான் --- என்று கூறித் தேற்றினான்.
நாமும், நமக்காக உலகத்தார் பலரும்
வருந்துகிற இச் சமயத்தில், பகைவர்களாகிய துரியோதனாதியர்
முகமலர்ந்து மனங்களிப்பது இயல்பே. ஆகூழினால் வளரும் தன்மை
உடைய பொருள்கள் எல்லாம் போகூழ் வருங்காலத்தில் இருந்த
இடம் தெரியாது அழிந்து ஒழிந்துவிடுதல் திண்ணமே; ஆகவே, துரியோதனாதியர் இப்பொழுது நல்லகாலம் இருந்து
மேன் மேல் வளர்வாரானாலும், விரைவிலேயே போங்காலம்
நேர்ந்து பொன்றி விடுவார்கள்: அங்ஙனம் அவர்கட்கு அழிவு
காலம் நேர்கிற வரையில் நாம் பொறுத்திருக்க வேண்டும்
என்றவாறாம். நான் துன்பம் அனுபவிக்கின்றபோது என்னைச் சேர்ந்தவர்களாகிய நீங்களும் துன்பம்
அனுபவிக்கின்றீர். கங்கையில்
கழுமரம் நாட்டியும் விஷம் ஊட்டியும்
வீமனைக் கொல்லத் துணிந்த காலத்திலும், அரக்கு
மாளிகையில் இட்டுப் பாண்டவர்களை எல்லாம் கொல்லத் துணிந்த காலத்திலும், மற்றும் பல சமயங்களிலும் பொறுத்தார்களாதலால்
'முன்னம் பொறுத்தீர்' என்றும் "காலம் கருதி இருப்பர் கலங்காது, ஞாலங் கருதுபவர்" என்றபடி தாம் வெல்லுதற்கு ஏற்ற காலம் வாய்க்குமளவும், அதனை எதிர்பார்த்துப் பொறுத்திருக்க வேண்டுமென்பது
அரசநீதியாதலால், 'இன்னம் பொறும்' என்றும் தருமன் கூறினான்.
No comments:
Post a Comment