திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
16 - பொறை உடைமை
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம்
திருக்குறள், "ஒருவனுக்கு
வறுமையிலும் வறுமையாவது, விருந்தினரை ஏற்காமல் நீங்குதல் ஆகும்.
வலிமையிலும் வலிமையாவது, அறியாமையில் தனக்குப் பிறர் செய்யும் தீமையைப்
பொறுத்துக் கொள்ளுதல் ஆகும்" என்கின்றது.
ஈட்டிய ஒண்பொருளைக் கொண்டு, ஐம்பெரும் வேள்விகளுள் ஒன்றான
விருந்தோம்பலைச் செய்ய வேண்டியது இல்லறத்தான் கடமை. "உடமையுள் இன்மை
விருந்தோம்பல் ஓம்பா மடமை" என்று ஒன்பதாம் அதிகாரத்தில் நாயனார் முன்னே
குறித்தார். எனவே, விருந்தோம்பலின் இன்றியமையாமை உணரப்படும். விருந்தோம்பல் ஆகிய
அறத்தைச் செய்யாத பொருள் பயன்றறது ஆகிவிடும்.
இதனால் விருந்தை விலக்குவதின் மேம்பட்ட
வறுமையும், பிறர் செய்த
குற்றத்தைப் பொறுத்தலின் மேம்பட்ட வலிமையும் இல்லை எனப்பட்டது.
திருக்குறளைக்
காண்போம்...
இன்மையுள்
இன்மை விருந்து ஒரால், வன்மையுள்
வன்மை
மடவார்ப் பொறை.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் -
ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்;
வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை ---
அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.
[இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத
விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப்
பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.]
அறிவு
எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்... --- கலித்தொகை.
தெரியா
தவர்தம் திறன்இல் சொல் கேட்டால்
பரியாதார்
போல இருக்க - பரிவுஇல்லா
வம்பலர்
வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம்
தாழ்க்கூட்டு வார். --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
தெரியாதவர் தம் திறனில் சொல் கேட்டால் ---
அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால், பரியாதார் போல இருக்க ---
துன்புறாதவர்களைப் போல் பொறுத்திருக்க, பரிவு
இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே --- (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை
அடக்கப் புகுவார்களோ? இல்லை, (புகுவரேல்) அம்பலம் தாழ்க் கூட்டுவார் ---
பொது இடத்தைத் தாழ் இடுவாரோடு ஒப்பார்.
அறியார் தமது அறிவின்மையைப்
புலப்படுத்துகின்றார் என்று தெளிதல் வேண்டும். அவர் கூறும் சொற்களுக்காக
வருந்துதல் கூடாது. பொது இடத்தினை எவ்வாறு ஒருவன் தாழிட முடியாதோ, அதுபோல, பிறர் வாயை மூடுவதும்
இயலாதது என்பதை அறியவேண்டும்.
ஆய்ந்த
அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்(து)
எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - தீந்தேன்
முசுக்குத்தி
நக்கும் மலைநாட! தம்மைப்
பசுக்குத்தின்
குத்துவார் இல். --- பழமொழி நானூறு.
இன்
பதவுரை ---
தீம் தேன் முசு குத்தி நக்கும் மலைநாட! ---
இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து (ஒழுகும் தேனை) நக்குகின்ற மலைநாடனே!, பசு குத்தின் குத்துவார் இல் --- பசு
தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை, (ஆதலால்) ஆய்ந்த அறிவினர் அல்லாதார்
புல்லுரைக்கு --- ஆராய்ந்த அறிவினை உடையரல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற
சொற்களுக்கு, கற்றறிந்தார்
காய்ந்து எதிர் சொல்லுபவோ --- நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து
எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ?கூறார்.
ஆராய்ச்சி இல்லாதவர்கள் கூறும் அற்பச்
சொற்களைப் பொருளாகக் கொண்டு கற்றறிந்தார் சினத்தல் கூடாது.
எள்ளிப்
பிறர் உரைக்கும் இன்னாச்சொல்,
தன்செஞ்சில்
கொள்ளி
வைத்தாற்போல் கொடிது எனினும், -
மெள்ள
அறிவு
என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின்,
பிறிது
ஒன்று வேண்டா தவம். --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல் --- தன்னைப்
பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல். கொள்ளி வைத்தாற் போல் ---நெருப்பினாற்
சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது
எனினும் ---தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவு என்னும் நீரால் --- அறிவாகிய
நீரால், மெள்ள-அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின் --- அத்
துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம்
பிறிது ஒன்றும் --- வேறு தவம் ஒன்றும், வேண்டா
--- செய்ய வேண்டுவதில்லை.
மாற்றாராய்
நின்றுதம் மாறு ஏற்பார்க்க் ஏலாமை
ஆற்றாமை
என்னார் அறிவுடையார், - ஆற்றாமை
நேர்த்து
இன்னா மற்றவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து
இன்னா செய்யாமை நன்று. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ---
தமக்குப் பகைவராயிருந்து அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் ---
தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று
சொல்லி இகழமாட்டார்கள்; ஆற்றாமை நேர்த்து
இன்னா மற்று அவர் செய்தக்கால் --- தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல்
எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை
நன்று --- தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.
தமக்குத் துன்பம் செய்தவர்களுக்குத்
தாமும் துன்பம் செய்வது ஆற்றல் அல்ல; அவற்றைப் பொறுத்து, துன்பம் செய்யாமையே
ஆற்றல் ஆகும்.
No comments:
Post a Comment