திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
21 - தீவினை அச்சம்
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறள், "ஒருவன் மறந்தும்
கூடப் பிறன் ஒருவனுக்குக் கேட்டினை எண்ணாது இருப்பானாக. எண்ணினால், அப்படி
எண்ணினவனுக்குக் கேட்டினை அறக்கடவுளே எண்ணும்" என்கின்றது.
ஒருவன் மற்றொருவனுக்குக் கேட்டினைத் தரும்
செயலைச் செய்ய எண்ணுகின்ற அப்பொழுதே, அறக்கடவுளும்
உடனே அவனுக்குக் கேட்டினைச் செய்ய எண்ணும் என்றபடி.
இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும்
என்றது, பிறனுக்குக் கேட்டைத்
தரும் வினையைச் செய்ய எண்ணின இவன், பிறனுக்குத் தீவினையைச் செய்வது இடையூறு காரணமாக
நிறைவேறாது போயினும் அல்லது நிறைவேற்றக் காலம் தாழ்க்கும் ஆயினும், அறக்கடவுள்
அவனுக்குக் கேட்டைத் தரும் வினையைச் செய்வது தவறாது உடனே நிறைவேறும் என்பது. எனவே, தீவினையை
மனத்தாலும் நினைத்தல் கூடாது.
திருக்குறளைக்
காண்போம்...
மறந்தும்
பிறன் கேடு சூழற்க, சூழின்
அறம்
சூழும் சூழ்ந்தவன் கேடு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பிறன் கேடு மறந்தும் சூழற்க ---
ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக,
சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் ---
எண்ணுவானாயின், தனக்குக் கேடு
பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.
('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும்
உடன் சூழ்தலின், இவன் பிற்படினும்
அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல்.
தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
தையலார்
கற்பு அழியச் சார்வானை, மாமதுரைத்
தெய்வமே
சென்று ஒறுக்கும் செய்தியால், --- நொய்தின்
மறந்தும்
பிறன் கேடு சூழற்க, சூழின்
அறம்
சூழும் சூழ்ந்தவன் கேடு.
சித்தன் என்றவன் சிவபக்திச் செல்வரான
ஒரு வயோதிகப் பணிக்கரிடம், சில பகல் மாணவனாக இருந்து, பிறகு அவருக்கு விரோதமாகப் பல
மாணவர்க்கு யுத்த முறையைக் கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டு, அவர் பிழைப்பைக் கெடுத்தது அன்றி, அவருடைய மனைவியையும் இச்சித்தான்.
சோமசுந்தரக் கடவுள் அதனைப் பொறாதவராகி, முதிய
பணிக்கர் வேடம் பூண்டு, சித்தனை வலிந்து
சண்டைக்கு இழுத்து, அவனுடைய அங்கங்களை
வேறு வேறாக வெட்டி வீழ்த்தினர் என்பது, திருவிளையாடல்
புராணம், அங்கம் வெட்டின படலம்
கூறும்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி
வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
குற்றொருவர்க்
கூறைகொண்டு கொன்றதுஇம்மை யேகூடல்
சொற்றதுகை கண்டோமே, சோமேசா! - அற்றான்
மறந்தும் பிறன்கேடு
சூழற்க சூழின்
அறஞ்சூழும்
சூழ்ந்தவன் கேடு.
தீவினை அச்சமாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்களெல்லாம்
தொகுத்து விலக்குகின்றார்.
இதன் பதவுரை ---
சோமேசா! கூறைகொண்டு --- துணி மூட்டையைக் கவர்ந்துகொண்டு, ஒருவர் குற்று கொன்றது --- ஒருவரைக்
குத்திக் கொன்றதனால் உண்டாகிய பயன்,
இம்மையே
கூடல் --- இப்பிறப்பிலேயே வந்து பற்றிக் கொள்ளுதல் என்பது, சொற்றது --- "குற்றொருவரைக்
கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எல்லாம், செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே
வரும் திண்ணமே" என்று திருப்பாட்டில் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்தது, கைகண்டோம் --- உலக அனுபவத்தில் மெய்
எனவே தெரிந்துகொண்டோம்.
அற்றான் --- அத்தன்மை
உடைமையால், பிறன் கேடு மறந்தும்
சூழற்க --- (ஒருவன்) பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தாயினும் எண்ணாதொழிக, சூழின் --- அங்ஙனம்
எண்ணுவானாயின், சூழ்ந்தவன் கேடு அறம்
சூழும் --- (அவ்வாறு எண்ணிய) தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்
ஆகலான் என்றவாறு.
கேடு என்பன ஆகுபெயர்.
சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன்
பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக் கடவுள் எண்ணுதலாவது
அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.
குற்று
ஒருவ்வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவு
எலாம்,
செற்று
ஒருவ்வரைச் செய்த தீமைகள்
இம்மையே வரும்
திண்ணமே,
மற்று
ஒருவ்வரைப் பற்றி லேன்,மற
வாது எழுமட நெஞ்சமே,
புற்று
அரவ்வுடைப் பெற்றம் ஏறி
புறம்ப யம்தொழப்
போதுமே. ---
சுந்தரர் தேவாரம்.
இதன்
பொழிப்புரை
---
அறியாமையுடைய மனமே! பொருளைப் பறித்தல்
வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியால் குற்றி , அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத்
துணிந்த களவினால் ஆகிய பாவங்களும்,
முறையில்
நிற்கும் ஒருவரை முறையின்றிப் பகைத்து, அப்பகை
காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும், மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே
வந்து வருத்தும்; இது திண்ணம். ஆதலின், அவை போல்வன நிகழாது இருத்தற்கு உன்னை அன்றிப்
பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன்; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய
, இடப வாகனனது
திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவனை
நினைந்து புறப்படு.
பின்வரும் பாடல்கள் ஒப்புமையாக அமைந்தமை
காணலாம்...
வஞ்சித்து
ஒழுகும் மதியிலிகாள், யாவரையும்
வஞ்சித்தோம்
என்று மகிழன்மின், --- வஞ்சித்த
எங்கும்உளன்
ஒருவன் காணும்கொல் என்றுஅஞ்சி
அங்கம்
குலைவது அறிவு. --- நீதிநெறி விளக்கம்.
இதன்
பதவுரை ---
வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் --- (பொய்க்கோலம்
பூண்டு) பிறரை வஞ்சித்து நடக்கும் மதியீனர்களே!, யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின்
--- எல்லாரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம், வஞ்சித்த --- நீங்கள் வஞ்சித்தவற்றை, எங்கும் உளன் ஒருவன் காணும் என்று அஞ்சி
--- எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி, அங்கம் குலைவது -
(உங்கள்) உடல் பதறுவதே, அறிவு ---
(உங்களுக்கு) அறிவாகும்.
(க-து.) எங்கும் நிறைந்த இறைவன் அறியாத
செயல் யாதும் இல்லையாகையால் பிறரை வஞ்சித்தோம் என்று மகிழ வேண்டாம்.
தான்கெடினும்
தக்கார்கேடு எண்ணற்க, தன்உடம்பின்
ஊன்கெடினும்
உண்ணார் கைத்து உண்ணற்க, - வான்கவிந்த
வையகம்
எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு
இடைமிடைந்த சொல். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க ---
ஒருவன் தான் கெடுவதாயிருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச்
சான்றோர் கெடுதலை எண்ணாதிருக்கக்கடவன், தன்
உடம்பின் ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க --- தனது உடம்பின் தசை பசியால்
உலர்வதாயினும் நுகரத்தகாதவரது பொருளை நுகராமலிருக்க வேண்டும் ; வான் கவிந்த வையகமெல்லாம் பெறினும்
உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல் --- வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம்
முழுமையும் பெறுவதாயிருந்தாலும் தனது பேச்சின் இடையில் பொய்யொடு கலந்த சொற்களைச்
சொல்லாமல் இருப்பானாக.
விட்டனன்,இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்;
பட்டன, பொடிகள்ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன
பொறிகள்வீழத் துளங்கினர்,
அரக்கர்தாமும்;
கெட்டனர்வீரர், அம்மா! பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்?
--- கம்பராமாயணம், பொழில் இறுத்த படலம்.
இதன்
பதவுரை ---
இலங்கை தன்மேல் விட்டனன் --- பேர்த்தெடுத்த அம்
மண்டபத்தை) இலங்கை நகர் மீது வீசி
எறிந்தான்; (அதனால்) விண் உற விரிந்த
மாடம் --- வானத்தை அளாவும்படி பரவியிருந்த
மாளிகைகள்; பட்டன பொடிகள் ஆன-- - மோதப் பட்டனவாய்ப் பொடிகளாக உதிர்ந்தன; பாங்கு நின்ற பகுத்தன --- பக்கத்தில் நின்ற கட்டிடங்களும் பிளவுபட்டன; பொறிகள் வீழச் சுட்டன --- நெருப்புப் பொறிகள் விழுவதனால், பொருள்களை எல்லாம் சுட்டு எரித்தன; வீரர் அரக்கர் தாமும் துளங்கினர் கெட்டனர்
--- எதற்கும் கலங்காத அரக்கரில் உண்மையான வீரர்களும்
அழிந்தொழிந்தார்கள்; கேடு சூழ்ந்தார் பிழைப்பரோ? --- பிறர்க்குக் கேடு செய்தவர்கள் அந்தத் தீவினைப்
பயனை அனுபவியாது தப்புவார்களோ
? (தப்ப மாட்டார்கள்).
'ஈண்டு, இவ் அண்டத்துள் இராக்கதர்
எனும் பெயர் எல்லாம்
மூண்டு
வந்தது, தீவினை முன் நின்று முடுக்க;
மாண்டு
விழும் இன்று, என்கின்றது என் மதி; வலி ஊழ்
தூண்டுகின்றது' என்று, அடிமலர் தொழுது, அவன் சொன்னான்.
--- கம்பராமாயணம், மூலபல வதைப் படலம்.
இதன்
பதவுரை ---
அவன் --- வீடணன்; அடிமலர் தொழுது --- இராமபிரானின் திருவடி
மலரில் விழுந்து வணங்கி; இவ் அண்டத்துள் இராக்கதர்
எனும்
பெயர் எல்லாம் --- இந்த அண்டம் முழுவதிலும் இராக்கதர் என்று பெயர் கொண்ட கூட்டம் முழுவதும்; தீவினை முன்நின்று முடுக்க --- அவர்கள் செய்த, தீவினை முனைந்து நின்று விரைந்து உந்துவதால்; ஈண்டு --- இங்கே; மூண்டு வந்தது --- ஏற்பட்டு வந்து சேர்ந்திருக்கிறது; இன்று மாண்டு வீழும் என்கின்றது
என் மதி --- இன்றைக்கு இவ்
அரக்கர் சேனை முழுவதும் இறந்து விழும்
என்று
என் அறிவு சொல்கிறது; வலி ஊழ் தூண்டுகின்றது
--- வலிமையான் ஊழானது இங்கு
வந்து இறக்க அவர்களைத் தூண்டுகின்றது. என்று
சொன்னான்.
No comments:
Post a Comment