திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
அதிகாரம் 17 -
அழுக்காறாமை
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "பொறாமை என்று
சொல்லப்படும் ஒப்பு இல்லாத பாவியானவன், தன்னை உடையவனை, இம்மையில் செல்வத்தைக்
கெடுத்து,
மறுமையில்
நரகத்தில் செலுத்திவிடுவான்" என்கின்றது.
கொடிய செயல்களைச் செய்கின்றவனுக்குப் பாவி
என்று பெழர் வழங்குதல் உண்டு. கொடிய செயல்களைச் செய்த துரியோதனனை, பாவி துரியோதனன் என்பது வழக்கு.
திருக்குறளைக்
காண்போம்...
அழுக்காறு
என ஒரு பாவி, திருச் செற்று,
தீ
உழி உய்த்து விடும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அழுக்காறு என ஒரு பாவி --- அழுக்காறு
என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி;
திருச் செற்றுத் தீயுழி உய்த்துவிடும்
--- தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.
(பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற்
கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு
பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக்
கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும்
நூலில் வரும் ஒரு பாடல்...
மேருவுடன்
இகலி விந்தமலை வீறு அழிந்து
சேரும்
நிலன் ஊடே, சிவசிவா! - ஓரின்
அழுக்காறு
என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி
உய்த்து விடும். --- சிவசிவ வெண்பா.
வேத காலத்தில் மேரு மலைக்கும் விந்த மலைக்கும்
யார் உயர்ந்தவர் என்ற போட்டி இருந்தது. சூரியனையே மறைக்கும் அளவிற்கு விந்தமலை
மேருமலையை விட உயர்ந்து வளர்ந்த நின்றது. உலகம் முழுவதும் விந்திய மலையின் நிழலால்
சூழப்பட்டு சூரிய ஒளி விளங்காமல்
போய்விட்டது. திருக்
கயிலையில்
நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான்
கட்டளையிட்டார். இதனால், அகத்தியர் தெற்கே நோக்கிப் பயணித்தார்
அகத்தியர் செல்லும் வழியை மறித்து விந்திய மலை உயர்ந்து நின்றது. அகத்தியர் தான்
தென்திசை சென்று மீளும் வரையில் தாழ்ந்து இருக்குமாறு விந்திய மலையைப் பணித்தார்.
விந்திய மலையும் தனது செருக்கை விடுத்து,
அவருக்கு அடங்கி நின்றது. தென் திசை சென்ற அகத்தியர் மீள வடதிசைக்குச்
செல்லவில்லை. அதனால், விந்தியமலையானது, மேருமலையை விடத்
தாழ்ந்தே இருக்கலாயிற்று.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக
அமைந்திருத்தலைக் காணலாம்...
அவ்வித்து
அழுக்காறு உரையாமை முன்இனிதே;
செவ்வியனாய்ச்
செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித்தாம்
கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார்
விடுதல் இனிது. --- இனியவை நாற்பது.
இதன்
பதவுரை ---
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிது ---
மனக்கோட்டம் செய்து பொறாமைச் சொற்களைச்
சொல்லாமை மிக இனிது; செவ்வியனாய் சினம் செற்று கடிந்து வாழ்வு
இனிது --- மனக்கோட்டம் இல்லாதவனாய்
கோபத்தைப்
பகைத்து நீக்கி வாழ்வது இனிது; கவ்விக்கொண்டு தாம்
கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது --- மனம் அழுந்தி நிற்ப, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, அதற்கேற்ற சமயம் பார்த்து அபகரியரதவராய், அதனை மறந்து விடுதல் இனிது.
அவ்விய
நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர்
ஆக்கும் செயல் உண்டோ? - திவ்வியநல்
கந்தம்
பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம்
கெடுமோ கரை. --- நீதிவெண்பா.
இதன்
பொழிப்புரை ---
மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும்
சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ. அதுபோல, பொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை
நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா. இல்லை.
No comments:
Post a Comment