018. வெஃகாமை - 02. படுபயன் வெஃகி




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "ஒருவன் பிறன் ஒருவனுடைய பொருளுக்கு உரியவன் அல்லன் என்பது நடுவு நிலைமை.  நடுவு நிலையில் நில்லாமைக்கு நாணப்படுகின்றவர்கள், பிறர் பொருளை அபகரித்தலினால் தமக்கு வரும் பெரும்பயனை விரும்பி, பழிக்கு இடமான செயல்களைச் செய்யமாட்டார்" என்கின்றது.

     நடுவு நிலைமை உடையவர்கள்,  பிறர் பொருளை அபகரிப்பதால் வரும் பயனை விரும்பி, தீய செயல்களைச் செய்யமாட்டார்.

திருக்குறளைக் காண்போம்....

படுபயன் வெஃகி, பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---

     படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் --- பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்;

     நடுவு அன்மை நாணுபவர் --- நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர்.

      ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

பையாய் நிறைபொன் படுபயன் வெஃகிப் பழிப்படுவ
செய்யார் நடுவின்மை நாணுபவர் எனச் செப்பினரால்
மெய்யார் பயன் என்று உனைக்கொள்வர், வேறொன்றை வெஃகுவரோ?
மையார்கண் மாமங்கை மார்பா! தென் புல்லையில் வாழ் விண்டுவே.

இதன் பொழிப்புரை ---

     மை பொருந்திய திருக்கண்களை உடைய திருமகள் கேள்வரே! அழகிய திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் திருமாலே! பை நிறையக் கிடைக்கும் பொன்னால் வரும் பயனைக் கருதி, பிறர் பொருளை அபகரிப்பதால் வரும் தீய செயல்களை, நடுவு நிலையாளர் செய்யமாட்டர் என்று கூறப்பட்டு உளதால், உண்மைப் பயனாக  உன்னைக் கொண்டவர், வேறு ஒன்றை விரும்பமாட்டார்.

பையாய் நிறைபொன் - பை பையாக நிறைகின்ற பொன். மெய்யார் பயன் - உண்மையான பயன்.  மையார் - மை பொருந்திய. மாமங்கை - திருமகள். விண்டு - திருமால்.
    

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...


விழி பட, முதல்வர் எல்லாம் வெதும்பினர், ஒதுங்கி வீழ்ந்து
வழிபட, உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்,
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் வெஃகாப்
பழி பட வந்த வாழ்வை யாரே நயக்கற்பாலார்?
                                           ---  கம்பராமாயணம், நிகும்பலை யாகப் படலம்.

இதன் பதவுரை ---

     முதல்வர் எல்லாம் வழிபட வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து வழிபட --- (உலகினை இயக்கும்) முதன்மையுடைய கடவுளர்  யாவரும் தம் கண்ணின் பார்வைபட்ட அளவிலேயே (அச்சத்தால்) வெதும்பியவராகித் தரைமீது வீ்ழ்ந்து வணங்க;  உலகம் மூன்றும் அடிப்பட வந்தேனும் --- மூவுலக  ஆட்சியும் (தம்) அடிக்கீழ் வந்து பொருந்திற்றாயினும்;  அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா --- தோற்றுப் பின்னிடும் (தமது) சேனையினைப் (பின்னிடாது) பொறுத்துத் தாங்க வல்ல வீரர்கள் எக்காலத்தும் விரும்பாத;   பழிபடவந்த வாழ்வை யாவரே   நயக்கற்பாலார் --- பழி உண்டாக வந்த  (அடிமை) வாழ்வினை (மானமும் புகழும் நயக்கும்) யார்தான் விரும்புகின்றவராவார்?



நல்ல வெளிப்படுத்து, தீய மறந்துஒழிந்து,
ஒல்லை உயிர்க்குஊற்றங் கோல்ஆகி. - ஒல்லும்எனின்
மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக, மானத்தான்
ஆயின் அழிதல் அறிவு.    ---  சிறுபஞ்ச மூலம்.

இதன் பதவுரை ---

     (ஒருவன்) நல்ல வெளிப்படுத்து --- (பிறர் தனக்குச் செய்த) நல்லவற்றைப் பலர்க்கும் வெளியிட்டுச் சொல்லி, தீய மறந்து ஒழிந்து --- தீயவற்றை நினையாது அவற்றின் எண்ணத்தை விட்டு நீங்கி, ஒல்லும் எனின் --- தன்னால் இயலுமேயானால், உயிர்க்கு --- இடையூற்றுக்குட்பட்ட பிற உயிர்கட்கு, ஒல்லை --- விரைவில், ஊற்றங்கோல் ஆகி --- ஊன்றுகோல் போல் நின்று உதவி, பிறர் பொருட்கண் --- பிறர்க்குரிய பொருளில், மாயம் மாற்றுக --- வஞ்சனைச் செயலை நீக்குக, மானத்தான் ஆயின் அழிதல் அறிவு --- மானமுடையான் ஆனால், குற்றம் வந்த விடத்து உயிர் விடுதலே  அறிவு உடைமையாம்.

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்,
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்,
இல் இருந்து எல்லை கடப்பாளும், இம்மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.     --- திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     கொள்பொருள் வெஃகி குடி அலைக்கும் வேந்தனும் --- தான் கொள்ளுதற்குரிய பொருளை விரும்பி, - குடிமக்களை வருத்துகின்ற அரசனும்; உள்பொருள் சொல்லா சலம் மொழி மாந்தரும் --- உண்மை நிகழ்ச்சியைச் சொல்லாமல், பொய் சொல்லுகின்ற மனிதரும்; இல் இருந்து எல்லை கடப்பாளும் --- (ஒருவனுக்கு மனையாளாய்) வீட்டிலிருந்து (அவன் சொல், மனைவி என்னும் இரண்டின்) எல்லையை கடந்து நடப்பவளும்; இ மூவர் வல்லே மழை அருக்கும் கோள் --- ஆகிய இம் மூவரும் விரைந்து மழையைக் குறைக்கின்ற கோள்கள் ஆவர்.

         குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாது என்பது கருத்து.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...