020. பயனில சொல்லாமை - 01. பல்லார் முனிய





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை

     அறப்பொருள், செல்வப்பொருள், இன்பப்பொருள் ஆகிய மூன்று பொருள்களுள் ஒன்றின் பயனையும், தமக்கும் பிறர்க்கும் உதவாத சொற்களைச் சொல்லாது இருத்தலை இந்த அதிகாரம் குறிக்கும். வாக்கில் உண்டாகும் பாவங்கள் நான்கு என்பர். அவை, பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், கடும்சொல் சொல்லுதல், பயனில்லாத சொல்லைச் சொல்லுதல் என்பன. அவற்றுள் முதலில் கூறிய பொய் என்பது, நான் எனது என்னும் பற்று அற்று, மனத் துறவினை அடைந்த துறவிகளுக்கே நிச்சயமாக நீக்கக் கூடுமே அல்லாது, இல்லறத்தோரால் நீக்கமுடியாது. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி உண்டாவதாகிய பொய்யைத் துறவறத்தார்க்கு அல்லாது, இல்லறத்தார்க்கு முற்றும் ஒழித்தல் கூடாது. எனவே, அப் பொய்யினை ஒழிந்த மற்ற மூன்று வாக்கின் குற்றங்களையே இல்லறத்தார் ஒழித்தல் கூடும் என்றும், அம் மூன்றின் உள்ளும் குறளை என்னும் கோள் சொல்லுதலை, புறங்கூறாமை என்னும் அதிகாரத்தால் விக்கி விட்டார். கடுஞ்சொல்லை இனியவை கூறல் என்னும் அதிகாரத்தால் விலக்கி விட்டார். இவை இரண்டும் ஒழிந்து நின்ற "பயனில் சொல் சொல்லாமை" என்னும் வாக்கின் குற்றத்தை இந்த அதிகாரத்தால் விலக்குகின்றார்.

     கடும்சொல், பொய், புறங்கூறல், பயனில சொல் என்னும் இந்நான்கும் வாக்கின் அசுப கருமங்கள். வாக்கினால் பெரும்பான்மையும் அசுப கருமத்தைச் செய்தால், பறவை அல்லது மிருகமாய்ப் பிறக்கின்றான்" என்பது மனுதரும சாத்திரத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம்.

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத் தவர்.

என்பது ஆசாரக் கோவை.

இதன் பதவுரை ---

     என்றும் --- எக்காலத்தும், அசையாத --- ஒழுக்கத்தினின்றும் தவறாத, உள்ளத்தவர் --- மனம் உடையோர், படிறும்--- வஞ்சனைச் சொல்லையும், பயனிலவும் --- பயனற்ற சொல்லையும், பட்டி உரையும் --- நாவடக்கம் இல்லாத சொல்லையும், வசையும் --- பழிச்சொல்லையும், புறனும் --- புறங்கூறுதலையும், உரையார் - சொல்லார்.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "அறிவு உடையார் பலரும் கேட்டு வெறுக்கும்படியாக பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்,
எல்லாரும் எள்ளப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் --- அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், '

     எல்லாரும் எள்ளப்படும்  --- எல்லாரானும் இகழப்படும்.
        
       (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

இறைவர் மதலை எதிர் இசைவு கூறும்
வெறும் உரையால் சென்று கழு ஏறும் ---  பிறர்போல்
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

         இறைவர் மதலை --- சிவபரம்பொருளின் புதல்வராகிய முருகக் கடவுளின் அவதாரமாகிய திருஞானசம்பந்தர். எதிர் ---  மாறாக. இசைவு --- பந்தயம். வெறும் உரை --- பயனற்ற சொற்கள். 

     கூன் பாண்டியன் வெப்பு நோயால் வருந்தும்போது, திருஞானசம்பந்தர் அதனை நீக்க வந்தார். அச்சமயம் சமணர் அரசனது உடலின் ஒரு பாதியில் உள்ள நோயைத் தீர்ப்பதாகக் கூறி, அது முடியாதவராகிப் பின்னும் தங்கள் தங்கள் கொள்கைகளில் ஒன்றை எழுதிய ஏட்டைப் புனலிலும், கனலிலும் இட்டுச் சோதிக்க, திருஞானசம்பந்தரை வாதுக்கு இழுத்து, அவற்றிலும் தோற்றனர். தோற்றவர் கழு ஏறி மாய்தல் வேண்டும் என்ற பழைய ஒப்பந்தப்படி, அவர்கள் அப்பொழுது தாமாகவே கழு ஏறி மடிந்தார்கள் என்பது வரலாறு. அனல் வாதத்தில் தோற்ற சமணர்கள், 'இனிப் புனல் வாதம் செய்வோம், நமது சமய உண்மைகளை ஏட்டில் எழுதி, அவ்வேட்டை வைகையில் விடுவோம். எதிர் நோக்கி வரும் ஏடே பெருமை உடையது' என்றார்கள். 

என்று அமண் கையர் கூற, ஏறுசீர்ப் புகலி வேந்தர்,
'நன்று அது செய்வோம்' என்று அங்கு அருள்செய, நணுகவந்து
வென்றிவேல் அமைச்சனார்தாம், 'வேறு இனிச் செய்யும் வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது, ஒட்டியே செய்வது' என்றார்.

அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர்மேல் சென்று,
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆக,
தங்கள் வாய் சோர்ந்து, தாமே 'தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே' என்று சொன்னார்.

மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும், மலயமன்னன்,
'செற்றத்தால் உரைத்தீர்! உங்கள் செய்கையும் மறந்தீர்' என்றுஆங்கு 'பற்றிய பொருளின்ஏடு படர்புனல் வைகை ஆற்றில்
பொற்புஉற விடுவதற்குப் போதுவது'  என்று கூற,

         பின்னர் சமணர்கள் இட்ட ஏடு ஆற்றோடு சென்றது.  திருஞானசம்பந்தப் பெருமான் இட்ட ஏடு ஆற்றை எதிர்ந்து  சென்று வென்றது. வாதில் தோற்றார்கள் சமணர்கள். ஆகவே,

மன்னவன் மாறன் கண்டு, மந்திரியாரை நோக்கி,
'துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச்சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார்பால் அநுசிதம் முற்றச் செய்தார்,
கொல்நுனைக் கழுவில் ஏற முறை செய்க' என்று கூற,

புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும், சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவுஇலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகைஇலா வேந்தன் செய்கை விலக்கிடாது இருந்த வேலை.

பண்புஉடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைப் பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ஆயிரவரும் ஏறினார்கள்.

எனவரும் பெரியபுராணப் பாடல்களை எண்ணுக.

     மனத்தில் குரோதம் கொண்டு வாக்கினால் பயனில்லாத சொள்களைப் பேசியதால் சமணர்கள் தோற்றுக் கழுவில் ஏறினார்கள். பாண்டி நாட்டினர் யாவரும் அவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடியருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

கற்றும் பயனிலசொல் கன்னன்உரைத்து எஞ்ஞான்றும்
முற்றுபழி பூண்டான், முருகேசா! - உற்றுஉணரில்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, கன்னன் --- கன்னனானவன், கற்றும் --- பல நூல்களைக் கற்று உணர்ந்திருந்தும், பயனில் சொல் உரைத்து --- பயனில்லாத சொற்களைப் பேசி, எஞ்ஞான்றும் --- எப்பொழுதும், முற்று பழி பூண்டான் --- நிறைந்த பழியையே மேற்கொண்டவனானான்.  உற்று உணரில் --- ஆராய்ந்து பார்த்தால், பல்லார் முனிய --- பலரும் சினம் கொள்ளுமாறு, பயன் இல சொல்லுவான் --- பயனற்ற சொற்களைப் பேசுகிறவன், எல்லாரும் எள்ளப்படும் --- எல்லோராலும் இகழ்ந்து பேசப்பெறுவான்.

         கன்னன் பலநூல்களை ஓதி உணர்ந்தவனாக இருந்தும் பயனற்ற சொற்களை எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்த படியினாலே, நிறைந்த பழியையே மேற்கொண்டவனானான்.  எல்லாரும் சினமடையுமாறு பயனில்லாத சொற்களைப் பேசிக் கொண்டிருப்பவன், எல்லோராலும் இகழப் பெறுவான் என்பதாம். 
    
     முற்றுபழி --- நிறைந்து நின்ற பழி.

                          கர்ணன் (கன்னன்) கதை

         கன்னன் நூல்களைக் கற்றுணர்ந்து அறிவுடையவனாகச் சிறந்து திகழ்ந்தான். தானம் அளிப்பதிலும் சிறந்த புகழ் பெற்றவனாய்க் கொடைக்குக் கன்னன் என்று கூறுமாறு உயர்ந்து நின்றான். ஆயினும் துரியோதனனோடு கூடிக்கொண்டு பாண்டவர்கட்குத் தீமை புரியுமாறு பயனில்லாத சொற்களை அடிக்கடி கூறிக் கொண்டிருந்தான். நல்லவனாக விளங்கும் இவனிடத்தில் இப் புல்லிய குணமும் பொருந்தி இருக்கிறதே என்று எல்லோரும் உள்ளம் இரங்கினர். அவனுடைய கொடைப் புகழ் முதலியவெல்லாம், பயனில கூறிய இழிந்த செய்கை ஒன்றினாலேயே அழிந்தொழிந்தன.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...