021. தீவினை அச்சம் - 08. தீயவை செய்தார்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 21 - தீவினை அச்சம்

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "தீய செயல்களைச் செய்தவர் கெடுவது என்பது, ஒருவனது நிழலானது, அவனை விடாது வந்து, அவனது காலின் கீழ் தங்கியதைப் போன்றது" என்கின்றது.

     ஒரு பொருளின் நிழலானது, ஒளி வரும் அளவும் வெளிப்படாது, அப்பொருளைப் பற்றி இருந்து, ஒளி வந்த போது வெளிப்பட்டுத் தோன்றுதல் போல, ஒருவன் செய்த தீவினையானது, தனது பயனை அவன் அனுபவித்தற்கு உரிய காலம் வரும் அளவும் வெளிப்படாது, அவனது அந்தக்கரணத்தில் நினைவுச் சுவடாக நின்று, தனது பயனை அனுபவித்தற்கு உரிய காலம் வந்தபோது, வெளிப்பட்டு அவனை வருத்தும்.

திருக்குறளைக் காண்போம்...

தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தீயவை செய்தார் கெடுதல் --- பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்,

     நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று --- ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து.

      (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப் பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தல் காணலாம்...

குற்று ஒருவ்வரைக் கூறை கொண்டு
         கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒருவ்வரைச் செய்த தீமைகள்
         இம்மை யேவரும் திண்ணமே
மற்று ஒருவ்வரைப் பற்றி லேன்மற
         வாது எழுமட நெஞ்சமே
புற்று அரவ்வுடைப் பெற்றம் ஏறி
         புறம்ப யம்தொழப் போதுமே.   --- சுந்தரர் தேவாரம்.

இதன் பொழிப்புரை ---

     அறியாமையுடைய மனமே!  பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியாற் குற்றி, அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும், முறையில் நிற்கும் ஒருவரை முறை யின்றிப் பகைத்து, அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து வருத்தும்; இது திண்ணம். ஆதலின், அவை போல்வன நிகழாதிருத்தற்கு உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன். புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய , இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவனை நினைந்து புறப்படுவாயாக.

நீலமா மணிநிற நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும்  பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள்.
                                     ---  கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம்.

இதன் பதவுரை ---

     நீல மா மணி நிற நிருதர் வேந்தனை --- சிறந்த நீல இரத்தினம் போன்ற கருநிறமுடைய இராக்கதர் அரசனாம் இராவணனை; மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் --- வேரோடு அழிவு அடையுமாறு சூழ்ச்சி செய்து அழிக்கும் வலிமை உடையவளும்; மேலைநாள் உயிரொடும் பிறந்து --- முற்காலத்தில் உயிரோடு கூடவே தோன்றி; தான் விளை காலம் ஓர்ந்து --- தான் செயலை இயற்றுதற்கு உரிய காலத்தை எதிர்பார்த்து எண்ணி; உடன் உறை கடிய நோய் அனாள் --- அவ்வுயிரோடு கூடவே தங்கும் கொடிய வியாதியைப் போன்றவளும்; (ஆகிய சூர்ப்பணகை)

இரும்பு ஆர்க்கும் காலராய், ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பு ஆர்க்கும்
காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டு வைப்பார்.   ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     சுரும்பு ஆர்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டு வைப்பார் --- வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில் இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர். இரும்பு ஆர்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய் கரும்பார் கழனியுள் சேர்வர் --- இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட கால்களை உடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய பார் நிலத்திலாதல் விளை நிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர்.

         சிற்றுயிர்களைச் சிறைப்படுத்தும் தீவினைக்கும் அஞ்சுதல் வேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...