019. புறங்கூறாமை - 08. துன்னியார் குற்றமும்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகராத்தில் ஒரும் எட்டாம் திருக்குறள், "தம்மோடு நெருங்கிப் பழகுவோரின் குற்றத்தையும், அவரைக் காணாத இடத்து தூற்றுகின்ற இயல்பினை உடையவர், வேண்டாதவரிடத்தில் எவ்வாறு நடந்து கொள்வாரோ?" என்று ஐயுறுகின்றது.

திருக்குறளைக் காண்போம்...

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்,
என்னை கொல் ஏதிலார் மாட்டு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் --- தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்;

     ஏதிலார் மாட்டு என்னை கொல் --- அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?

      ('தூற்றுதல்'  பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினர் ஆவர்' என்று உரைப்பாரும் உளர்.)

பின்வரும் பாடல், இதற்கு ஒப்பாகுமாறு காண்க....

பண்டு இனர் என்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்,
விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின், அஃதால்அவ்
உண்ட இல் தீ இடுமாறு.             ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     பண்டு இனர் என்று --- முன்பு இத் தன்மையுடையார் என்று, தமரையும் தம்மையும் கொண்ட வகையால் --- தமது சுற்றத்தாரையும் தன்னையும் ஏற்றுக் கொண்ட சிறப்பு வகையாலேயே, குறை தீர நோக்கியக் கால் --- குறை தீருமாறு நோக்கிய இடத்து, விண்டவரோடு ஒன்றி புறன் உரைப்பின் --- நோக்கப்பட்டார் வேர் பகைவரோடு சேர்ந்து புறங்கூறுதலுறின், உண்ட அ இல் தீ இடுமாறு அஃதால் --- இனிய உணவினை உண்ட அவ்வீட்டிலேயே நெருப்பு இடுவதை ஒப்பது அதுவேயாம்.

         புறம் கூறி, செய்ந்நன்றியை மறத்தல் பழிக்குக் காரணமாம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...