திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
அதிகாரம் 17 -
அழுக்காறாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "ஒருவனால் பிறருக்குக்
கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றி பொறாமைப் படுபவனுடைய சுற்றமானது, உண்பதற்கும்
உடுப்பதற்கும் இல்லாமல் அழிந்து போகும்" என்கின்றது.
சுற்றத்தார் அழிந்து போவர் எனவே, அவர்க்கு முன்னே பொறாமைப்பட்டவன் அழிந்து
போவான் என்பது பெறப்பட்டது. பிறர் செல்வம் கண்டு பொறாமைப்படுவது, பொறாமைப்
படுபவனுடைய செல்வத்தை மட்டும் அல்லாது, அவனது சுற்றத்தாரது செல்வங்களையும்
அழிக்கும் என்பதும் பெறப்பட்டது.
திருக்குறளைக்
காண்போம்...
கொடுப்பது
அழுக்கறுப்பான் சுற்றம்,
உடுப்பதூஉம்
உண்பதூஉம்
இன்றிக் கெடும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் ---
ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்;
உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் ---
உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப்
பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது.
பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும்
என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடல்கள்
அமைந்திருத்தலைக் காணலாம்...
‘அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும்
அல்லர்
கொடுப்பவர்
முன்பு ‘கொடேல் ‘என நின்று
தடுப்பவரே
பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை ‘என்றான்.
--- கம்பராமாயணம், வேள்விப் படலம்.
இதன்
பதவுரை ---
அடுப்ப அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர் --- பிறர்
அழியும்படி பழிச்செயல்
செய்யும் தீத்தொழில் உடையோர் பகைவர் அல்லர்; கொடுப்பவர் முன்பு --- கொடுப்பவருக்கு எதிரே
நின்று கொண்டு; கொடேல்
என நின்று தடுப்பவரே பகை --- கொடுக்காதே என்று
கூறித்
தடுப்பவரே பகைவர் ஆவார்; அன்னார் தம்மையும் கெடுப்பவர் --- அத்தகையோர் கொள்வாரையும்
கொடுப்பாரையும் அல்லாது தம்மையும் கெடுத்துக்
கொள்பவரே ஆவர்; அன்னது ஓர் கேடு இலை என்றான் ---
(ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.
கட்டுரையில்
‘தம கைத்து உள போழ்தே
இட்டு
இசை கொண்டு அறன் எய்த முயன்றோர்
உள்
தறெு வெம் பகை ஆவது உலோபம்;
விட்டு
இடல் ‘என்று விலக்கினர் தாமே.
--- கம்பராமாயணம், வேள்விப் படலம்.
இதன்
பதவுரை ---
தம கைத்து உள போழ்தே --- தமது செல்வம் இருக்கும் காலத்திலே; இட்டு இசை கொண்டு --- இல்லை என்று வந்து
இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று: அறன் எய்த
முயன்றோர் --- அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்; உள் தெறு வெம்பகை ஆவது உலோபம் --- மனத்தை அழிக்கும் கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்; விட்டிடல் என்று --- (அதனை) விட்டுவிட வேண்டும் என்று; தாம் கட்டுரையின் விலக்கினர் --- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.
எடுத்து
ஒருஒருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது
நினக்கு அழகிதோ? தகவு இல் வெள்ளி!
கொடுப்பது
விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும்
உண்பதுவும் இன்றி விடுகின்றாய்..
--- கம்பராமாயணம், வேள்விப் படலம்.
இதன்
பதவுரை ---
தகவு இல் வெள்ளி --- பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே;
ஒருவருக்கு
ஒருவர் எடுத்து ஈவதனின் முன்னம் --- நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு; தடுப்பது நினக்கு அழகிதோ
--- கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ?; கொடுப்பது விலக்கு கொடியோய் --- ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே!; உனது சுற்றம் --- உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது; உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி --- உடுக்கத் துணியும்.
உண்ண உணவும் இல்லாமல்; விடுகின்றாய் --- விடுகின்றாய் என்பதை அறிவாயாக.
தாமும்
கொடார், கொடுப்போர் தமையும்
ஈயாதவகை
சேமம்
செய்வாரும் சிலர் உண்டே, - ஏமநிழல்
இட்டுமலர்
காய்கனிகள் ஈந்து உதவும் நன்மரத்தைக்
கட்டும்
உடை முள் எனவே காண். --- நீதிவெண்பா.
இதன்
பொழிப்புரை ---
தாங்களும் ஒருவர்க்கும் ஒன்றும் கொடுக்காமல், கொடுக்கக் கூடிய நல்லவர்களையும், இனிய நிழலைக் கொடுத்துப் பூவும் காயும்
பழமும் தந்து உதவக்கூடிய நல்ல மரத்தைச் சுற்றிக் கொண்டுள்ள உடை வேல முள்ளைப் போல, கொடுக்காதவாறு தடுத்துக் காவல்
செய்பவரும் உலகில் சிலர் உள்ளனர்.
(சேமம் --- பாதுகாவல்.
ஏமம் நிழல் --- இனிய நிழல். உடைமுள் --- கருவேலமுள்.)
No comments:
Post a Comment