திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
22 - ஒப்புரவு அறிதல்
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "இரக்கம் முதலிய
நற்குணங்கள் உடையவனிடத்தில் உண்டான செல்வமானது, எல்லோருக்கும் பயன்
தருகின்ற மரமானது ஊர் நடுவே பழுத்து விளங்கியது போலும்" என்கின்றது.
உலகநீதி பலவற்றுள்ளும் ஒப்புரவே சிறந்தது.
எனவே, ஒப்புரவு உடையானை, "நயன்
உடையான்" என்றார்.
உலக நீதி பலவாவன, ஒருவரையும்
பொல்லாங்கு சொல்லாமை, வஞ்சனைகள் செய்வாரோடு இணங்காமை, மனம்போன போக்கெல்லாம்
போகாமை முதலியன என்பர்.
திருக்குறளைக்
காண்போம்...
பயன்மரம்
உள்ஊர்ப் பழுத்து அற்றால்,
செல்வம்
நயன்
உடையான்கண் படின்.
இதற்குப்
பரிமேலகழர் உரை ---
செல்வம் நயன் உடையான்கண் படின் -
செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின்,
பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது
பயன்படு மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
(உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு
சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன்
கொடுக்கும் என்பதாம்.)
ஞாலம்உறு
நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவ
லோர்க்கும்
காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
உதவிசெய்து, கனமே செய்வார்,
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!
அவரிடத்தே வருவார்
யாரும்,;
ஆலமரம் பழுத்தவுடன், பறவையின்பால்
ஆலமரம் பழுத்தவுடன், பறவையின்பால்
சீட்டு எவரே அனுப்பு
வாரே. --- தண்டலையார் சதகம்
இதன் பதவுரை ---
மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே ---
திருமாலும் அறியாத தண்டலைநீள் நெறியாரே!, ஆலமரம்
பழுத்தவுடன் பறவையின்பால் எவரே சீட்டு அனுப்புவார் --- ஆலமரம் பழுத்தால் பறவைகள்
வரவேண்டும் என்று சீட்டினை அனுப்புவோர் யார்? (அவ்வாறே), ஞாலம் உறு நல்லவர்க்குச் செல்வம்
வந்தால் --- உலகில் உள்ள நல்லோர்களுக்குச் செல்வம் கிடைத்தால், நாவலோர்க்கும் எல்லவர்க்கும் ---
புலவர்களுக்கும் இரவலர் முதலிய யாவருக்கும், காலம் அறிந்து அருமையுடன் பெருமை
அறிந்து --- காலமும் அருமையும் பெருமையும் உணர்ந்து, உதவி செய்து கனமே செய்வார் --- பொருள்
கொடுத்துப் பெருமைப் படுத்துவார்கள்; அவரிடத்தே
யாரும்
வருவார்
--- அவரிடம் எல்லோரும் வருவார்கள்.
நடுவூருள்
வேதிகை சுற்றுக்கோள் புக்க
படுபனை
அன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக்
கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள்
ஏற்றைப் பனை. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
பலர் நச்ச வாழ்வார் --- பலரும் தம்மை
விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள் வேதிகை சுற்று கோட் புக்க
படுபனை அன்னர் --- ஊர் நடுவில் மேடையினால் சூழ்ந்து கொள்ளுதலைப் பொருந்திய
காய்த்தல் உடைய பெண்பனையை ஒப்பர்;
குடி
கொழுத்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள் --- தமது குடி செல்வமிக்க காலத்தும்
பிறர்க்கு வழங்கி உண்ணாத மாக்கள்,
இடுகாட்டுள்
ஏற்றைப் பனை --- சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தலில்லாத ஆண்பனையே யாவர்.
பிறர்க்கு வழங்கிப் பலர் நச்ச வாழ்தல்
வேண்டும்.
மன்னர்
திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார்
துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு
தாழ்ந்த குளிர்மரம் எல்லாம்
உழைதங்கட்
சென்றார்க்கு ஒருங்கு. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும் ---
அரசர் வளமும் மகளிரின் எழுச்சியழகும், துன்னியார்
துய்ப்பர் --- அவர்களுடன் நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல் வேண்டா ---
நேயம் என்னும் அந் நெருக்கமல்லது அதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர் மரமெல்லாம் ---நெ ருங்கத் தழைகள் பொருந்தித்
தாழ்ந்துள்ள குளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு ---
தம்மிடம் வந்தடைந்தார் அனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.
ஆதலால், நேயத்தால் தம்மை அடைந்தவரிடம் தகுதி
வேறுபாடுகள் கருதாமல், பெரியோர்
அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்பரென்க.
அழன்மண்டு
போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழன்மரம்போல்
நேர் ஒப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார்
பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண்
மகற்குக் கடன். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கெல்லாம்
நிழல்மரம் போல் --- வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல்,
நேர்
ஒப்பத் தாங்கி --- வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
சமம் பொருந்தக்காத்து, பழுமரம் போல் பல்லார்
பயன் துயப்ப ---பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல் பலரும் பயன்
நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே
நல் ஆண்மகற்குக் கடன் --- தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியால் உழைப்புடையனாய்
வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.
‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்
பார்
கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,
கார்
மழை பொழியவும், கழனி பாய் நதி
வார்
புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.? --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
ஊருணி நிறையவும் --- ஊராரால் உண்ணுதற்குரிய நீர்நிலை
நீரால் நிறையவும்; உதவும் மாடு உயர் --- பலர்க்கும் உதவத்தக்க
இடத்தில் வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் --- உலகத்தார் விழையும்
பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் --- பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் --- மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி --- வயல்களில் பாய்கிற ஆறு; வார்புனல் பெருகவும் ---
மிக்க நீர் பெருகவும்; மறுக்கின்றார்கள் யார் --- வேண்டாம் என்று
தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’
இவ்வெடுத்துக்காட்டுகளால் இராமன் பிறர்க்கு நன்மை
செய்யும் ஒப்புரவாளன் என்பது தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் குறளில் (215) வரும் உவமையினை ஊருணி நிறையவும் என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயனுடையான்கண் படின்” (216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகை யான்கண் படின்“(217) என்னும் குறட்பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழுபயன்மரம்” என்றும் சுருங்கச் சொல்லியுள்ள
திறம் எண்ணி மகிழ்தற்குரியது.
'ஞாலம் நுங்குறு நல் அறத்தோர்
பொருள்
போல
நின்று பொலிவது, பூம் பொழில்;
சீல
மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம்
இன்றிக் கனிவது காண்டிரால். --- கம்பராமாயணம், நாடவிட்ட படலம்.
இதன்
பதவுரை ---
பூம்பொழில் --- மலர்கள் நிறைந்த (முண்டகத் துறை
என்னும்) அச் சோலையானது; ஞாலம் நுங்குறும் --- உலகத்தவரால் அனுபவிக்கப்படுகிற; நல் அறத்தோர் பொருள் போல --- சிறந்த தரும
சிந்தையுள்ளவர்களின் செல்வம் போல; நின்று பொலிவது --- நிலைபெற்று விளங்குவது; சீல மங்கையர் வாய் என --- நல்லொழுக்கமுடைய மாதர்களின்
வாயிதழ் போன்று; தீம் கனி --- இனிய பழங்கள்; காலம் இன்றிக் கனிவது --- (இன்ன காலமென்று இல்லாது) எந்தக் காலத்திலும் பழுக்கப் பெறுவது; காண்டிர் --- (அதனைச்) சென்று காணுங்கள்.
இளையரும்
முதியரும் வேறுபுலம் படா
எடுப்ப
எழா அய் மார்பமண் புல்ல
இடைச்சுரத்து
இறுத்த மள்ள விளர்த்த
வளையில்
வறுங்கை ஓச்சிக் கிளையுள்
இன்னன்
ஆயினன் இளையோன் என்று
நின் உரை செல்லுமாயின் மற்று
முன்னூர்ப்
பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார்
யாணர்த் தற்றே யென்மகன்
வளனும்
செம்மலும் எமக்கென நாளும்
ஆனாது
புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல் அளியள் தானே. ---
புறநானூறு.
இதன்
பதவுரை ---
இளையரும் முதியரும் வேறுபுலம் படர --- போரிட
வந்த இளையோரும் முதியோரும் வேற்று நிலத்தே விலஙகிப்போக; எடுப்ப எழாஅய் --- யான் எடுப்பவும் நீ
எழுந்திராயாய்; மார்பம் மண் புல்ல ---
நினது மார்பு நிலத்தைப் பொருந்த;
இடைச்சுரத்து
இறுத்த மள்ள --- சுரத்திடை மேம்பட வீழ்ந்த இளையோய்; விளர்த்த வளையில் வறுங்கை யோச்சி --- வெளுத்த
வளையில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்து; கிளையுள்
--- உனது சுற்றத்தாரிடம்; இன்னன் ஆயினன்
இளையோன் என்று நின்னுரை செல்லுமாயின் --- இத்தன்மையனாக இறந்தான் இளையன் என்று நான்
சொல்ல; முன்னூர் பழுனிய கோளி
ஆலத்து --- ஊர் முன்னர்ப் பழுத்த கோளியாகிய ஆலமரத்தின்கண்; புள்ளார் யாணர்த்தற்று ---புள்ளுக்குள்
மிகும் புது வருவாயையுடைய அத்தன்மைத்து; என்
மகன் வளனும் செம்மலும் எமக்கென --- என்னுடைய மகனது செல்வமும் தலைமையும் எமக்கென்று; நாளும் ஆனாது புகழும் அன்னை --- நாள்தோறும்
அமையாது புகழும் நின்னுடைய தாய்;
என்னாகுவள்
கொல் அளியள் தான் --- எவ்வாறாவாள் கொல், அவள்
இரங்கத்தக்கவள் தான்.
மரம்
பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து
அழைப்பார் யாவரும் அங்கு இல்லை --- சுரந்துஅமுதம்
கற்றா
தரல்போல் கரவாது அளிப்பரேல்,
உற்றார்
உலகத் தவர். --- நல்வழி.
இதன்
பதவுரை ---
மரம் பழுத்தால் --- மரம் பழுத்திருந்தால். வா
என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் --- (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று
வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர்,
அங்கு
யாவரும் இல்லை --- அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல் போல் ---
கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் --- ஒளிக்காமற்
கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார்--
- உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.
No comments:
Post a Comment