திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
16 - பொறை உடைமை
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "மனச் செருக்கு
மிகுதியால் ஒருவன் தமக்குச் செய்த தீங்குகளை, தனது பொறுமையினால் வென்று விடவேண்டும்"
என்கின்றது.
மனச்செருக்கு மிக்கவர்க்குத் திருப்பிச்
செய்யும் செயலும், மனச் செருக்கு காரணமாகவே அமையும். செருக்கு கூடாது.
திருக்குறளைக்
காண்போம்...
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான்
வென்று விடல்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
மிகுதியான் மிக்கவை செய்தாரை ---
மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை;
தாம் தம் தகுதியான் வென்றுவிடல் ---
தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக.
(தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து
தோலாது, பொறையான் அவரின்
மேம்பட்டு வெல்க என்பதாம்.)
நேர்
அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்,
மற்றது
தாரித்து
இருத்தல் தகுதி,மற் --- று,ஓரும்
புகழ்மையாக்
கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக்
கொண்டு விடும். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக் கால் ---
தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால், அது தாரித்து இருத்தல் தகுதி ---
சான்றோர் அதனைப் பொறுத்திருத்தல் தகுதியாகும்; மற்று --- அங்ஙனம் பொறுத்திராமையை, ஓரும் புகழ்மையாக் கொள்ளாது --- கருதத்
தகுந்த புகழ்க்குரிய குணமாகக் கொள்ளாமல், பொங்குநீர்
ஞாலம் --- கடல் சூழ்ந்த இவ்வுலகம்,
சமழ்மையாக்
கொண்டு விடும் --- பழிப்புக்குரிய இழிகுணமாகக் கருதிவிடும்.
தமக்குச் சமானம் அல்லாதவர்கள் தம்மை
ஒன்று சொன்னால், அதனைப் பொறுத்துக்
கொள்ள வேண்டும் என்பது கருத்து.
பிழையுளன
பொறுத்திடுவர் என்றுஅடியேன் பிழைத்தக்கால்
பழஅதனைப்
பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு
வடிகாதா கோயில் உளா யேஎன்ன
உழைஉடையான்
உள் இருந்து உளோம்போகீர் என்றானே. --- சுந்தரர் தேவாரம்.
இதன்
பொழிப்புரை
---
குழை பொருந்திய , தூங்கும் காதினை உடையவனே! நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார்
பொறுத்துக் கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும்
பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய்; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ?` என்று யான் வினாவ, மானை ஏந்திய அவன், ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
இழித்தனன்
என்னை யானே
எம்பிரான் போற்றி
போற்றி
பழித்திலேன்
உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை
பொறுக்கை யெல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ்
வாழ்வு போற்றி
உம்பர்நாட் டெம்பி
ரானே. --- திருவாசகம், திருச்சதகம்.
இதன்
பொழிப்புரை ---
என்னை நானே இழிவுபடுத்திக் கொண்டேன். எம்பெருமானே ! உனக்கு வணக்கம் வணக்கம்; உன்னை நான் குறை கூறமாட்டேன்; என்னை அடிமையாகவுடைய திருவடிக்கு வணக்கம்; சிறியவர் செய்த பிழைகளை எல்லாம்
பொறுத்துக் கொள்ளுதல், பெரியவரது கடமையாம். பெருமானே உன்னை வணங்குகின்றேன். மேலுலகத்தையுடைய
எம்பெருமானே, உன்னை
வணங்குகின்றேன்,
இந்த
வாழ்க்கையை ஒழித்தருள்வாயாக.
மறுத்தனன்
யான் உன் அருள் அறியாமையில், என்மணியே!
வெறுத்து
எனை நீ விட்டிடுதி கண்டாய்,
வினையின்
தொகுதி
ஒறுத்து
எனை ஆண்டுகொள், உத்தர கோசமங்கைக்கு
அரசே!
பொறுப்பர்
அன்றே பெரியோர் சிறு நாய்கள்தாம் பொய்யினையே.
--- திருவாசகம், நீத்தல் விண்ணப்பம்.
இதன்
பொழிப்புரை ---
என் மாணிக்கமே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே,! நான் தேவரீரது திருவருளின் பெருமையை, அறியாமையால் அதனை வேண்டாம் என்று மறுத்தேன். நீ
அதற்காக அடியேனை வெறுத்து விட்டுவிடுவாயோ? மேலோர், சிறிய நாய் போல்வாரது குற்றத்தை
மன்னிப்பார்கள் அல்லவா? ஆதலால், என்னுடைய வினை அனைத்தையும் அழித்து என்னை ஆண்டுகொண்டு அருள வேண்டும்.
சிறியவர்
ஒருபிழை செய்யின் மேலவர்
பொறையொடும்
பின்னரும் போற்றல் அல்லதை
இறையதும்
வெகுள்வரோ? யானும் செய்பிழை
அறிவன்
நீ அன்றியே யாரது ஆற்றுவார்?
--- கந்தபுராணம்.
இதன்
பொழிப்புரை ---
அறிவில் சிறியவர்கள் ஒரு குற்றத்தைப்
புரிந்தால், அறிவில்
சிறந்தவர்கள் அதனைப் பொறுத்துக் கொள்வர். கொஞ்சமாவது சினம் கொள்வாரோ? நான் செய்த
குற்றத்தை,
மேலான
அனிவன் ஆகிய நீயே பொருத்துக் கொள்ளவில்லையானால், வேறு யார் பொறுப்பார்?
தீது
ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய்
நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின்,
சாதுநீ, அவர் தீயர் என்பதற்குக்
கரி என்ன? சக்கு இலாதார்
ஓதவிடம்
உண்ணின், விழி உடையாரும்
உண்ணுவரோ? உலப்பில் செந்நெல்
சேதம்உற
அவைத்திடுவோர்க்கு உணவாதல்
போல் நலமே செய்வாய் நெஞ்சே. --- நீதிநூல்.
இதன்
பொழிப்புரை ---
நெஞ்சே! உனக்கு ஒருவர் தீங்குசெய்தார் என்று, நீ அவர்க்கு ஒரு தீங்கு செய்தால், நீ நல்லவன் என்றும் அவர் தீயவர்
என்றும் வேறுபடுத்துக் கூறுவதற்குச் சான்று என்ன இருக்கின்றது? கண்ணில்லாதவர் சாவினைத் தரும் நஞ்சினை
உண்டார்களானால், கண் உடையவர்களும்
உண்பார்களோ? கெடாத செந்நெல்லை உமி
நீங்குதலாகிய கேடு எய்தும்படி குற்றுவோர்க்கு அந்நெல் உணவாகி நன்மை செய்வதுபோன்று
தீங்கு செய்வார்க்கும் நன்மையே செய்.
நோவ
உரைத்தாரைத் தாம்பொறுக்கல் ஆகாதார்
நாவின்
ஒருவரை வைதால், வயவுரை,
பூவின்
பொலிந்து அகன்ற கண்ணாய்! அதுஅன்றோ
தீஇல்லை
ஊட்டும் திறம். --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய் --- பூப்போல
விளங்குகின்ற விசாலமான கண்ணையுடையாய்!, நோவ
உரைத்தாரை தாம் பொறுக்கல் ஆகாதார் --- மனம் வருந்துமாறு அடாத சொற்களைச்
சொல்லியவர்களை அவர் கூறிய சொற்களைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள், நாவின் ஒருவரை வயவுரை வைதால் --- தமது
நாவினைக் கொண்டு தம்மை வைதாரைத் தாம் இகழ்ந்து கூறினால், (அங்ஙனம் இகழ்ந்து கூறுதல்) தீ இல்லை
ஊட்டும் திறம் அது அன்றோ --- தீயினால் வீட்டினைக் கொளுத்தும் திறம்போல் அது ஆகும் அல்லவா?
தம்மை இகழ்ந்தாரைத் தாமும்இகழ்தல்
தமக்குத் துன்பத்தை விளைவித்துக் கொள்வதாக முடியும் என்பது கருத்து.
No comments:
Post a Comment