018. வெஃகாமை - 08. அஃகாமை





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "குறைந்து போகும் தன்மையினை உடைய ஒருவனது செல்வமானது குறையாது இருத்தற்குக் காரணம் எது என்று ஆராய்ந்தால், பிறனுடைய உழைப்பால் வந்த செல்வத்தைத் தான் அனுபவிக்க விரும்பாமல் இருப்பதே ஆகும்" என்கின்றது.

     பிறர் பொருளை அபகரிக்கின்றவர்க்கு மேன்மை உண்டாவது இல்லை என்பது கருத்து.

திருக்குறளைக் காண்போம்...

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின், வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் --- சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்;

     பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை --- அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்.


     பின்வரும் பாடல்கள் இதற்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

இழுக்கா னியனெறி யின்னாத வெஃகான்
வழுக்கான் மனைபொருள் வௌவான் - ஒழுக்கத்தால்
செல்வான் செயிரிலூ ணீவா னரசாண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து.   ---  ஏலாதி

இதன் பதவுரை ---

     இயல் நெறி இழுக்கான் --- வழிபாட்டு நெறியிலிருந்து  வழுவாமலும், இன்னாத வெஃகான் --- துன்பந்தரும் தீய செயல்களை விரும்பாமலும், மனை வழுக்கான் --- இல்லற வாழ்க்கையினின்று தவறாமலும், பொருள் வௌவான் --- பிறர் பொருளைக் கவராமலும், ஒழுக்கத்தால் செல்வான் --- நன்னடக்கையில் ஒழுகி, செயிர் இல் ஊண் --- குற்றமில்லாத உணவை, ஈவான் --- விருந்தினர் முதலானவர்கட்குக் கொடுப்பவன், அரசு ஆண்டு --- அரசாட்சி செய்து, விரைந்து விடுப்பான் --- பகைவர்கள் விரைவாய் நீங்கும்படி, வெல்வான் --- அவர்களை வெற்றி கொள்வான்.


தன்னை வியந்து தருக்கலும், தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும், - முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும், இம்மூன்றுஞ்
செல்வம் உடைக்கும் படை.          ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     தன்னை வியந்து தருக்கலும் --- ஒருவன் தன்னைத் தானே) நன்கு மதித்து அகங்கரித்து இருத்தலும்; தாழ்வு இன்றி கொன்னே வெகுளி பெருக்கலும் --- மன அடக்கம் இல்லாமல் வீணாக, சினத்தைப் பெருகச் செய்தலும்; முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் --- கருதிய பலவகைப் பொருள்களையும் இச்சிக்கின்ற சிறுமைத் தன்மையும்; இ மூன்றும் செல்வம் உடைக்கும் படை --- இந்த மூன்றும் ஒருவன் செல்வத்தை அழிக்கும் கருவி.

         தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படை என்றது.

         தன்னை வியத்தலால் அடக்கமின்மையும், வெகுளி பெருக்குதலால் துணையாயினவர் பிரிவும், பல பொருளையும் விழைதலால் குற்றமும் விளங்கும் என்பது, இம்மூன்றும் படையென்று உருவகிக்கப்பட்டன.

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.   --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்டது என்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...