திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
20 - பயனில சொல்லாமை
இந்த
அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "சொல்லப்
புகுங்கால்,
சொற்களில்
பயனுடைய சொற்களைச் சொல்லுக; பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக"
என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்...
சொல்லுக
சொல்லில் பயன் உடைய, சொல்லற்க
சொல்லில்
பயன் இலாச் சொல்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
சொல்லில் பயன் உடைய சொல்லுக -
சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக,
சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க -
சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.
('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி
நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும்
படாதனவும் நியமிக்கப்பட்டன.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...
மை
ஏர் தடங்கண் மயில் அன்னாய்! சாயலே
மெய்யே
உணர்ந்தார் மிக உரைப்பர் - பொய்யே
குறளை
கடுஞ்சொல் பயன் இலசொல், நான்கும்
மறலையின்
வாயினவா மற்று. ---
ஏலாதி.
இதன்
பதவுரை ---
மை ஏர் --- மை தீட்டிய அழகான, தடம் கண் --- பெரிய கண்களையுடைய, மயில் அன்னாய் --- மயிலைப்போன்ற பெண்ணே!, உணர்ந்தார் --- சான்றோர், சாயலே --- மென்மையான நற்சொற்களையும், மெய்யே --- மெய்யையும், மிக உரைப்பர் --- மிகவும் பேசுவார், பொய்யே --- பொய்யும், குறளை --- புறங்கூறலும், கடுஞ்சொல் --- வன்சொல்லும், பயனில சொல் --- பயனில்லாத சொற்களும், நான்கும் --- ஆகிய இவை நான்கும், மறலையின் வாயின --- புல்லறிவுடையான்
வாயில் வருவனவாம்.
பெரியோர் வாயில் நன்மொழிகளே பிறக்கும். சிறியோர் வாயில் தீச்சொற்களும்
பிறக்கும்.
படிறும்
பயனிலவும் பட்டி யுரையும்
வசையும்
புறனும் உரையாரே யென்றும்
அசையாத
உள்ளத் தவர். --- ஆசாரக் கோவை.
இதன்
பதவுரை ---
என்றும் --- எக்காலத்தும், அசையாத --- ஒழுக்கத்தினின்றும் தவறாத, உள்ளத்தவர் --- மனம் உடையோர், படிறும்--- வஞ்சனைச் சொல்லையும், பயனிலவும் --- பயனற்ற சொல்லையும், பட்டி உரையும் --- நாவடக்கம் இல்லாத
சொல்லையும், வசையும் ---
பழிச்சொல்லையும், புறனும் ---
புறங்கூறுதலையும், உரையார் - சொல்லார்.
வஞ்சனைமொழி பயனில் சொல் முதலியவற்றை
ஒழித்தல் வேண்டும்.
பட்டி --- கள்ளம், இங்கு நாவடக்கம் இன்மையைக் குறித்தது.
புறங்கூறல் --- முன் நின்று புகழ்ந்து,
பின் நின்று இகழ்ந்து உரைத்தல். படிறு --- வஞ்சனை: பண்பாகுபெயராய் வஞ்சனையாகிய
சொல்லைக் குறித்தது.
No comments:
Post a Comment