022. ஒப்புரவு அறிதல் - 07. மருந்தாகித் தப்பா





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "பிறர்க்கு உதவும் பெருங்குணம் உடையவனிடத்தில் சேர்ந்த செல்வமானது, எல்லா உறுப்புக்களுக்கும் நோய்க்கு மருந்தாகி விளங்கி, பயன் தருவதில் தவறாத மரம் ஆகும்" என்கின்றது.

     செல்வத்திற்கு அனுபவித்தற்கு உரிய பல பொருள்களில் இருந்து தப்புதலாவது, மறைந்து நின்றாவது, காத்தலால் வேறுபட்டாவது பயன் படாது போதல். 

     மருந்தாகித் தப்பாத வேம்பு முதலிய மரங்கள், தன்னுடைய கிளை, தளிர் முலியவற்றை, பறித்தும், செதுக்கியும் பிறர் செய்யும் தன்னுடைய குறைவை நோக்கது, தனது இலை தளிர், கிளை முதலியவற்றை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள உதவி புரியும். அதனால் அவை குறைவதில்லை. மேலும் மேலும் வளர்கின்றன. அதுபோல, பெருந்தகைமை உடையவனது செல்வமும் எல்லோர்க்கும் கொடுக்கக் கொடுக்கக் குறையாது வளரும்.

திருக்குறளைக் காண்போம்...

மருந்து ஆகித் தப்பா மரத்து அற்றால், செல்வம்
பெருந்தகையான் கண் படின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செல்வம் பெருந்தகையான்கண் படின் --- செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின்,

     மருந்து ஆகித் தப்பா மரத்தற்று --- அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்.

         (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால், காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து
உணர்வு உடையான் ஏதிய நூலும் - புணர்வின்கண்
தக்கது அறியும் தலைமகனும், இம்மூவர்
பொத்து இன்றிக் காழ்த்த மரம்.     ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் --- வரையாது கொடுத்தலைத் தனக்கு அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள பொருளும்; உள்ளத்து உணர்வு உடையான் ஓதிய நூலும் --- உள்ளத்தில் (கேட்டதனை) நினைத்துப் பார்க்கும் இயல்புடையவன் கற்ற நூல் புலமையும்; புணர்வின்கண் தக்கது அறியும் தலைமகனும் --- (பிறர் தன்னைச்) சார்ந்தவிடத்து (அவர்க்குச் செய்யத்) தக்க காரியத்தை, அறியும் தலைவனும்; இ மூவர் பொத்து இன்றி காழ்த்த மரம் --- ஆகிய இம் மூவரும் பொந்து இல்லாமல் வயிரம் பற்றிய மரம் போல அசைவற்றவராவர்.


மன்னிய கனிகாய் நீழல்
     மற்றெலா முதவிப் பின்னுந்
தன்னையு முதவா நின்ற
     தருவெனத் தங்கை யார்ந்த
பொன்னெலா முதவிப் பின்னும்
     பூட்சியா லுழைத்திட் டேனும்
இன்னுயி ருதவி யேனும்
     இடுக்கண்தீர்ப் பார்நல் லோரே.      ---  நீதிநூல்.
        
இதன் பொழிப்புரை ---

     நிலைத்த பழம் காய் நிழல் முதலிய பலவும் உதவிய மரம் தானும், கோவில் வீடு கப்பல் முதலிய பலவற்றுக்கும் பயன்படும்படி தன்னையும் உதவுகின்றது. அதுபோன்று நல்லோர்கள் தம் கைப்பொருளெல்லாம் உதவிய பின்னும உடல் வருந்தி உழைத்திட்டும் இன்னுயிர் கொடுத்தும் பிறர் துன்பங்களைப் போக்குவர்.

சொல்லாமலே பெரியர், சொல்லிச் சிறியர் செய்வர்,
சொல்லியும் செய்யார் கயவரே --- நல்ல
குலாமாலை வேல்கண்ணாய்! கூறுஉவமை நாடின்,
பலாமாவைப் பாதிரியைப் பார். --- ஔவையார் தனிப்பாடல்.

இதன் பொழிப்புரை ---
    
     மாலையை அணிந்த, வேலைப் போன்ற கண்களை உடையவளே! பெரியோர் தாம் செய்ய இருக்கும் உதவியை மற்றவர்க்குச் சொல்லாமலே செய்வர். அவரை விடத் தாழ்ந்த, இடைப்பட்டவர், தாம் செய்யும் உதவியை பற்றவர்க்குச் சொல்லிவிட்டுச் செய்வர். உதவி செய்வதாகச் சொல்லி, பின்னர் அதைச் செய்யாமல் இருப்பவர் கீழ்மக்கள். இவர்களுக்குச் சொல்லக்கூடிய உவமையை ஆராய்ந்தால், பூக்காமலே பழுக்கும் பலா மரத்தையும், பூத்த பின் காய்த்துக் கனியைத் தரும் மாமரத்தையும், பூத்தும் கனியைத் தராத பாதிரி மரத்தையும் கூறவேண்டும்.

     பலாமரம் பூவாது பயன் தரும். மாமரம் பூத்துப் பயன் தரும். பாதிரி பூத்தும் பயன் தராது.
                      

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி, - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்,
அம்மருந்து போல்வாரும் உண்டு.  ---  மூதுரை.

இதன் பதவுரை ---

     வியாதி --- நோயானது, உடன்பிறந்தே கொல்லும் --- உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது, (ஆதலால்) உடன் பிறந்தார் --- உடன் பிறந்தவர் எல்லோரும், சுற்றத்தார் என்று இருக்க வேண்டா --- (நன்மை செய்யும்) சுற்றத்தாரென்று கருதியிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா --- உடன் பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே --- பெரிய மலையில் இருக்கிற மருந்தே, பிணி தீர்க்கும் --- நோயைப் போக்கும்; அம்மருந்து போல்வாரும் உண்டு --- அம் மருந்து போல் (அயலாராயிருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு.


அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றுஅவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினை மரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனை மரம் ஆய மருந்து.    ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஒருவர்க்கு அல்லல் அடைந்தக்கால் --- ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால், அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் --- அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள், நல்ல வினை மரபின் அதனை நீக்கும் --- நல்ல செயல் முறையால் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அது --- அச்செயல், மனைமரம் ஆய மருந்து --- இல்லின்கண் உள்ள மரமாகிய மருந்தினை ஒக்கும் அல்லல் உற்றார்க்கு.

     ஒருவன் அல்லலுற்ற காலத்து, அவன் வருந்தாது, அவ்வல்லலை நீக்கும் கிளைஞர்கள் மனையின்கண் உள்ள மருந்து மரத்திற்கு ஒப்பாவார்.

ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்
பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,
கார் மழை பொழியவும், கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.?   ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     ஊருணி நிறையவும் --- ஊராரால் உண்ணுதற்குரிய நீர்நிலை நீரால் நிறையவும்; உதவும் மாடு உயர் --- பலர்க்கும் உதவத்தக்க இடத்தில் வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் --- உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் --- பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் --- மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி --- வயல்களில் பாய்கிற ஆறு;  வார்புனல் பெருகவும் --- மிக்க நீர் பெருகவும்;  மறுக்கின்றார்கள் யார் --- வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).

     இவ்வெடுத்துக்காட்டுகளால் இராமன் பிறர்க்கு நன்மை செய்யும்  ஒப்புரவாளன் என்பது தெரிவிக்கப்பட்டது.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம், பேரறி வாளன் திரு என்னும் குறளில் (215) வரும் உவமையினை ஊருணி நிறையவும் என்றும், “பயன்மரம் உள்ளூர்ப்  பழுத்தற்றால் செல்வம், நயனுடையான்கண் படின் (216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகை யான்கண் படின்(217) என்னும் குறட்பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் பார் கெழுபயன்மரம் என்றும் சுருங்கச் சொல்லியுள்ள திறம் எண்ணி மகிழ்தற்குரியது.  



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...