018. வெஃகாமை - 06. அருள்வெஃகி




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "அருளாகிய அறத்தை விரும்பி, அதன் வழி இல்லறத்தில் நின்றவன், பிறர் பொருளை விரும்பி, அதனைப் பெறுவதற்குப் பொல்லாத செயல்களைச் செய்யக் கருதினால் அழிந்து விடுவான்" என்கின்றது.

     இல்லறத்தில் நின்று அறிவு முதிர்ந்தால் அன்றி துறவறம் கைகூடாது. துறவறத்திற்கு ஆறாக நின்றது இல்லறம் ஆகும். பொல்லாத செயல்களை ஒருவன் எண்ணும் அளவில், இல்லறத்தினை இழப்பதோடு, அதன் பயனாகிய துறவறத்தையும் இழந்தவன் ஆகின்றான். எண்ணிய அளவிலே கெடும் என்பதால், செய்தாலும் கெடும் என்பது சொல்லாமலே விளங்கும். அருளை விரும்புபவன், பொருளை விரும்புதல் கூடாது.

திருக்குறளைக் காண்போம்...

அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

இதற்குப் பரிமேழகர் உரை ---

     அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் --- அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்;

     பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் --- பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.

      (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)

     பின்வரும் பாடல், இதற்கு விளக்கமாக அமைந்திருப்பதைக் காணலாம்...

பொருள்உடையான் கண்ணதே போகம், அறனும்
அருள்உடையான் கண்ணதே ஆகும், - ருள்உடையான்
செய்யான் பழி,பாவம் சேரான், புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.   ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     போகம் பொருள் உடையான் கண்ணதே ஆகும் --- உலக இன்பமானது, செல்வப் பொருள் உடையவன் இடத்து உண்டாகும், அறனும் அருள் உடையான் கண்ணதே ஆகும் --- நல்லொழுக்கமும் இரக்கம் உள்ளவன் இடத்தில் உள்ளதாகும், அருள் உடையான் பழி செய்யான் --- அத்தகைய அருள் உடையவன் பழிக்கப்படும் தீய செயல்களைச் செய்யான், பாவம் சேரான் --- தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான், புறமொழியும் பிறர் செவிக்கு உய்த்து உய்யான் --- புறங்கூற்றுச் சொற்களையும் மற்றையவர் காதுகளில் செலுத்தி வாழமாட்டான்.

         பொருள் உள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருள் உள்ளவனுக்கு அறம் விளையும்; அருள் உள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலையும் செய்யான்.

மந்திரம் என்றால் என்ன

மந்திரம் என்றால் என்ன ----      “மந்திரமும் தந்திரமும்” என்று சொல்லுவார்கள். மந்திரம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டது. தந்திரம் என்பது நூல...