திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
19 - புறங்கூறாமை
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம்
திருக்குறள், "ஒருவனைக் காணாத
போது இகழ்ந்து பேசி, கண்டபோது அவனுக்கு இனியவனாகப் பொய்யாகப் பேசி, உயிர் வாழ்வதை
விட,
உயிரை
விட்டுவிடுதலானது, அவனுக்கு அறநூல்களில் சொல்லப்பட்டுள்ள பயன்களைத் தரும்"
என்கின்றது.
பொய்யாக வாழ்வதை விடுத்து, உயிரை விட்டுவிட்டால், புறங்கூறுவதால் உண்டாகும் பாவம் சேராது
என்பதால்,
அறத்தால்
வரும் ஆக்கம் உண்டாகும் என்றது.
திருக்குறளைக்
காண்போம்...
புறம்
கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல்
அறம்
கூறும் ஆக்கம் தரும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்
--- பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன்
உயிர்வாழ்தலின்;
சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் ---
அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும்
பயன்.)
பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் இதற்கு
ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...
பேச்சொடு
பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன், ஆதலாலே கொடுமையை
விடுமாறு ஓரேன்,
நாச்சொலி
நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்,
ஏச்சுளே
நின்று மெய்யே என்செய்வான் தோன்றினேனே.
--- அப்பர்.
இதன்
பொழிப்புரை ---
பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும்
செயலில் சிறிதும் நாணம் இல்லாதவனாக இருக்கின்றேன். அந்தக் கொடுமையை விட்டுவிட வேண்டும்
என்பதேயும் அறியாதவனாய் இருக்கின்றேன். சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன்
செய்யும் நன்மையை உணரமாட்டாதவனாகவும் இருக்கின்றேன். இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த
உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன். ஏன் பிறந்தேன் நான்?
No comments:
Post a Comment