திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
19 - புறங்கூறாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "கூடி மகிழும்படி இனிய
சொற்களைச் சொல்லி, பிறரோடு நட்புச் செய்துக் கொள்வதைத் தமக்கு நன்மை என்று
அறியாதவர்,
புறங்கூறி, தமது
சுற்றத்தாரையும் பிரிந்து போகும்படிப் பண்ணுவர்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்...
பகச்
சொல்லிக் கேளிர் பிரிப்பர்,
நகச்
சொல்லி
நட்பு
ஆடல் தேற்றாதவர்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் ---
தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்;
நகச் சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் ---
கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.
கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல்.
"கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது.
புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள், "சோமேசர் முதுமொழி
வெண்பா"
என்னும் நூலில் பாடி அருளிய ஒரு பாடல்...
கூனி இராமன் பிரிந்து
போமாறே கூறினளே,
தூநறும்பூ கொன்றைஅணி
சோமேசா! - தானே
பகச்சொல்லிக்
கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா
தவர்.
புறங்கூறாமையாவது
காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை.
மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருவதாம்.
இதன் பதவுரை ---
தூ நறு கொன்றை பூ அணி --- தூய நல்ல அழகிய
கொன்றைமலர் மாலையை அணிந்து விளங்கும், சோமேசா! பக சொல்லி --- தம்மைவிட்டு நீங்குமாறு
புறங்கூறி, கேளிர்ப் பிரிப்பர் ---
தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்,
நக
சொல்லி --- கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி, நட்பு ஆடல்
தேற்றாதவர் --- அயலாரோடு மட்புக் கொள்ளுதலை அறியாதார்,
கூனி --- மந்தரை
என்னும் பெயரை உடைய கூனி என்பவள்,
தானே
--- வேறு ஒருவர் தூண்டுதலின்றித் தானே, இராமன்
--- சீராமன், பிரிந்து போமாறு ---
உற்றார் உறவினர் நட்பாளர் முதலிய யாவரையும் விட்டுப் பிரிந்து காட்டிற்குச்
செல்லும்படி, கூறினாள் ---
(கைகேசிக்குச்) சொன்னாள் ஆகலான் என்றவாறு.
இரகு குலோத்தமனான இராமபிராற்கு
பட்டாபிடேக முயற்சிகள் நடக்கையில்,
சிறுபோதில்
வில் கொண்டு எய்த உண்டை, தற்செயலாய்த் தன்
கூனின் மேல்பட வருந்திய மந்தரை என்னும் கைகேசியின் பணிப்பெண், அதனைத் தடுக்கத் துணிந்து, கௌசலை மகனாகிய இராமனிடத்தும் தன்
மகனாகிய பரதனிடத்தும் வேற்றுமை நினையாத கைகேசியின் கொள்கையைத் தன் சொல்வன்மையினால்
மாற்றி, இராமனைப் பதினான்கு
ஆண்டுகள் காட்டிற்குச் செல்ல ஏவிப் பரதனுக்கு முடி சூட்டும்படி கற்பித்தாள்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடிய நீதி சூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும்
நூலில் இருந்து ஒரு பாடல்..
தக்க துரியோதனன் பால்
சார்ந்த சகுனியைப் போல்,
இக் குவலயத்தில், இரங்கேசா! --- மிக்குப்
பகச் சொல்லிக் கேளிர்
பிரிப்பர், நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்.
இதன் பதவுரை ---
இரங்கேசா ---
திருவரங்கநாதக் கடவுளே! இக் குவலயத்தில் --- இந்த உலகத்தில், தக்க துரியோதனன் பால் --- மேலான
பதவியிலிருந்த துரியோதனனிடத்தில்,
சார்ந்த
--- சேர்ந்திருந்த, சகுனியைப் போல் ---
சகுனி மாமனைப் போல, நக சொல்லி ---
மகிழும்படி இணக்கமான வார்த்தைகளைச் சொல்லி, நட்பு ஆடல் தேற்றாதவர் --- இணங்கி
இருத்தலை வளர்க்கத் தெரியாதவர்கள்,
மிக்கு
--- மிகுதியாய், பக சொல்லி ---
பிரிவினை உண்டாகும்படி புறங்கூறி,
கேளிர்
--- உறவினரையும், நட்பினரையும், பிரிப்பர் --- வேறு பிரித்து
மகிழ்வார்கள்.
கருத்துரை --- போகவிட்டுப்
புறம் சொல்லித் திரிய வேண்டாம்.
விளக்கவுரை --- பாரதத்தில் துரியோதனன்
முதலிய நூற்றுவரையும், அவர்கள்
பங்காளிகளாகிய தருமன் முதலிய ஐவரையும் பகையாளிகள் ஆக்கின சகுனி மாமன், துரியோதனற்கு நன்மை செய்பவன் போலச்
செய்து தீங்கு நாடு அறிந்ததாகும். அவர்களுள் பகையை மூட்டி, ஒரு கூட்டத்தார் மறு கூட்டத்தாரை
வெறுக்கத் தூண்டினவனும் அவனே. சூதாட வேண்டினவனும் அவனே. ஐவர் அறியாமல்
துரியோதனற்கு துர்ப் போதனை செய்து,
சூதாட்டத்தில்
அவர்களுடைய பெண்பிள்ளை, பண்ட பதார்த்தங்களை
சூதில் வென்று மானபங்கம் செய்வித்தவனும் அவனே. கடைசியாகத் துரியோதனனை அவனது
சுற்றத்தாரோடு அழியச் செய்து தானும் அழிவதற்குக் காரணமாயிருந்தவனும்
அவனேயாம்.
No comments:
Post a Comment