017. அழுக்காறாமை - 07. அவ்வித்து





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 17 - அழுக்காறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "பிறர் ஆக்கம் கொண்டு பொறாமைப் படுகின்றவனைக் கண்டு திருமகளும் பொறாமைப்பட்டு, அவனைத் தனது தமக்கைக்குக் காட்டி, நீங்கி விடுவாள்" என்கின்றது.

     தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த போது,  இரண்டாவதாகப் பிறந்தவள் இலக்குமி தேவி. அவளுக்கு முன்னர் பிறந்தவள் மூதேவி எனப்பட்டாள். மூத்த தேவி என்பதால் மூதேவி ஆனாள்.

     அவ்வியம் என்பதற்கு மனக்கோடம் என்றும் பொருள் உண்டு. அவ்வித்து அழுக்காறு உடையான் என்பதற்கு, மனக்கோணல் காரணமாகப் பொறாமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருக்குறளைக் காண்போம்...

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அழுக்காறு உடையானை --- பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை;

     செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும்.

       (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித்தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.       ---  இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிது --- மனக்கோட்டம் செய்து பொறாமைச் சொற்களைச் சொல்லாமை மிக இனிது; செவ்வியனாய் சினம் செற்று கடிந்து வாழ்வு இனிது --- மனக்கோட்டம் இல்லாதவனாய் கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனிது;  கவ்விக்கொண்டு தாம் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது --- மனம் அழுந்தி நிற்ப, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, அதற்கேற்ற சமயம் பார்த்து அபகரியரதவராய், அதனை மறந்து விடுதல் இனிது.

பணியப் படுவார் புறங்கடையர் ஆகத்
தணிவுஇல் களிப்பினால் தாழ்வார்க்கு --- அணியது
இளையாள் முயக்குஎனினும் சேய்த்துஅன்றே மூத்தாள்
புணர்முலைப் போகம் கொளல்.    ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     பணியப்படுவார் புறங்கடையராக --- தம்மால் வணங்கி எதிர்கொள்ளத்தக்க பெரியார் தம்முடைய தலைவாயிற் படியில் வந்து நின்றனராக, தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு --- அடங்குதல் இல்லாத செல்வக் களிப்பினால் அவரை எதிர்கொள்ளக் கூசுவார்க்கு, அணியது இளையாள் முயக்கு எனினும் --- திருமகளின் சேர்க்கை அப்போது அவர்க்கு நெருக்கமாயிருக்கின்றதானாலும்; சேய்த்து அன்றே மூத்தாள் தொலையாத போகம்கொளல் --- மூதேவியின் ஒழியாத சேர்க்கையை மேற்கொள்ளுதல் அவர்களுக்குத் தொலைவில் இல்லை.

     பெரியாரை மதியாது செல்வக் களிப்பினாற் செருக்குவார்பால் உள்ள திருமகள் நீங்கி ஒழிய, மூதேவி விரைவிலே வந்து சேருவள். அவர்கட்கு அச்செல்வம் அழிந்துபோம் என்பது கருத்து.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...