021. தீவினை அச்சம் - 02. தீயவை தீய





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 21 - தீவினை அச்சம்.

     வாக்கினால் நிகழும் குற்றங்களை, "பயனில சொல்லாமை" என்னும் முந்திய அதிகாரத்தில் விளக்கிக் காட்டினார். இப்போது காயத்தால் நிகழும் குற்றங்களை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து, இந்த அதிகாரத்தால் விலக்குகின்றார்.

பவமும் பாவமும் பாதகமும் தீவினை ---  பிங்கலந்தை.

தானமும், அறமும், தருமமும், சீலமும்,
அருளும், மங்கலமும், சுபமும், சுகிர்தமும்,
புண்ணியமும், பாக்கியமும் நல்வினை ஆகும். ---  பிங்கலந்தை.

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "தனக்கு இன்பம் தருதலைக் குறித்து ஒருவன் செய்யும் தீவினைகள், தொடக்கத்தில் இன்பத்தைத் தருவன போல் தோன்றி, பின்பு இன்பத்தை அழித்து, துன்பத்தையே தருதலால், தீய செயல்களைத் தீயினை விடவும் அதிகமாக அஞ்ச வேண்டும்" என்கின்றது.

     தீயானது எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த உடம்பில் பட்டதோ, அந்த நேரத்தில், அந்த இடத்தில், அந்த உடம்பினை மட்டுமே சுடும். வேறு உடம்பில், வேறு நேரத்தில், வேறு இடத்தில் சென்று சுடுவது இல்லை. ஆனால், தீவினையானது, எந்தக் காலத்தில், எந்த இடத்தில் செய்யப்பட்டதோ, அந்த உடம்பில் உள்ள உயிரை வருத்துவது மட்டும் அல்லாமல், அந்த உயிரை விடாது பற்றிச் சென்று, மற்றொரு காலத்திலும், மற்றொரு இடத்திலும், மற்றோர் உடம்பிலும் வருத்தும்.

     எனவே, தீவினையானது, தீயினை விடவும் மிகவும் அஞ்சத் தக்கது என்றார்.

திருக்குறளைக் காண்போம்...

தீயவை தீய பயத்தலான், தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்,

     தீயவை தீயினும் அஞ்சப்படும் --- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.

         (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்பார் பாடியருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், புகழ்ச்சோழ நாயனார் வரலாற்றை வைத்துப் பாடப்பட்டுள்ள ஒரு பாடல்...

தம்களத்தில் வீழ்ந்த சடைத்தலை கண்டு அஞ்சிஅஞ்சிப்
பொங்கு அழற்குள் வீழ்ந்தார் புகழ்ச்சோழர் --- எங்கும்அறாத்
தீயவை தீய பயத்தாலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

         சோழநாட்டிலே உறையூரிலே புகழ்ச்சோழ நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்றை அரசர்கள் பணிகேட்க, உலகம் தம்முடைய செங்கோலின்முறை நிற்க, சைவசமயம் தழைக்க அரசு இயற்றினார். சிவாலயங்கள் எல்லாவற்றினும் நித்திய நைமித்திகங்களை வழுவின்றி நடத்துவித்தார். சிவனடியார்கள் வேண்டியவற்றைக் குறிப்பு அறிந்து கொடுப்பார்.

         இவ்வாறு அரசியற்றி வரும் நாளிலே கொங்குநாட்டரசரும் குடகநாட்டரசரும் தரும் திறைப்பொருளை வாங்கக் கருதினார். தங்கள் குலத்தவர்களுக்கு உரிய கருவூர் என்னும் இராசதானியில் தாம் அரசுரிமைச் சுற்றத்தாரோடு வந்து அணைந்தார். அங்குள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வணங்கித் தரிசித்தார்.  அரசமாளிகையில் புகுந்தார். அத்தாணி மண்டபத்தை அடைந்தார்.  சிங்காதனத்தில் வீற்றிருந்தார். அரசர்களாகிய கொங்கரும் குடகரும் கொண்டு வந்த திறைப்பொருள்களைக் கண்டார்.  அவர்களுக்கு அருள் புரிந்தார். இப்படி இருக்கும் காலத்திலே சிவகாமியாண்டார் கொணர்ந்த பூக்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகரையும் கொன்ற எறிபத்த நாயனாரை அடைந்து, என்னையும் கொன்றருளும் என்று தமது வாளைக் கொடுத்தார். திருத்தொண்டிலே மிகச் சிறந்து விளங்கினார்.

         அமைச்சர்கள் அரசரை அணுகி வணங்கி, "திறைப்பொருள் கொணர்ந்து செலுத்தாத அரசன் ஒருவன் உளன்" என்றார்.  "அவன் யாவன்?" என்றார் அரசர். "அவனே அதிகன் என்பவன்" என்றார் அமைச்சர். பின்னும் "அவன் மலையாளத்தின் வாழ்பவன்" என விண்ணப்பித்தனர். அதனைக் கேட்ட புகழ்ச்சோழ நாயனார், "நீங்கள் பெரும்படையுடன் சென்று அந்த அரணத்தைத் துகள் துகளாகச் செய்து வாருங்கள்" என்று ஆணையிட்டார். அமைச்சர்கள் சேனையுடன் சென்று அம் மலையரணைப் பொடிபடுத்தி, அதிகனுடைய சேனையை வதைத்தனர். அதிகன் பெரிதும் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டான்.  நாயனார் படைவீரர்களில் பலர், அதிகன் படைவீரர்களின் தலைகளையும், நிதிக் குவைகளையும், யானை குதிரை முதலியவைகளையும் பற்றிக் கொண்டு வந்தனர்.  மந்திரிமாருடன் படைவீரர் கருவூரிலே வந்து சேர்ந்தனர். புகழ்ச்சோழர் அவைகளைக் கண்டார். தலைக் குவைகளுள் ஒருதலையின் நடுவிலே ஒரு புன்சடையினைக் கண்ணுற்றார்.  கண்ட அக்கணமே நடுநடுங்கினார். மனம் கலங்கினார். கைதொழுதார். பெரும் பயத்துடனே எதிர் சென்றார்.  அத்தலையில் சடையைத் தெரியப் பார்த்தார். கண்ணீர் சொரிய அழுதார். "நான் சைவநெறியைப் பரிபாலிப்பது அழகு அழகு" என்றார். "என் அரசாட்சி வெகு நன்று நன்று" எனப் பிதற்றினார். "சடைமுடி உடையார் பெருமானே அன்றோ? அவர் அருளிய மெய்ந்நெறியைக் கண்டவர் இவரே அன்றோ?  இவ் அன்பரின் தலையைத் தாங்கிவரக் கண்டும் அதிபாதகனாகிய அடியேன் பூமியைத் தாங்குதற்கு இருந்தேனோ?" என்றார். "உலகத்தைப் பாதுகாத்துப் பரமசிவனுக்கு வழித்தொண்டு செய்ததற்காக என்னுடைய குமாரனுக்கு முடி சூட்டுங்கள்" என ஆணையிட்டார்.  அக்கினியை வளர்த்தார். விபூதியை உடலெங்கும் உத்தூளனம் செய்தார். சடைச் சிரத்தை ஒரு பொற்கலத்தில் ஏந்தினார்.  அதனைத் தமது திருமுடியிலே தாங்கினார்.  திருவைந்தெழுத்தை ஓதினார். அவ் அக்கினியை வலம் செய்தார். அதனுள் புகுந்து சிவபெருமான் திருவடி நிழலை அடைந்தார். 

         தமக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அது ஒழித்துத் துன்பமே பயத்தலான், அத் தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

காளமுனி பாண்டவர்மேல் ஏவும் கடி விழுங்க
ஏளிதம் ஆனான், இரங்கேசா! - நாளுந்தான்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! காளமுனி --- (துரியோதனன் வார்த்தையைக் கேட்ட) காளமுனிவன், பாண்டவர் மேல் --- (பஞ்ச பாண்டவரைக் கொல்லும்படி) அவர்கள் மேல், ஏவும் --- அனுப்பின, கடி --- பூதமானது திரும்பி வந்து, விழுங்க --- (தன்னையே எடுத்து) விழுங்கி விட, ஏளிதம் ஆனான் --- இகழ்ச்சிக்கு இடமானான், (ஆகையால், இது) நாளும் --- எப்போதும், தீயவை --- தீவினைகள், தீய - துன்பங்களை, பயத்தலால் --- கொடுப்பதனால், தீயவை --- அந்தத் தீவினைகள், தீயினும் --- நெருப்பைக் காட்டிலும் (அதிகமாய்ச் சுடுவதாக),  அஞ்சப்படும் --- (பெரியோரால்) பயந்து நீக்கப்படும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை ---  பாவகாரியங்களைப் பயந்து நீக்கவேண்டும்.

         விளக்கவுரை --- வனத்தில் இருந்த பாண்டவரைக் கொல்ல எண்ணின துரியோதனன் காளமா முனியைக் கொண்டு வாரணயாகம் செய்து, அதிலிருந்து ஒ பூதத்தை உண்டாக்கி, அவர்களைக் கொல்ல ஏவினான். அதை, முன்னரே உணர்ந்த தரும தேவதை பாண்டவர் ஐவரையும் காக்கும் பொருட்டு, வனத்தில் ஒரு நச்சுப்பொய்கை உண்டாக்கி, அவர்களை நெடுந்தூரம் அழைத்துக் கொண்டுபோய், அதன் சலத்தைக் குடிப்பித்து அவர்களுக்கு மரண மூர்ச்சை உண்டாக்கி இருந்தது.  அவர்களைத் தேடி வந்த பூதம், அவர்கள் செத்துக் கிடந்ததைக் கண்டு, பிணங்களைத் தின்னவா காளமுனி நம்மை ஏவினான் என்று பெருங்கோபம் கொண்டு, திரும்பிச் சென்று அம் முனிவனையே எடுத்து விழுங்கிவிட்டுச் சென்றது. பிறகு தருமதேவதை ஐவரையும் எழுப்பிவிட்டதனால் சுகமாய் வனத்தில் வாழ்ந்தார்கள். கேடு செய்த காளமாமுனி, தானே கெட்டுப் போனான்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடியருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
                                                                       
பார முடிபத்தும் பறித்தபழி, சேதுவினில்
தீருதலி னாலே, சிவசிவா! - சாரும்இகல்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

     போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேசுவரம் வந்தபிறகு, சிவ வழிபாட்டில் நின்று அடியவன் ஆன, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட குற்றம் தீ, சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிட்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிட்டை செய்து தனது பூசையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று, தனது வாலினால் இராமபிரான் பிரதிட்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த இலிங்கத்தை முதலில் பிரதிட்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிட்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

     இராமன் இராவணனைக் கொன்ற பழி இராமேசுரத்தில் அவன் சிவனை வழிபட நீங்கிற்று.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...