020. பயனில சொல்லாமை - 04. நயன்சாரா நன்மையின்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலர் முன்னிலையில் ஒருவன் பேசுவது, நீதியோடு பொருந்தாமல், நன்மைகளை அவனிடம் சேராமல் நீக்கும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

நயன்சாரா நன்மையின் நீக்கும், பயன் சாராப்
பண்பு இல் சொல் பல்லார் அகத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்பு இல் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லும் ஆயின்,

     நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.

         (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

புன்சொல்லும் நன்சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்பது அல்லால், ஒருவனை
இன்சொல் இடர்ப்படுப்ப தில்.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஒருவனை --- ஒருவனை, புன்சொல் இடர்ப் படுப்பது அல்லால் --- வன்சொல் இடருள் படுத்துவது அல்லது, இன்சொல் இடர்ப்படுப்பது இல் --- இனியசொல் இடருள் படுத்துவது இல்லை. (ஆகவே), புன் சொல்லும் நன் சொல்லும் பொய்யின்று உணர்கிற்பார் --- இன்னாத சொல்லாலும் இனிய சொல்லாலும் வரும் பயனைக் குற்றமின்றி அறியவல்லார், வன்சொல் வழியராய் --- வன்சொற் சொல்லி அதன் வழியே ஒழுகுபவராய், வாழ்தலும் உண்டாமோ --- வாழ்ந்திருத்தலும் உண்டோ.

     வன்சொல் தன்னை உடையானை இடர்ப்படுத்துதல் என்பதால், அவன் சொல், "புன்சொல்" எனப்பட்டது.

     "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது" என்னும் திருக்குறளோடு இதனையும் வைத்து எண்ணலாம்.

நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்,
பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், - பண்பில்
இழுக்கான சொல் ஆடுவானும், ம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.   ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     நண்பு இல்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் --- நட்புக்குணம் இல்லாதவரிடத்தும் அன்புரிமையைச் செய்கின்றவனும்; பெண்பாலை காப்பு இகழும் பேதையும் --- மனைவியக் காப்பதை இகழுகின்ற அறிவில்லாதவனும்; பண்பு இல் இழுக்கு ஆன சொல் ஆடுவானும் --- குணமில்லாத வழுவுதலான சொல்லைச் சொல்பவனும், இ மூவர் ஒழுக்கம் கடைப்பிடியாதார் --- ஆகிய இம் மூவரும் தமக்குரிய ஒழுக்கத்தை உறுதியாகக் கொள்ளாதவராவர்;

         நண்பராகத் தகாதாரை நட்புச் செய்கின்றவனும் மனைவியைக் காவாதவனும், இழிமொழி பேசுகின்றவனும் நல்லொழுக்கமில்லாதவர் என்பது.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...