திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
21 - தீவினை அச்சம்
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம்
திருக்குறள், "தமக்குத் தீமை
புரிந்தவர்களுக்கும் தீமை செய்யாது விடுவதே, அறிவுகள் எல்லாவற்றிலும்
தலையாய அறிவு ஆகும் என்று நல்லோர் சொல்லுவர்" என்கின்றது.
செய்யத்தக்க இடத்தும் செய்யாது விடுவதே
சிறந்த அறிவு.
திருக்குறளைக்
காண்போம்...
அறிவினுள்
எல்லாம் தலை என்ப, தீய
செறுவார்க்கும்
செய்யா விடல்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அறிவினுள் எல்லாம் தலை என்ப ---
தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார்
நல்லோர்,
செறுவார்க்கும் தீய செய்யா விடல் ---
தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
(விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என
உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது
கடைக்குறைந்து நின்றது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
சீர்க்குள்
அறிவினுள் எல்லாந் தலை என்ப, தீயசெறு
வார்க்கும்
செய்யாவிடல் என்றதனால் கொல், கொல்
வாள் அரக்கன்
போர்க்கு
மெலிதல் கண்டே நாளை வர,இன்று போ என,இப்
பார்க்குள்
உரைத்தது என் சொல்வேன் புல்லாணிப் பதி அண்ணலே.
கொல்வாளரக்கன்
--- கொல்லுகின்ற வாட்படையை உடைய இராவணன்.
இப்பாட்டில் இராமபிரான் போர்க்கு உடைந்த
இராவணனைப் பார்த்து "இன்று போய் நாளை வா" என்று இயம்பிய செய்தி
குறிப்பிடப்பட்டது.
தன்னோடு போரிட்ட இராவணன் நிலை கண்டு, அவனுக்குத் தீமை புரிய அஞ்சிய இராம்பிரான், அவன் திருந்து
ஒரு வாய்ப்பாக,
"இன்று
போய் நாளை வா" என்று சொன்னது, திருவள்ளுவ நாயனார் சொன்ன திருக்குறளுக்கு ஒப்பாக
அமைந்துள்ளது.
பின்வரும்
கம்ப இராமாயணப் பாடல்களைக் காண்க...
நின்றவன்
நிலை நோக்கிய நெடுந்தகை,
இவனைக்
கொன்றல்
உன்னிலன், 'வெறுங் கை நின்றான்' எனக்கொள்ளா;
'இன்று அவிந்தது போலும், உன் தீமை' என்று, இசையோடு
ஒன்ற
வந்தன வாசகம் இனையன உரைத்தான்:
இதன்
பதவுரை ---
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை --- (நிலம் கிளைத்து நின்றவனாகிய)
இராவணனது (அவல) நிலையினைக் கண்ணுற்ற பெரும்பண்பினன்
ஆகிய இராமபிரான்; வெறுங்கை நின்றான் --- (படைக்கலம் ஏதுமின்றி)
வெறுங்கையோடு நிற்கின்றான்; எனக் கொள்ளா --- என்று மனத்துட்கொண்டு; இவனைக் கொன்றல் உன்னிலன் --- இவனைக் கொல்ல நினையாதவனாய்; இன்று
உன் தீமை அவிந்தது போலும் --- இன்றோடு உன்
தீய செயல்கள் அழிந்துவிட்டன போலும்;
என்று
இசையோடு --- என்று (உலகு உள்ளளவும் நிற்கும்)
புகழோடு; ஒன்ற வந்தன வாசகம் இனையன
உரைத்தான் --- பொருந்த வந்தவையான
இவ்வாசகங்களை உரைப்பான் ஆயினான்.
நிராயுதனாய் நிற்பவன் பகைவனே ஆயினும் இரக்கத்திற்கு
உரியவன் என நினைந்ததால் இராமனை "நெடுந்தகை" என்றழைத்து மகிழ்கிறார். தாடகை பெண் எனக்
கண்டு, கொல்லத் தயங்கிய போது, "பெண் என மனத்திடைப் பெருந்தகை நினைத்தான்' (கம்ப. 374) என்றதும் காண்க. இராவணன் உள்ளத்தில் பாவத்
தீயாகிய காமத்தீ ஆணவத்தீ முதலிய
தீக்கள் எரிந்து கொண்டிருந்தனவாதலின், "இன்று அவிந்தது போலும் உன் தீமை?" என்று பெருமான் அழகுறக்
கேட்டான்.
'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால்
அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக்
கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.
இதன்
பதவுரை ---
அறத்தினால் அன்றி --- (இராமபிரான் இராவணனை நோக்கி) அறநெறியினால்
அல்லாமல்; மறத்தினால் --- பாவ நெறியினால்; அருஞ்சமர்
கடத்தல் --- அரிய போர்களில் வெல்லுதல்; அமரர்க்கும்
அரிது --- தேவர்களுக்கும் இயலாததாகும்; என்பது ---
என்பதனை; மனத்திடை வலித்தி ---
உள்ளத்திலே உறுதியாகப் பதித்துக்
கொள்க; பாவி! --- பாவச் செயல்கள்
புரிந்தவனே!; கிளையொடும்
நின் நெடும் பதிபுக --- உன் சுற்றத்தாரொடும் பெரிய
ஊருக்குள் செல்ல; பறத்தி --- விரைகிறாய்; இறத்தி --- நீ
இப்போது
இறப்பாய்; தனிமை கண்டிரங்கி யான்
அது நினைக்கிலென்
--- நிராயுதபாணியாக நீ நிற்கும் அவலம் கண்டு இரங்கி, உன்னைக் கொல்வதனை நான்
நினைக்க வில்லை.
எதிரிக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, தக்க சமயம் வந்தது என்று
அவனைக் கொல்லாது, உபகாரம் செய்து உயிருடன் அனுப்புதல்
பேராண்மை என்பதாகும். "பேராண்மை என்பதறுகண் ஒன்று உற்றக்கால், ஊராண்மை மற்றதன் எஃகு" என்ற குறளும் (773)
அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இங்கும்
பின்னும் நினைக.
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன
மாருதம் அறைந்த
பூளை
ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை
வா' என நல்கினன்--நாகு இளங்
கமுகின்
வாளை
தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
இதன்
பதவுரை ---
ஆள் ஐயா --- அரக்கரை ஆள்கின்ற ஐயா; உனக்கு அமைந்தன --- உனக்குத் துணையாக அமைந்திருந்த படைகள் அனைத்தும்; மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை --- பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து
போயினமையைக் கண்டாய்; இன்று போய் நாளை போர்க்கு வா --- இன்று உன் இலங்கை அரண்மனைக்குச் சென்று, (மேலும் போர் புரிய விரும்பினால்) போர்க்கு நாளைக்கு வருவாயாக; என --- என்று; நல்கினன் --- (இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான்; (யார் என்னில்) நாகு இளங்கமுகின் --- மிகவும் இளைய பாக்கு மரத்தின்
மீது; வாளை தாவுறும் கோசல நாடுடை வள்ளல் --- வாளை மீன்கள்
தாவிப் பாயும்
(நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய
இராமபிரான்.
தன் மனையாட்டியை
வஞ்சித்து இன்னும் சிறை வைத்துள்ள மாபாதகன், நிராயுதனாகக் கண்முன் நிற்பது அறிந்தும், அவனைக் கொல்லாது,"இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என நவின்ற அருள் மனம் சான்றோர் பலரின் உள்ளங் கவர்ந்ததாம். இதுவே தழிஞ்சி
எனும் புறப்பொருள் துறையாயிற்று."அழியுநர்
புறக்கொடை அயில்வாள் ஓச்சாக் கழி தறுகண்மை காதலித்து
உரைத்தன்று" (புறப், வெண்.72) என இதனை ஐயன்
ஆரிதனார் போற்றுவார்.
"பேராண்மை என்ப தறுகண்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று
அதன் எஃகு" (குறள் 773) எனத் திருவள்ளுவரும்
போற்றுவார். இதற்கு, உரை வரைந்த பரிமேலழகர்,
"ஊராண்மை-உபகாரியாம்
தன்மை.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்தமை காணலாம்...
நாகத்து
அன்ன பாகார் மண்டிலம்
தமவே
ஆயினும், தம்மொடு செல்லா
வேற்றோர்
ஆயினும், நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற
பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நார்
அரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து,
இரவலர்க்மு
அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல்
வேண்டும், இவண் வரைந்த வைகல்
வாழச்
செய்த நல்வினை அல்லது,
ஆழுங்
காலைப் புணை பிறிது இல்லை,
ஒன்றுபுரிந்து
அடங்கிய இருபிறர் பாளர்
முத்தீப்
புரையக் காண்தக விருந்த
கொற்ற
வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான்
அறி அளவையோ இதுவே, வானத்து
வயங்கித்
தோன்றும் மீனினும், இம்மென
இயங்கு
மாமழை உறையினும்
உயர்ந்து, மேந் தோன்றிப்
பொலிகநும் நாளே. --- புறநானூறு.
சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளியும் ஆகிய மூவேந்தரும், ஒரு சேர, ஓரிடத்தில்
இருந்ததைக் கண்ட ஔவையார், நல்லதே செய்து நலமுடன் அவர்கள் வாழவேண்டும் என்று
வாழ்த்திய பாடல் இது.
இதன்
பொழிப்புரை ---
நாகலோகம் போன்ற தெய்வச் சிறப்பு எல்லாம்
பொருந்திய இந்தப் பூவுலகம் முழுதும் தம்முடையே என்று ஆண்ட மன்னர்களாயினும், இவர்கள் இறந்த பின், அவர்கள்
சேர்த்து வைத்த செல்வ வளங்கள் அவரோடு கூடச் செல்லாது. மாறாக, அவை
அவற்றிற்குச் சற்றும் தொடர்பு இல்லாத, வேற்றவர்க்கு உரிமை உடையது ஆகிவிடும்.
எனவே,
இல்லை
என்று கேட்டு வரும் பார்ப்பாருக்கு, அவர்கள் ஈரக்கை நிறையும் அளவுக்குப் பூவும், பொன்னும் தந்து, நீர் வார்த்துத்
தானம் கொடுப்பதும், அணிமணி பூண்ட அழகு மங்கையர் பொன் கிண்ணத்தில் ஊற்றித் தரும்
நாரில் வடிகட்டிய தேனை உண்டும், பரிசில் கேட்டு வரும் இரவலர்களுக்கு பல அரிய
பொருட்பகளைத் தானமாகத் தந்தும், இவ்வுலகில் வாழ விதித்த வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியோடு வாழ்வது ஒன்றே இறுதி நாளில் உயிர்க்குத் துணையாக இருந்து உதவுமே
அன்றி,
வேறு
துணை ஏதும் இல்லை. வீடுபேறு அடைவது ஒன்றையே விரும்பி, முத்தீ வளர்த்து, ஆசைகளை அடக்கி
வாழும் அந்தணர்கள் எழுப்பும் வேள்வித் தீ போல, காண்பவர் கண்கள்
பெருமைப்பட வாழ்ந்த, வெண்கொற்றக் குடையும், கொடி அணிந்த
தேர்ப்படையையும் உடைய வேந்தர்களே! எனக்குத் தெரிந்தது இதுதான். அது, வானில் தெரியும்
விண்மீன்கள் எண்ணிக்கையிலும், இம்மென்ற ஒலியோடு பொழியும் மழைத் துளிகள்
அளவிலும்,
மிகுதியானதாக
உம்முடைய வாழ்நாள் எளம் பெற்று விளங்குவதாக இருக்கவேண்டும் என்பதே ஆகும்.
மனைப்பாசம்
கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி,
எனைத்து
ஊழி வாழ்தியோ? நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே
ஆயினும் செய்தநன்று அல்லால்
உறுபயனோ
இல்லை உயிர்க்கு. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி ---
மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப் பற்றை இன்னும்
விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ
நெஞ்சே --- நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை
ஊழி வாழ இருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையே ஆயினும்
செய்த நன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு --- சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி
உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை.
செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து
வரும்.
தம்மை
இகழ்ந்தமை தாம்பொறுப்பது அன்றி,மற்று
எம்மை
இகழந்த வினைப்பயத்தால் --- உம்மை
எரிவாய்
நரகத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம்
சான்றோர் கடன். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி ---
காரணம் இன்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதும் அல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் --- எம்
போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால் , உம்மை --- மறுமையில், எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று ---
ஒரு கால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று, பரிவதும் சான்றோர் கடன் --- இரங்குவதும்
தவம் நிறைந்தவரது கடமையாகும்.
தவமுயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர் பால் பொறுமையும் இரக்கமும்
கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment