016. பொறையுடைமை - 02. பொறுத்தல் இறப்பினை





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 16 - பொறை உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "பொறுமை கடலினும் பெரிதாகையால், பிறர் செய்த தீமையை, தாம் தண்டித்தற்கு உரிய காலத்திலும் பொறுத்திடல் வேண்டும். அத் தீமையை அப்பொழுதே மறந்து விடுதல், பொறுத்தலை விடவும், மிகவும் நல்லது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை
மறத்தல் அதனினும் நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     என்றும் இறப்பினைப் பொறுத்தல் --- பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க;

     அதனை மறத்தல் அதனினும் நன்று --- அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.

       ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பல வாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

கல்எறியையும் பொறுத்துக் கண்ணுதலார் தாம் மறந்து,
நல்ல பதம் அவர்க்கு நல்கினார்  ---  வல்லி
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.                   

         கண்ணுதலார் --- சிவபிரான். அவர்க்கு --- கல்லால் எறிந்த சாக்கிய நாயனாருக்கு.

     புறச்சமயத்தார் ஆகிய சாக்கிய நாயனார் சிவபெருமான் மீது தமக்கு மிகுந்த அன்பு இருந்தும், தம் மதத்தாரின் கட்டுப்பாட்டுக்கு அஞ்சினவராகி, கற்களை மலர்களாகப் பாவித்து, சிவலிங்கத்தின் மீது சாத்தும் பாவனையாக எறிந்தார். இந்தத் தலையன்பு காரணமாக அவருக்குத் சிவபதம் கிடைத்தது. என்பது.

சாக்கிய நாயனார் வரலாறு

     சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கை என்னும் தலத்தில், வேளாளர் மரபில் தோன்றியவர். உயிர்கள்பால் இரக்கம் உடையவர். பிறப்பு இறப்புத் துன்பத்தில் இருந்து உயிர்கள் விடுதலை அடையும் வழியைக் குறித்த விசாரத்தில் அவர் பெரிதும் தலைப்பட்டார். கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகரத்தை அடைந்தார். பல மார்க்கங்களையும் ஆய்ந்து, புத்த சமயத்தில் நின்றார். அந்த நெறியில் அவர் ஒழுகி வரும் நாளில், அவர் சமய உண்மைகளை ஆராய்ந்த வண்ணமாகவும் இருந்தார். அந்த ஆராய்ச்சியால், அவருக்கு உண்டான தெளிவும், திருவருளும், அவருக்குச் சிவநெறியே சிறந்த நெறி என்று தோன்றியது. அதானல், அவர் சிவநெறியில் நிற்கலானார். புத்தர் கோலத்தை நீக்காமலேயே அவர் இருந்தார். "எந் நிலையில் நின்றாலும், எக் கோலம் கொண்டாலும், மன்னிய சீர்ச் சங்கரன் திருவடியை மறவாது இருத்தலே பொருள்" என்னும் பரந்த உணர்வு அவரிடத்தில் உண்டாயிற்று. அதனால், புத்த வேடம் தாங்கியே அவர் சிவனடியைச் சிந்தை செய்து வந்தார்.

     சிவலிங்கத்தைக் கண்டு வழிபட்ட பின்னரே, உண்ணுதல் வேண்டும் என்று ஓர் உறுதியை அவர் மேற்கொண்டார். அப்படியே ஒழுகி வந்தார். ஒரு நாள், ஒரு வெளியிலே உள்ள சிவலிங்கத்தைக் கண்டார். கண்டதும் மகிழ்ந்து, வழிபடவேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்தார். அதைச் சிவலிங்கத்தின் மீது எறிந்தார். சிறு குழந்தைகள் எது செய்தாலும், பெற்றோருக்கு மகிழ்வு உண்டாதல் போல, தாயினும் இனிய சிவபெருமானுக்கு அது மகிழ்வூட்டியது. சிவபெருமான் திருவருளாலேயே கல்லை எறிய வேண்டும் என்னும் எண்ணம் உண்டானதாக எண்ணி, கல்லை எறிதலையே தொண்டாகக் கொண்டு நாள்தோறும் ஒழுகி வந்தார்.

     ஒரு நாள், சிவபெருமான் திருவருளால், கல் எறியும் நியதியை மறந்து உணவு கொள்ளப் புகுந்தார். அந்த வேளையில், தொண்டு நினைவு அவருக்குத் தோன்றியது. நாயானார் தொண்டை மறந்ததை எண்ணி வருந்தி, விரைந்து வந்து சிவலிங்கத்தைக் கண்டார். கல்லை எடுத்து, பெருமான் மீது எறிந்தார். சிவபெருமான், நாயனார் தொண்டுக்கு மகிழ்ந்து உமையம்மையுடன் மழவிடை மேல் தோன்றி அருள் புரிந்தார்.

நாள்தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து,
மாடுஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு, மனம்
நீடுஓடு களி உவகை நிலைமை வர, செயல் அறியார்,
பாடுஓர் கல்கண்டு, அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்.

கல்லாலே எறிந்ததுவும் அன்பு ஆனபடி காணில்
வில் வேடர் செருப்பு அடியும் திருமுடியின் மேவிற்றால்,
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்ததனை
அல்லாதார் கல்என்பார், அரனார்க்கு அஃது அலர் ஆமால்.

எனவரும் பெரியபுராணப் பாடல்களை நோக்குக.
                                                              
     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ; --- நிறக்கோங்கு
உருவ வண்டு ஆர்க்கும் உயர்வரை நாட !
ஒருவர் பொறை இருவர் நட்பு. ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ --- தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள் செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியானதொன்று அன்றோ!, நிறக்கோங்கு உருவ வண்டு ஆர்க்கும் உயர்வரை நாட --- நிறமான கோங்கமலரில் அழகிய வண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!, ஒருவர் பொறை இருவர் நட்பு --- ஒருவரது பொறை இருவர் நட்புக்கு இடம்.

         பொறுத்தலால் நட்பு வளர்தலாலும், அஃதொரு பெருந்தன்மை ஆதலாலும் நட்பிற் பிழை பொறுத்தல் வேண்டும்.


பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் --- இழைத்த
பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று.   ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     பிழைத்தல் பொறுத்தல் பெருமை -- (தனக்குப் பிறனொருவன் செய்த பிழையை பொறுத்துக் கொள்ளுதல் பெருமை தருவது ஆகும்; இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் சிறுமை --- பிறர் செய்த தீமையை நினைத்துக்கொண்டே இருத்தல் சிறுமை ஆகும்; இழைத்த பகைகெட வாழ்வதும் --- தான் செய்த பிழைகள் கெடும்படி வாழ்தலும், பல் பொருளார் நல்லார் நகை கெட வாழ்வதும் நன்று --- பல பொருள்களையுடைய செல்வர்களும், பெரியோர்களும் ஏளனஞ்செய்து நகைப்பது நீங்க வாழ்தலும் நன்மை ஆகும்.

         தனக்குப் பிறன் ஒருவன் செய்த பிழையைப் பொறுத்தல் பெருமையாவது. பிறர் இழைத்த தீங்குகளை மறவாதிருத்தல் சிறுமையாவது.  தான் செய்த பிழைகளைப் பின்பு கெட வாழ்தலும், பலபொருள்களையும் உதவியோரும் நல்லோரும் இகழ்ந்து நகும் நடையினைக் கெட வாழ்தலும் நன்று.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...