019. புறங்கூறாமை - 02. அறன் அழீஇ




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், " ஒருவனைக் காணாதபோது அவனைப் பற்றிப் பழிச்சொற்களைப் பேசிவிட்டு, கண்டபோது, பொய்யாக முகம் மலர்ந்து பேசுதல் என்பது, அறத்தை அழித்து, அதற்கும் மேல் தீய செயல்களைச் செய்வதிலும் தீமையானது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே,
புறன் அழீஇப் பொய்த்து நகை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது --- அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து;

     புறன் அழீஇப்பொய்த்து நகை --- ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.

         (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)



     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்.

தாக்கு உற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்கு உற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்
மூக்கு அற்றதற்கு இல் பழி.          ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     என் ஆனும் --- எப்படி ஆயினும், மூக்கு அற்றதற்கு பழி இல் --- மூக்கு அறுபட்டதற்குப் பழிப்பு இல்லை (அதுபோல), தாக்கு உற்ற போழ்தில் தமரே போல் நன்கு உரைத்து --- ஒருவரைத் கண்ட பொழுது தம் உறவினரைப் போல் அன்புடன் நன்றாகப் புகழ்ந்து உரைத்து, போக்கு உற்ற போழ்தில் --- அவர் நீங்கிய இடத்து, புறன் அழீஇ --- புறம் பேசுபவர்களைப் பற்றி இழித்துப் பேசுபவரால், மேன்மைக்கண் நோக்கு அற்றவரை --- மேன்மைக் குணத்தின்கண் கருத்து இல்லாதவர்களை, பழித்தல் என் ---இகழ்ந்துரைத்தல் ஏன்?

         மூக்கு அற்றதற்குப் பழிப்பு இல்லாதது போல், மேன்மைக்கண் நோக்கம் இல்லாதவர்களிடம் புறங்கூற வேண்டா என்று இகழ்ந்துரைத்தலில் பயனில்லை.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...