திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
17 - அழுக்காறாமை
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறள், "அறிவு உடையவர்கள்
பொறாமைப்படுதல் என்னும் தீய வழியால் தமக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்பம்
உண்டாவதை அறிந்து, பொறாமை காரணமாக, அறம் அல்லாத செயல்களைச் செய்ய
மாட்டார்" என்றது.
அறம் அல்லாதவையாவன --- செல்வம் கல்வி
முதலியவை உடையவரிடத்தில், மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும், தீமை செய்ய
நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆகிய
மூன்றும்.
திருக்குறளைக்
காண்போம்....
அழுக்கு
ஆற்றின் அல்லவை செய்யார்,
இழுக்கு
ஆற்றின்
ஏதம்
படு பாக்கு அறிந்து.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அழுக்காற்றின் அல்லவை செய்யார் --- அழுக்காறு
ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்;
இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து
--- அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.
(அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து,
இராமலிங்க
சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில்
இருந்து ஒரு பாடல்...
ஆர்த்த
பொறாமைச் சிசுபாலன், கண்ணன் ஆழியினால்
மூர்த்தம்அறுப்பு
உண்டான், முருகேசா! - கூர்த்த
அழுக்காற்றின்
அல்லவை செய்யார், இழுக்காற்றின்
ஏதம்
படுபாக்கு அறிந்து.
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, ஆர்த்த பொறாமை
சிசுபாலன் --- பேராரவாரம செய்த பொறாமையினை உடைய சிசுபாலன், கண்ணன் ஆழியினால் --- கண்ணனுடைய சக்கரப்
படையினாலே, மூர்த்தம் அறுப்புண்டான்
--- தலை அறுபட்டு மாண்டான். கூர்த்த --- நுட்பமாகப் பொருந்திய, அழுக்காற்றின் --- பொறாமையினால், ஏதம் படுபாக்கு அறிந்து --- குற்றம்
உண்டாதலை உணர்ந்து, இழுக்காற்றில் ---
தீநெறிக்கண் சென்று, அல்லவை செய்யார் ---
அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.
பொறாமையினால் சிசுபாலன் தலை அறுப்புண்டு
மாண்டானாகையால், பொறாமை காரணமாக
எவரும் அறம் அல்லாத காரியங்களைச் செய்யார் என்பதாம்.
மூர்த்தம் --- உறுப்பு, தலை. அழுக்காறு --- பிறருடைய மேன்மையைக்
கண்டு உள்ளம் புழுங்குதல்.
சிசுபாலன் கதை
தருமர் குதிரை வேள்வியாகிய அசுவமேத
யாகத்தை மிகுந்த சிறப்போடு செய்து முடித்தார். வேள்வியின் இறுதியில் முதல் வழிபாடு
யாருக்குச் செய்வதென்னும் ஐயம் தருமருக்கு உண்டாகியது. அங்கிருந்த பெரியோர்களை அது
குறித்து உசாவினார். கண்ணபிரானே முதல் வழிபாட்டிற்குரியவர் என்று வியாச முனிவர்
விளம்பினார். தருமர் கண்ணபிரானுக்கு முதல் வழிபாடு செய்யத் தொடங்கினார். இதனைக்
கண்ட சிசுபாலன் கண்ணபிரானிடத்தில் பொறாமை கொண்டான். கண்ணபிரான் மீது பல
குற்றங்களைக் கூறிப் பலவாறு இகழ்ந்தான். இதனைக் கண்டு கண்ணபிரான் மிகுந்த சினம்
கொண்டார். தன்னுடைய ஆழிப்படையை சிசுபாலன் மீது செலுத்தினார். அவ் ஆழிப்படை
சிசுபாலனுடைய தலையை அறுத்து அவனைக் கொன்றது.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக
அமைந்திருத்தலைக் காணலாம்....
தாரணியில்
எவரேனும் துயர் உறில் தன்
தலையின்முடி தரித்தது ஒப்பாம்,
சீரணியும்
செல்வம் அவர் படைத்திடில் தன்
தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,
காரணமே
ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்
தன்வலியால் கணத்துக்கு உள்ளே
பூரணமா
ஆக்கிடுவோன், பொறாமை உளோன்
அன்றி எவர் புவியின் கண்ணே. ---
நீதிநூல்.
இதன்
பொழிப்புரை ---
பிறர் வாழ மனம் பொறுக்காத் தீயோருக்கு
உலகில் யார் துன்புறினும் தம் தலையில் முடி சூடியது ஒப்பாம். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்தது ஒப்பாம். இப்படி ஒரு காரணமும் இன்றி நொடிப் பொழுதினுள்
தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வன்மை பொறாமை உள்ளவர்க்கு அன்றி
எவர்க்கு முடியும்?
வவ்விடலே
முதலாய வினையால் ஒவ்
வோர் பயன் கை வந்து கூடும்,
அவ்வினைகள்
இயற்ற வெவ்வேறு இடம் கருவி
சமையமும் வந்து அமைய வேண்டும்,
எவ்விடத்தும்
எப்பொழுதும் ஒழியாமல்
எரி என்ன இதயம் தன்னைக்
கவ்வி
உண்ணும் அவ்வியத்தால் கடுகு அளவு
பயன் உளதோ கருதுங் காலே. --- நீதிநூல்.
இதன்
பொழிப்புரை ---
கவர்தல் முதலாகிய தீமைகளால் ஒவ்வொரு பயன்
வந்து கை கூடும். அதற்கும் இடம்,
கருவி, காலம் எல்லாம் பொருத்தமாக அமையவேண்டும்.
உள்ளத்தைத் தீப்போல் கவர்ந்து மேலெழும் பொறாமைக் குணத்துக்கு இடம், காலம் ஏதும் வேண்டா. எப்பொழுதும்
நிகழும். ஆனால், அதனால் கடுகளவு
பயனும் கிடையாது.
No comments:
Post a Comment