022. ஒப்புரவு அறிதல் - 08. இடனில் பருவத்தும்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "தாம் செய்யத்தகுந்த நற்காரியங்களை அறிந்த இயற்கை அறிவினை உடையோர், தமது செல்வம் சுருங்கிய காலத்தும், ஒப்புரவு செய்தற்குத் தளரார்" என்கின்றது.

திருக்குறைளக் காண்போம்...

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்,
கடன் அறி காட்சி அவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் --- செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்,

     கடன் அறி காட்சியவர் --- தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார்.

         (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)
    
     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரியபுராணத்தில் வரும் அதிபத்த நாயனார் வரலாற்றினை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மேனாட்செல் வம்கெடினும் மீன்வலைவீ சிக்கோர்ஒண்
மீன்நாளும் விட்டார் அதிபத்தர் - ஆனாது
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி அவர்.

         சோழநாட்டிலே நாகப்பட்டினத்திலே கடற்கரையில் உள்ள நுளைப்பாடியிலே பரதவர் குலத்தில் அதிபத்த நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்கட்குத் தலைவர். அவர் மரபினுக்கு ஏற்ப வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்று வாழ்ந்து வந்தார். சிவபத்தியில் மிகச் சிறந்தவர். அகப்படும் மீன்களில் ஒரு தலைமீனை இது சிவபெருமானுக்கு எனக் கூறி மிக்க அன்புடன் எப்போதும் விட்டு வருவதை நியமமாகக் கொண்டு ஒழுகி வந்தார். ஒருநாளிலே ஒரு மீன் வருவதாயினும் அதனைச் சிவனுக்கென்றே விடுவார்.  இப்படியாக நாட்கள் பல கழிந்தன. அடுத்தடுத்து அநேக நாட்களில் ஒரு மீனே அகப்பட்டது. அதனைக் கடலிலே விட்டுவரும் செயலையே அவர் மேற்கொண்டார். மீன் விற்று வரும் வளம் சுருங்கியது. சுற்றத்தார் உணவின்றி வருந்தினர் எனினும் நாயனார் வருந்திலர். பட்ட மீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு அகமிக மகிழ்ந்தனர். இப்படிப் பல நாட்கள் சென்றன. உணவின்றி உடல் தளர்ந்தது. ஆயினும் அவர் மனம் தளர்ந்திலர். அவர் அன்பினை இறைவர் அறிந்தார். இப்படி நிகழும் நாளிலே வேறு ஒருநாள் விலைமதிப்பு இல்லாத பேரொளிப் பிழம்பினை உடைய நவமணிகளால் உறுப்புக்கள் அமைந்த அற்புதமான ஒரு மீனைப் பரதவர் வலைப்படுத்தனர்.  அதனை ஒரு மீன் படுத்தோம் எனத் தலைவருக்கு விண்ணப்பித்தனர் பரதவர். அதிபத்த நாயனாரும் அந்த மீனைக் கண்டார். இப் பொன்மீன் என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்காம் என்று கடலிலே விட்டார். அப்பொழுது சிவபெருமான் இடபவாகனக் காட்சி தந்தருளினார். அதிபத்தர் ஆனந்த அருவி சொரிய மனம் கசிந்து உருகி வணங்கினார்.  அவரைச் சிவபெருமான் அடியார்களோடு தமது உலகத்தில் இருக்கும்படி அருளினார்.

         செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார் தாம் செய்யத் தகுவனவற்றை அறிந்த இயற்கை அறிவு உடையார் என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

         வலைவீசிக்கு - சிவபெருமானுக்கு.  இறைவன் வலைவீசின வரலாற்றைத் திருவிளையாடல் புராணத்தில் காண்க.

     அடுத்து, இத் திருக்குளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தொண்டருக்கு ஏற்றும் தருமசீலர்அமுதுத் தொகுத்தார்
முண்டகன்மால் போற்றும், முருகேசா! - மிண்டும்
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

இதன் பதவுரை ---

     முண்டகன் மால் போற்றும் முருகேசா --- நான்முகனாலும் திருமாலாலும் போற்றப் பெறும் முருகப் பெருமானே,   தருமசீலர் --- தருமசீலர் என்பவர், தொண்டருக்கு --- தமை அடைந்த அடியார்க்கு, ஏற்றும் --- இரந்தும்,  அமுது தொகுத்தார் --- அமுதூட்டிப் போற்றினார், மிண்டும் --- மிகுதியாக வருத்தும், இடன் இல் பருவத்தும் --- உணவிடுதலாகிய பணியைச் செய்வதற்குத் தகுதியில்லாத காலத்திலும், கடன் அறி காட்சி அவர் --- தாம் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்த அறிவை உடையவர்கள், ஒப்புரவிற்கு ஒல்கார் --- உதவி செய்வதற்குத் தளரமாட்டார்கள்.

         தருமசீலர் என்பவர் தாம் வறுமை அடைந்த காலத்திலும் ஐயம் ஏற்று உணவிடும் பணியைச் செய்தார்.  தாம் செய்வேண்டிய கடமையை உணர்ந்த பெரியோர்கள் செயவதற்குத் தகுதியில்லாத காலத்திலும் கூடப் பிறருக்கு உதவி செய்வதற்குத் தளரமாட்டார்கள் என்பதாம்.

                                             தருமசீலர் கதை

         திருக்கூவம் என்னும் பகுதியிலே தருமசீலர் என்னும் பெயருடைய அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபட்டுக் கொண்டிருந்ததோடு தம்மிடம் வந்த அடியவர்கட்கெல்லாம் உணவிடும் பணியையும் செய்து கொண்டிருந்தார். ஒருகாலத்தில் மழையில்லாமல் வற்கடம் உண்டாகியது. தம்மிடமிருந்த செல்வங்களை எல்லாம் செலவிட்டார். பிறகு தம்முடைய மனைவியின் தாலி முதலியவற்றையும் விற்றுத் தாம் மேற்கொண்டிருந்த பணியை நடத்தினார். பிறகு ஐயமேற்று நடத்தினார். ஒரு சமயத்தில் எட்டு நாள் பலியேற்றும் இடுவாரின்றி வாடினார். ஒருநாள் அடியவர் ஒருவர் பசித்தடைய, அவரை இல்லத்தில் இருத்திவிட்டு நகர் முழுவதும் சென்று பலியேற்றார். அகப்பட்ட இருநாழி நெல்லைக் கொண்டு சமைத்து உணவருத்தினார். வந்தவரை அனுப்பிவிட்டுத் தாம் உண்ணச் சென்றார். அச் சமயத்தில் இறைவன் முதியவராக வந்து உணவு வேண்டினார். தருமசீலர் தம்முடைய பசியைப் பொருட்படுத்தாமல் அவரை வணங்கி எஞ்சியிருந்த உணவைப் படைத்தார். கடவுள் திருவுள்ளம் மகிழ்ந்து நாளும் ஒரு குடம் செந்நெல் அளித்தார். அதனால் எண்ணிறந்த அடியார்கட்கு அமுதளித்து எஞ்சியதை உண்டு சிவனடி சேர்ந்தார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தொல் காசினியில் இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு
ஒல்கார் கடன்அறி காட்சியவர் எனல் ஓர்தருமன்
செல்கானின் நூற்றுவர் சொல்கோதினால் தவர்சீரமுது
நல்காய் என நல்கினான் புல்லலைமால் அருள் நன்மைபெற்றே.

     தொல் காசினியில் --- பழைமையான பூவுலகில். சொற்கோதினால் --- சொல் குற்றத்தால். தவர் --- துருவாச முனிவர். சீர் அமுது நல்காய் என --- நல்ல உணவு படைப்பாயாக என்று கேட்க. அருள் நன்மை.

     ஒரு அட்சய திருதியை நாளன்று, துரியோதனனின் அரண்மனைக்கு துர்வாசரும் அவருடைய சீடர்களும் செல்கிறார்கள். காலை நேரத்தில் நல்ல உணவு உண்டு,மனத் திருப்தி அடைந்து துரியோதனனை வாழ்த்தி விடை பெற முனைகிறார்,முனிவர் துர்வாசர். தீய எண்ணத்துடன் துரியோதனன் இதே சிறப்பைப் பாண்டவர்களும் பெறவேண்டும். ஆகையால் காட்டில் வாழும் அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விருந்து உண்டு, அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அவ்வாறே செய்வோம் என துர்வாசர், துரியோதனனிடம் கூறிவிட்டுப் பாண்டவர்கள் வாழும் காட்டிற்குச் சென்றார். துர்வாச முனிவரின் சீடர்கள் மிகப் பலர். அவர்கள் அனைவருக்கும் உணவு சமைக்கப் பாண்டவர்கள் அவதிப்படுவர்; அவர்களால் முடியாது. திரௌபதியிடம் ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. அதில் அள்ள அள்ள உணவு குறையாது. ஆனால், ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள் தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், காலையில் துரியோதனன் அரண்மனையில் தன் சீடர் பலருடன் வயிற்றை நிரப்பியாயிற்று. இனி, மதிய உணவிற்குத் தான் பாண்டவர் இருப்பிடம் செல்வார்கள். அதற்குள், திரௌபதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவ்வளவு பேருக்கும் சமைக்க முடியாது; பசியினால் துர்வாசரின் கோபம் பொங்கி எழும்; பாண்டவர்களைத் தன் சாபத்திற்கு உள்ளாக்குவார்; அவர்கள் அழிவார்கள் என்பது துரியோதனின் திட்டம்.

     துரியோதனன் வேண்டியபடியே துர்வாசர் பாண்டவரிடம் செல்கிறார்; மதிய உணவு தங்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி சீடர்களுடன் ஆற்றுக்குச் செல்கிறார். துரியோதனன் எதிர் பார்த்தபடியே, அட்சய பாத்திரத்தை முற்பகலில் பயன்படுத்தி, வந்தவர்களுக்கு விருந்தளித்து, அதைக் கழுவி கவிழ்த்து வைத்திருந்தாள். கவலையுற்ற திரௌபதி கிருஷ்ணரை வேண்ட, அவர் அட்சய பாத்திரத்தை எடுத்து வரும்படி கூறினார்: அது பயன்படாது, கழுவியாயிற்று என திரௌபதி கூறினாள். இருப்பினும் கிருஷ்ணரின் வற்புறுத்தலால் பாத்திரத்தைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக, அந்தப் பருக்கையை வாயில் போட்டு விழுங்கினார். உலகில் உள்ளவர்கள் பசியை எல்லாம் அந்த ஒரு சோற்றுப் பருக்கை போக்கிவிட்டது. துர்வாச முனிவரும் அவருடைய சீடர்களும் அவ்வாறே வயிறு நிரம்பியதாக உணர்ந்தனர். பாண்டவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினர்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...                           

செல்வம் மேவிய நாளில் இச்செயல்
         செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும்
         வல்லர் என்றுஅறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல
         மறைந்து நாள்தொறும் மாறிவந்து
ஒல்லை யில் வறுமைப் பதம்புக
         உன்னி னார்தில்லை மன்னினார். ---  பெரியபுராணம் (இளையான்குடிமாறர்)

இதன் பொழிப்புரை ---

     தமக்குச் செல்வம் பெருகி இருந்த காலத்தில் இவ்வாறு அடியவர் வழிபாட்டைச் செய்து வந்ததன்றி, செல்வம் சுருங்கி, துன்பத்தை விளைவிக்கும் வறுமை உண்டாய இடத்தும், தமக்கு உரிய உண்மையான பத்திமையால் இவ்வாறு செய்வர் என்பதை யாவர்க்கும் அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நிலைமை திரிய விரைவில் வறுமைத் தன்மையை அடையுமாறு, தில்லை மாநகரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டருளினார்.

இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு.    --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     இல்லாவிடத்தும் --- பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் --- கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து --- பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு --- ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா --- அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.


எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுஆவர்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.        --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     எற்று ஒன்றும் இல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத் தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் --- கையில் எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும் உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத் தம்மையடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக் காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்; அற்றக் கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக் கால் தெற்றெனத் தெள்நீர் படும் --- நீரற்ற காலத்தும், அகன்ற ஆறுசற்றுக் குழிதோண்டிய காலத்தில் விரைவாகத் தெளிநீர் ஊறி உதவும்.

         குடிப்பிறந்தார் எந்நிலையிலும் தம்மை அண்டியவரின் தளர்ச்சிக் காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்.


உறைப்பு அரும் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது.       --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     உறைப்பு அரு காலத்தும் ஊற்று நீர்க் கேணி இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் --- மழை துளித்தல் இல்லாத காலத்திலும் ஊற்று நீரை உடைய சிறிய நீர்நிலை இறைத்து உண்ணுவதாயினும் ஊரிலுள்ளார் அனைவர்க்கும் உதவும் என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் --- அதுபோல வறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும், சாயக் கண்ணும் பெரியார் போல் மற்றையார் ஆயக்கண்ணும் அரிது --- தமது நிலைமை குறைவான காலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல் போலப் பெரியர் அல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்த காலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும்.

         நிலைமை குறைந்த காலத்தும் பிறர்க்கு இயன்றது உதவ முற்படுதலே பெருந்தன்மையாகும்.

உறுபுனல் தந்து உலகு ஊட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை.       --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     உறு புனல் தந்து உலகு ஊட்டி --- நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்து உலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல் ஊற்றுழி ஊறும் ஆறே போல் --- நீர் வறளுங் காலத்தும் தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும் ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி --- உள்ள காலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவி செய்து,கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கும் ஆற்றிச் செய்வர் செயற்பாலவை --- அப் பொருள் கெட்டு நிலையழிந்த காலத்தும் மேன்மக்கள், சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம் செய்தற்குரிய கடமைகளைச் செய்து கொண்டிருப்பர்.

         எந் நிலையிலும் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும்.

ஈட்டிய ஒண்பொருள் இன்று, னினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்று ஏறாய் விடும்.    ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஏற்றுக் கன்று --- நல்ல எருதிற்குப் பிறந்த ஆண் கன்று, ஆற்றவும் போற்றப்படாதாகி --- மிகவும் பாதுகாக்கப் படாததாய், புல்லின்றி மேயினும் --- பசும் புற்கள் இன்றி யாதானும் ஒன்றை மேய்ந்தாலும், ஏறு ஆய்விடும் --- பின்னர் எருதாக ஆகிவிடும்; (அதுபோல) மனை பிறந்த சான்றவன் --- நல்ல குடியின்கட் பிறந்த அறிவுடையோன், ஈட்டிய ஒண்பொருள் இன்று எனினும் --- தான் தேடிய மிக்க செல்வம் இல்லை யாயினும், ஒப்பரவு ஆற்றும் --- உலக நடையினை அறிந்து செய்யவல்லனாம்.

         நற்குடிப் பிறந்தார் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார். ஏற்றுக் கன்று புல்லின்றி இருப்பினும் ஏறாய் விடுதல்போல, பொருள் இன்று எனினும் குடிப்பிறந்தார் குடிக்குரியதாகிய ஒப்புரவு செய்யாதிரார் என்பதாம்.


அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்டு அறிவாம் என்று எண்ணி இராஅர்
மடங்கொண்ட சாயல் மயில்அன்னாய்! சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன்.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     மடம் கொண்ட சாயல் மயிலன்னாய் --- மடமாகிய குணத்தைக்கொண்ட சாயலில் மயில்போன்ற பெண்ணே!, சான்றோர் கடம் கொண்டும் செய்வார் கடன் --- அறிவு சான்றவர்கள் வேறொருவரிடத்தில் கடன் பெற்றாயினும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வார்கள்; (ஆகையால்), அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் --- தொடர்ந்து வறுமையுடையராய் வருதலின் ஒப்புரவு செய்யமுடியாத இடத்தும், இடம் கண்டு அறிவாம் என்றெண்ணி இரார் --- ஒப்புரவு செய்யும் காலம் வந்தால் அப்பொழுது செய்வோம்என்று நினையார்.

         சான்றோர் கடன்பெற்றாயினும் ஒப்புரவு செய்வார்கள்.

வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்.
கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி.-
தெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற;
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த.
                                   ---  கம்பராமாயணம், வரைக்காட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     தெள்ளு  புனல் ஆறு --- தெளிந்த நீருள்ள நதிகள்; வெள்ள நெடு வாரி --- (தம்மிடத்து) வெள்ளமாகிய மிகுந்த நீர்ப் பெருக்கை; அற வீசி உளவேனும் --- முற்றிலும் வீசிக் கொண்டிராமல் போயினும்; கிள்ள எழுகின்ற புனல் --- தோண்டத் தோண்ட ஊறுகின்ற நீரை; சிறிதே உதவுகின்ற --- சிறிது சிறிதாக உதவுவனவாயின (அதனால் அவை) ; உள்ளது --- (செல்வம் இருந்த காலத்தில் வேண்டியவர்க்குக் கொடுத்து, அச் செல்வம் வறண்ட காலத்தும்) தன்னிடம் உள்ள பொருளை; மறாது --- (இல்லையென்று) மறுத்துச் சொல்லாமல்; கேளிரின் விரும்பி --- உறவினரைப் போல விருப்பம் கொண்டு;  உதவும் --- (அவர்களுக்கு) கொடுக்கும் தன்மையுள்ள;    வள்ளலையும் --- இரக்க  குணமுள்ள வள்ளல்களையும்; ஒத்த --- ஒத்திருந்தன.

     நதிகள் தம்மிடம் வெள்ள நீர் இருந்த காலத்தில் பலருக்கும் வேண்டியவாறு உதவி, அந்த நீர் வற்றிய காலத்தும் தோண்டத் தோண்ட மெல்ல மெல்ல ஊற்று நீரை உதவுகின்றன.  வள்ளல்களுக்கு இந் நதிகள் உவமையாகும்.


தேம் முதல் கனியும் காயும்,
     தேனினோடு ஊனும், தெய்வப்
பூ முதலாய எல்லாம்,
     மீன் கொளப் பொலிந்த அன்றே,
மா முதல் தருவோடு ஓங்கும்
     வான் உயர் மானக் குன்றம்-
தாம் முதலோடும் கெட்டால்
     ஒழிவரோ, வண்மை தக்கோர்? ---  கம்பராமாயணம், சேதுபந்தனப் படலம்.

     இதன் பதவுரை ---

     தேம் முதல் கனியும் காயும் --- இனிய பழங்களும் தின்பதற்குரிய  காய்களும்;  தேனினோடு ஊனும் --- தேனுடன் தின்பதற்கான ஊனும்;   தெய்வப் பூ முதலாய எல்லாம் --- தெய்வங்களும் விரும்பும் மண மலர்களும் மற்றும் பலவும்; மீன் கொளப் பொலிந்தது --- (மலைகளை வானரங்கள் கடலில் வீசுதலால்) மீன்கள் தின்னும்படி பொலிந்தது;   மாமுதல் தருவோடு ஓங்கும் --- மாமுதலிய நல்ல பழமரங்கள் நிறைந்துள்ள; வான் உயர் மானக் குன்றம் --- வானமளவும் உயர்ந்துள்ள அந்த மலைகள்;   வண்மை தக்கோர் --- வள்ளல் பண்புள்ள மேலோர்கள்; தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ --- தாம், தமது செல்வத்தை இழந்தாலும் வள்ளல் பண்பு நீங்குவரோ?.


எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று,வன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயன்உதவி நில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி.            ---   நன்னெறி.

இதன் பொழிப்புரை ---

     பசும் பொன்னால் ஆகிய வளையல்களை அணிந்தவளே! முன்னே நன்கு வளர்ந்து  பழமாகிய பயனைக் கொடுத்து அழிந்த வாழை மரத்தின் அடியில் முளைத்த வாழைக் கன்றும், பழத்தைத் தந்து பிறர்க்கு உதவும். அதுபோல, என்னுடைய தந்தையானவர், தன்னிடம் வந்து இரந்தவர்க்கெல்லாம் இல்லை என்னாமல் கொடுத்தே வறுமை அடைந்தார் என்று, அவருடைய மக்கள் ஈகைக் குணத்தைக் கைவிட மாட்டார்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...