009. விருந்தோம்பல் - 02. விருந்து புறத்ததா




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்.

     இந்த அதிகாரத்தில் வரும், இரண்டாம் திருக்குறள், "தன் இல்லத்திற்கு வந்த விருந்தினரைப் புறத்தே வைத்து, சாவை நீக்கக்கூடிய அமிழ்தம் என்றாலும், தான் மட்டும் தனித்து எண்பது விரும்பத் தக்கது அன்று" என்கின்றது.

திருக்குறளைக் கண்போம்.....


விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா மருந்து
எனினும், வேண்டல் பாற்று அன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       சாவா மருந்து எனினும் --- உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ;

     விருந்து புறத்ததாத் தானுண்டல் --- தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்;

     வேண்டற்பாற்று அன்று --- விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
        
         (சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருக்கக் காணலாம்...

உண்டால் அம்ம இவ் வுலகம், ந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி;
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்
உலகு உடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே.      --- புறநானூறு.

 இதன் பொருள் ---          

    இந்த உலகமானது, எவ்வளவோ காலமாக ஆழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றதே! இதில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்களே! இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால்.....

    தேவர் கோனுக்கு மட்டுமே கிடைக்கக் கூடி, சாகாது உயிர் வாழ்தற்கு உரிய அமுதமே கிடைத்தாலும், அதைத் தாமே உண்டு பயன் பெறலாம் என்னும் எண்ணம் இல்லாதவர்கள்; பிறரிடம் சினம் கொள்ளாதவர்கள்; பிறர் கண்டு அஞ்சுவதற்கு எல்லாம் அஞ்சி, வீணே இராதவர்கள்; புகழைப் பெறுவது என்றால் தனது உயிரையும் கொடுப்பவர்கள்; பழிக்கு இடமாகிய இழி செயல் என்றால், அதற்கு விலையாக இந்த உலகமே கிடைப்பது என்றாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பினை உடையவர்கள்; செயலாற்றுவதில் சிறுதும் மனத்தளர்வு கொள்ளாதவர்கள்; என்பன போன்ற சிறந்த குணநலன்கள் எல்லாம் நிறையப் பெற்று, தனக்கு என வாழும் தன்னலம் அற்று, பிறர் வாழத் தான் வாழும் பொது நலம் பேணுபவர்கள் இன்னமும் இந்த உலகில் இருப்பதால்தான், இந்த உலகம் இன்னும் இருந்துகொண்டு இருக்கின்றது. இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

   
தாக்கு அமருக்கு ஒரு சாரையை, "வேறுஒரு
     சாட்சி அறப் பசி ஆறியை", நீறுஇடு
     சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை...     --- திருப்புகழ்.

     பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க” என்றபடி உண்ணும் போது பலரை வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். இயலவில்லையேல் ஒருவரையாவது சாட்சி வைத்து அவரோடு கலந்து உண்ண வேண்டும். அப்படிக்கு இன்றி கதவடைத்து விட்டுத் தனியே இருந்து சாப்பிடும் மாக்களை அடிகளார் கண்டிக்கின்றனர்.

No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...