திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற இயல்
ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை
இவ்வதிகாரத்தில் வரும் ஈற்றுத் திருக்குறள், இல்லறத்தோடு கூடி
வாழும் இயல்பினால் இந்த நிலவுலகில் வாழ்பவன் என்பான், அவன் மண்ணுலகத்தவனே ஆயினும், வானுலகத்திலே
வாழுகின்ற தெய்வங்களுள் ஒருவனாக வைத்து நன்றாக மதிக்கப்படுவான் என்கின்றது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், உடலை விட்டபின், தேவனாய்ப் பிறந்து, அவன் மண்ணுலகில்
இல்லறத்தில் இருந்து இயற்றிய அறத்தின் பயனாக, இன்பத்தை அனுபவித்தல்
உறுதி. எனவே,
வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் நாயனார்.
இல்லறத்தை இனிமையாக இயற்றுவோன் அடையும்
மறுமைப் பயனை இங்குக் கூறினார். இம்மைப்
பயனாகிய புகழைப் பற்றி, இருபத்து நான்காவது அதிகாரத்தில் கூறுகின்றார்,
"இம்மையில் சுகத்தையும், மறுமையில்
சாசுவதமான புண்ணிய லோகத்தையும் எவன் விரும்புகின்றானோ, அவன் கிருகஸ்தாசிரமத்தை
முயற்சியோடு காப்பாற்றல் வேண்டும்" என்பது மனுதரும சாத்திரம் என்று அறிந்தவர்
கூறுவர்.
வாழ்க்கை மிகவும் சுவையானது. வாழ்வது
என்பதும் ஒரு கலை தான். மனிதன் முறையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த முறையான
வாழ்க்கையை, வாழ்வாங்கு
வாழும் வாழ்க்கையை நமக்குக் கற்றுக் கொடுப்பதே சமயநெறியின் மேலான பயன் ஆகும்.
உலகியலில், மக்கள் யாவரும் தெய்வத்தைத் தேடிச் செல்வதைக் காண்கின்றோம்.
ஆனால்,
தெய்வத்தின்
தன்மையை உணர்ந்து, தெய்வத் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து, வாழ்க்கையில்
அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவோர் மிகச் சிலரே ஆவர்.
இயற்கையில் பார்த்தோமானால், மனித உடம்பில் வேற்றுமை என்பது இல்லை.
உயிர்களுக்கும் பொதுவாக எந்த வேற்றுமையும் இல்லை. தகுதி, கல்வி அறிவு, ஒழுக்கங்களால்
மட்டுமே வேற்றுமை உண்டாகின்றது.
வீணை என்பது, அதனை மிழற்றத் தெரிந்தவர் கையிலே படுமானால் இசை
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மிழற்றத் தெரியாதவர் கையிலே படுமானால் அபசுரமே
பிறக்கின்றது. வீணை போன்றது மானுட யாக்கை. அந்த யாக்கையை அறிவின் விளக்கமாகவும்
ஆக்கலாம். அன்பின் விளைநிலமாகவும் ஆக்கலாம். அருள் ஒழுக்கத்திற்கு உரியதாகவும்
மாற்றலாம். அல்லாமல், குப்பைத் தொட்டியை விடக் கேடு வாய்ந்ததாகவும் ஆக்கலாம்.
யாக்கை என்பது அதனை இயக்குவோரின் தகுதிப்பாட்டையும் அறிவையும் ஆற்றலையும் பொறுத்தே
சிறப்பைப் பெறுகின்றது.
காடுகளைக் கழனியாக்குவது மனிதனின் அறிவுத்
திறனும் ஆற்றலுமே ஆகும். கல்லைப் பேசும் சிற்பமாக்கி அழகு மிளிரச் செய்வதும்
மனிதனின் ஆறிவுத் திறனும் ஆற்றலுமே ஆகும். விளை நிலத்தைப் பாழாக்குவதும், அழகிய
சிற்பத்தைப் பாழாக்குவதும் பாராட்டப்படக்கூடிய அறிவுத் திறன் அல்ல. அது
பாராட்டப்படக்கூடிய ஆற்றலும் அல்ல.
குறைகள் நிறைந்த மனித வாழ்க்கையை நிறைவு
உடையதாக்கி, தெய்வ நலம்
விளங்கச் செய்வது மனித ஆற்றலே ஆகும். மனிதன் தெய்வம் ஆகலாம். வாழ்வாங்கு
வாழ்ந்தால் மனிதன் தெய்வமாக மதிக்கப் பெறுவான்.
திருக்குறளைக்
காண்போம்......
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும்
தெய்வத்துள்
வைக்கப் படும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
வாழ்வாங்கு வையத்துள்
வாழ்பவன்
--- இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்;
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
--- வையத்தானே எனினும், வானின்கண் உறையும்
தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலை. ஆகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல் நிலையது
மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப. (அதி.24.புகழ்)
இத் திருக்குறளின் அருமையையும், தனது வழிபடும் கடவுளாகிய திருமாலின்
திருவருள் கருணைத் திறத்தையும் நன்கு உணர்ந்த ஓர் அடியவர், திருப்புல்லாணி என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் தெய்வச் சிலைப் பெருமாளை வைத்து, இயற்றிய பாடல், "திருப்புல்லாணி
மாலை" என்னும்
நூலில் இருந்து,
மைஅற்ற
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள்
வைக்கப்படும் என்பர், புல்லைத் திருநகர்வாழ்
ஐயற்கு
அடிமைப்பட்டு, இல்வாழ்க்கை நீதி அமைந்தவரை
மெய்மைக்
கருத்துஉறச் சொல்வது அன்றோ அந்த மேன்மைகளே.
இப்
பாடலின் பொருள் ---
குற்றம்
அற்ற இந்த நிலவுலகத்தில், இல்லற நெறியில்
நின்று எப்படி வாழவேண்டுமோ, அப்படி ஒருவன் வாழ்ந்தானானால், அவன்
வானுலகத்திலே வாழும் தேவர்களோடு ஒப்பக் கருதப்படுவான் என்று சொல்லப்படுகின்ற
மேன்மையானது,
திருப்புல்லாணி
என்னும் திவ்விய தேசத்திலே திருக்கோயில் கொண்டுள்ள பெருமானுக்கு அடிமைப்பட்டு, இல்வாழ்க்கையை, அதற்கு உரிய நீதி
தவறாது,
உரிய
நெறியில் பொருந்தி நின்றவரைக் குறித்து நிற்பதாகும்.
பின்வரும் "அறப்பளீசுர சதக"ப்
பாடல் கருத்தையும் இதனுடன் வைத்து எண்ணுக.
தந்தை,தாய், சற்குருவை, இட்ட தெய்வங்களை,
சன்மார்க்கம் உள மனைவியை,
தவறாத சுற்றத்தை, ஏவாத மக்களை,
தனை நம்பி வருவோர்களை,
சிந்தைமகிழ்வு
எய்தவே பணிவிடை செய்வோர்களை,
தென்புலத்தோர் வறிஞரை
தீதிலா அதிதியை பரிவுடைய துணைவரை
தேனுவைப் பூசுரர் தமை
சந்ததம்
செய்கடனை என்றும் இவை பிழையாது
தான் புரிந்திடல் இல்லறம்
சாருநலம் உடையராம் துறவறத்தோரும் இவர்
தம்முடன் சரியாயிடார்
அந்தரி
உயிர்க்கெலாம் தாய்அதனினும் நல்லவட்கு
அன்பனே அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே.
இதன்
பதவுரை ---
அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும்
நல்லவட்கு அன்பனே
---- பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!,
அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே --- அரிய மதவேள் என்பான் எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
தந்தைதாய் சற்குருவை --- தந்தை
தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை ---
வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள
மனைவியை --- நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை --- நீங்காத
உறவினரையும், ஏவாத மக்களை ---
குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை
நம்பி வருவோர்களை --- தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை
செய்வோர்களை --- மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை ---
தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை ---
குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை ---
அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும்,
தேனுவை
--- பசுக்களையும், பூசுரர் தமை ---
அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம்
செய்கடனை --- எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை --- (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது --- எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் --- ஒருவன்
இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர்
ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் --- பொருந்திய நன்மையையுடையராகிய
துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.
No comments:
Post a Comment