திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
ஏழாம் அதிகாரம் -
மக்கள் பேறு
இந்த அதிகாரத்தில் வரும், ஐந்தாம் திருக்குறள், "மக்களின் உடம்பைத்
தழுவுதல் உடம்புக்கு இன்பம் ஆகும். அம் மக்களின் மழலைச் சொள்களைக் கேட்டல் காதுகளுக்கு
இன்பம் ஆகும்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம் ----
மக்கள்மெய்
தீண்டல் உடற்கு இன்பம், மற்று அவர்
சொல்
கேட்டல் இன்பம் செவிக்கு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் ---
ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;
செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் ---
செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே
அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக்
காரியங்கள்மேல் நின்றன.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை"
என்னும்
நூலில்,
பின்வரும்
பாடல் வருகின்றது
வாட்டம்இல்
மக்கண்மெய் தீண்டல் உடற்கு இன்பம், மற்று அவர்சொல்
கேட்டல் இன்பம் செவிக்கு என்றனர், தேவகித் தாய்க்குத் தந்தை
ஏட்டலர்த்
தார் வசுதேவனுக்கு இன்புற்று, இருமை இன்பம்
காட்ட வந்தான் இந்தக் காசினிக்கே புல்லைக் காகுத்தனே.
இதன்
பொருள் ---
உடல் மெலிவும், உள்ள மெலிவும் இல்லாத மக்களுடைய உடம்பினைத் தீண்டுவது, உடம்புக்கு இன்பத்தைத்
தரும். அம் மக்களின் சொள்களைக் கேட்பது செவிக்கு இன்பத்தைத் தரும் என்றனர் (திருவள்ளுவ
நாயனார்). திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருப்பவர் காகுத்தன்
மரபில் இராமபிரானாக வந்து அவதரித்தவர். அவரே கண்ணனாக இந்த உலகில் அவதரித்து, தாயாகிய தேவகிக்கும், ஏடு அவிழ்ந்து மலர்ந்த
பூவால் கட்டப்பெற்ற மாலையினை அணிந்த வசுதேவருக்கும், இம்மை மறுமை இன்பங்களைக்
காட்ட வந்தார்.
ஏட்டலர்
தார் - ஏடவிழ்ந்து மலர்ந்த பூவால் கட்டப்பெற்ற மாலை. இருமை இன்பம் -
இப்பிறப்பின்பத்தையும், மறுபிறப்பின்பத்தையும். காகுத்தன் - காகுத்த வழிமுறையில் இராமனாகத்
தோன்றியவன்.
No comments:
Post a Comment