013. அடக்கம் உடைமை - 03. செறிவு அறிந்து





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "மனம், மொழி, மெய்களால் அடங்கி வாழ்வதே அறிவு ஆகும் என்று, நல்வழியிலே ஒருவன் வாழப்பெற்றால், அந்த அடக்கமானது நல்லோரால் அறியப்பட்டு, மேம்பாட்டைத் தரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

செறிவு அறிந்து சீர்மை பயக்கும், அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் --- அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்;

     செறிவு அறிந்து சீர்மை பயக்கும் --- அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.

      (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)

      அறியப்படுபவனவும் அறிந்து, அடக்கப்படுவனவும் அறிந்து, நெறியினானே அடங்கப் பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும் என்றும்,  அறியப்படுவன – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனவும், அடக்கப்படுவன – மெய், வாய், கண், மூக்கு, செவி எனவும் மணக்குடவர் விளக்கியுள்ளதையும் நோக்குக.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும்பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி.   ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

     வெண்கலப் பாத்திரத்தினின்று உண்டாகும் ஓசை மிகுதியாகும். ஆனால், மேன்மையுள்ள விரிந்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய பாத்திரத்தில் அங்ஙனம் ஓசை மிகுவது உண்டோ?  இல்லை. அதுபோல, குறைந்த அறிவினை உடையவர்கள் எப்பொழுதும் சிடுசிடு என்று இரைந்து பேசுவர்.  கல்வி கேள்விகளால் நிறைந்து அடங்கிய பேரறிவாளர்கள் அங்ஙனம் இரைச்சலிட்டு ஒன்றும் பேசமாட்டார்கள்.


குறிஅறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறிஅறியான் நீரின்கண் பாய்ந்து ஆடல் இன்னா;
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா
செறிவு இலான் கேட்ட மறை.  ---  இன்னா நாற்பது.

இதன் பதவுரை ---

     குறி அறியான் --- பாம்பினை ஆட்டுதற்கு உரிய மந்திரம் முதலியவற்றின் முறைகளை அறியாதவன், மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா --- பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம்; தறி அறியான் நீரின்கண் ஆடல் இன்னா --- உள்ளிருக்கும் குற்றியை அறியாமல் நீரில் பாய்ந்து குதித்து விளையாடுதல் - துன்பமாம்.  அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா --- அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம்செறிவு இலான் கேட்ட மறை இன்னா --- அடக்கம் இல்லாதவன் கேட்ட இரகசியம் துன்பமாம்.

     தறி - குற்றி; கட்டை.

     அறிவறியா மக்கள் --- அறிவேண்டுவன அறியமாட்டாத மக்கள் : ‘அறிவறிந்த மக்கள்' என்பதற்குப் பரிமேலழகர் கூறிய பொருளை நோக்குக. செறிவு --- அடக்கம் : ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்' என்னுங் குறளில் செறிவு இப் பொருட்டாதல் காண்க : அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா' என்றார்.

தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத்தான் எய்தா நலன் இல்லை, -- தன்னைக்
குடிகெடுக்கும் தீநெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.        ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின் --- தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை --- பின்னர் அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்து மில்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல் --- தன்னைத்தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட களிறு --- பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத் தகப்பட்ட களிறேபோல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.


அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்து, - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.      ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     அறிவது அறிந்து அடங்கி --- நூல் வழக்கிலும் உலக வழக்கிலுந் தெரிந்து கொள்ளவேண்டுவன தெரிந்து கொண்டு,  அடக்கம் உடையவராய், அஞ்சுவது அஞ்சி --- அஞ்சத்தக்க நிலைகளுக்கு அஞ்சி, உறுவது --- தமக்குத் தகுதியாகத் தாமே பொருந்துஞ் செயல்களை, உலகு உவப்பச் செய்து --- உலகம் பயன்கொண்டு மகிழும்படி செய்து, பெறுவதனால் --- அதுகொண்டு அடைந்த ஊதியத்தினளவில், இன்புற்று வாழும் இயல்பினார் --- மகிழ்ந்து வாழ்க்கை நடத்தும் தன்மையுடையவர். எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது --- எந்தக் காலத்திலும் துன்பமடைந்து உயிர்வாழ்வது இல்லை.

         அறிந்து அடங்கி அஞ்சி நேர்ந்ததைச் செய்து, கிடைத்தது கொண்டு வாழ்வோர்க்கு எப்போதும் துன்பமில்லை.

No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...