திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
14 - ஒழுக்கம் உடைமை
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "உயர்ந்தரோடு பொருந்தி
நல்லொழுக்கத்தை மேற்கொள்ளுதலைக் கல்லாதவர், பல நூல்களைக் கற்று
இருந்தாலும் அறிவு இல்லாதவரே" என்கின்றது.
கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகும். எனவே, அந்த
ஒழுக்கத்தைக் கல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தும் அறிவு இல்லாதவராகவே
கருதப்படுவார். உயர்ந்தாரொடு பொருந்த நடத்தலாவது, உயர்ந்தார் பலரும்
நடந்து காட்டிய வழியில் நடத்தல்.
உலகம் என்பது
உயர்ந்தோர் மாட்டே --- பிங்கலந்தை.
உலகியல் அறிவோடு
உயர்குணம இனையவும்
அமைபவன் நூலுரை
ஆசிரியன்னே. --- நன்னூல்.
திருக்குறளைக் காண்போம்...
உலத்தோடு
ஒட்ட ஒழுகல், பலகற்றும்
கல்லார், அறிவு இலாதார்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் ---
உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்,
பல கற்றும் அறிவிலாதார் --- பல
நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான்
ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான்
அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக்
கற்றலாவது, அடிப்படுதல்.)
நூல் நடையோடு உலக நடையும் அறிதல் வேண்டும்
என்றது. நூல்களுள் சொல்லியவற்றுள்,
இக்
காலத்திற்குப் பொருந்தாதவற்றை ஒழித்து, நூல்களுள் சொல்லாதனவற்றுள், இகை கால
நடைக்குப் பொருந்துவனவற்றை அறிந்து நடத்தல் வேண்டும்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக
அமைந்திருத்தலைக் காணலாம்...
தேரோடு
மணிவீதித் தண்டலையார்
வளங்காணும் தேச
மெல்லாம்
போரோடும் வில்படைத்து வீராதி
போரோடும் வில்படைத்து வீராதி
வீரரென்னும் பகழே
பெற்றார்,
நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு
நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு
நடப்பதுவே நீதி
யாகும்,
ஊரோட உடனோட நாடோட
ஊரோட உடனோட நாடோட
நடுவோடல் உணர்வு
தானே. --- தண்டலையார் சதகம்.
இதன்
பதவுரை ---
தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும்
தேசம் எல்லாம் --- தேர் ஓடுகின்ற அழகிய
தெருக்களையுடைய தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரரெனும்
புகழே பெற்றார் --- போர்க்களத்திலே வெற்றி அடைந்து மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த
வீரர் எனும் புகழை அடைந்தவரும்,
நேரோடும்
உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் --- ஒழுங்காகச் செல்கின்ற உலகத்திலே
தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும், ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல்
உணர்வுதானே --- எல்லோரும் செல்லும் நெறியிலே தாமும் நடத்தல் அறிவுடைமையன்றோ?
குலம் தவம் கல்வி
குடிமை மூப்பு ஐந்தும்
விலங்காமல் எய்தியக்
கண்ணும் --- நலம்சான்ற
மைஅறு தொல்சீர் உலகம்
அறியாமை
நெய்யிலாப்
போல்சோற்றின் நேர். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் --- நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்
ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும் தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறு தொல்சீர் உலகம்
அறியாமை நெய் இலாப்பால் சோற்றின் நேர் --- இன்பம் நிரம்பிய தீதற்ற தொன்மையாகிய
இயல்பினையுடைய வீட்டுலக ஒழுக்கம்
அறியானாய் இருத்தல் நெய் இல்லாத பால் சோற்றினுக்கு ஒப்பாகும்.
No comments:
Post a Comment