திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
14 - ஒழுக்கம் உடைமை
இந்த அதிகாரத்தில், ஏழாவதாக வரும் திருக்குறள், "எல்லோரும்
ஒழுக்க நெறியில் நின்றால் மேன்மையை அடைவர். ஒழுக்கத்தில் இருந்து தவறுவதால், அடையக் கூடாத
பெரும்பழியை அடைவர்" என்கின்றது.
அடையக் கூடாத பழி என்றது, ஒழுக்கத்தில் இருந்து தவறிய ஒருவன் மீது, பிறன் ஒருவன்
தான் கொண்ட பகைமை உணர்வு காரணமாக, அடாத பழியைச் சொன்னாலும், அதனையும் உலகத்தவர்
பழியாகவே கொள்ளுவர் என்பதால். செய்யாத செயலுக்காக, அடையக் கூடாத பழி வந்து
அடைந்தது.
திருக்குறளைக்
காண்போம்....
ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை, இழுக்கத்தின்
எய்துவர்
எய்தாப் பழி.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் ---
எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;
இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் ---
அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம்
அடுக்கும் என்று கொள்ளுமாகலின்,
எய்தாப்
பழி எய்துவர்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
கல்லாதவர்
இடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாதது
இல்லை ஒருவற்கு, - நல்லாய்!
இழுக்கத்தின்
மிக்க இழிவில்லை, இல்லை
ஒழுக்கத்தின்
மிக்க உயர்வு. --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
நல்லாய் --- நற்குணமுடைய பெண்ணே!, இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை ---
தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு
இல்லை, ஒழுக்கத்தின் மிக்க
உயர்வு இல்லை --- தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு
ஒருவற்கு இல்லை, (ஆகையால்), ஒருவற்கு --- கல்வியறிவு உடைய
ஒருவனுக்கு, கல்லாதவரிடை ---
நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக் கூறும்; கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை ---
கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை.
விதிப்பட்ட
நூல் உணர்ந்து, வேற்றுமை நீக்கி,
கதிப்பட்ட
நூலினைக் கை இகந்து ஆக்கிப்
பதிப்பட்டு
வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில்
பட்ட மறு. --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
விதிப்பட்ட நூல் உணர்ந்து --- விதிக்கப்பட்ட ஒழுக்க
நூல்களை உணர்ந்து, வேற்றுமை நீக்கி --- அவைகளுக்கு
உடன்பாடு ஆகாதனவற்றைச் செய்யாது விடுத்து, கதிப்பட்ட நூலினை --- நல்ல கதியைத்
தரும் ஞான நூல்களை, கை இகந்து --- -எல்லையில்லாமல், ஆக்கி --- உலகோர் பொருட்டுச் செய்து, பதிப்பட்டு வாழ்வார் --- இறைவனை அடைய
விரும்பி வாழ்கின்றவர், பழியாய செயதல் --- பிறர்
பழித்தற்கு ஏதுவான செயல்களைச் செய்தல், மதிப்புறத்தில்
பட்ட மறு ---சந்திரனிடத்துத் தோன்றும் களங்கமே ஆகும்.
No comments:
Post a Comment