010. இனியவை கூறல் - 03. முகத்தான் அமர்ந்து





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "முகம் மலர்ந்து பார்த்து, உள்ளத்தோடு பொருந்திய இனிய சொற்களைப் பேசுவதே அறம் ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்.....

முகத்தான் அமரந்து இனிது நோக்கி, அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி;

     அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் --- பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.

      ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.       ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     இன்சொல் விளை நிலமா --- இனியசொல்லே விளை நிலமாகவும், ஈதலே வித்தாக - ஈகையே விதையாகவும், வன் சொல் களை கட்டு --- கடுஞ்சொல்லாகிய களையைப் பிடுங்கி, வாய்மை எரு அட்டி --- உண்மையாகிய எருவினை இட்டு, அன்பு நீர் பாய்ச்சி --- அன்பாகிய நீரைப் பாய்ச்சி, அறக் கதிர் --- அறமாகிய கதிரை, ஈன்றது --- ஈனுவதாகிய, ஓர் --- ஒப்பற்ற, பைங்கூழ் --- பசிய பயிரை, சிறு காலை --- இளம்பருவத்திலேயே, செய் --- செய்வாயாக.

கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலம்கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்ப தரு.                 --- நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     கண் நோக்கு அரும்பா --- சேய்மைக்கண்ணே இரவலரைக் கண்டபோது இனிமையாகப் பார்த்தலே அரும்பாகவும். நகை முகமே நாள் மலரா --- நெருங்கியவழி மலர்ச்சியோடு கூடிய முகமே அன்று மலர்ந்த மலராகவும்; இன்மொழியின் வாய்மையே தீங்காயா --- இன்மொழியாகிய உண்மையே இனிய காயாகவும்;  வண்மை பலமா --- ஈகைப் பண்பே இனிய பழமாகவும், நலம் கனிந்த பண்புடையார் அன்றே --- நற்குணங்கள் மிகுந்த பண்புகளை உடையவ வள்ளல்களே;  சலியாத கற்பகத் தரு --- இளைத்தல் இல்லாது நினைத்தவற்றை எல்லாம் அளிக்கின்ற, தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தைப் போன்றவர்கள்.

அகமலர்ந் தருந்தவ னமரர்க் கன்புகூர்*
முகமலர்ந்த தின்னுரை முகமன் கூறிநீர்
மிகமெலிந் தெய்தினீர் விளைந்த தியாதது
தகமொழிந் திடலென வலாரி சாற்றுவான்.  --- தி.வி.புராணம், இந்திரன் சாபம்..

இதன் பதவுரை ---

     அகம் மலர்ந்து அருந்தவன் --- மன மகிழ்ந்து அரிய தவத்தினையுடைய முனிவன், அமரர்க்கு அன்பு கூர் முகமலர்ந்து --- தேவர்களை நோக்கி அன்பு மிகுந்த இன்முகஞ் செய்து, முகமன் இன் உரை கூறி --- உபசாரமாக இனிய சொற்களைக் கூறி, நீர் மிக மெலிந்து எய்தினீர் --- நீவிர் மிகவும் வருந்தி வந்தீர்கள்; விளைந்தது யாது --- நடந்தது என்ன, அது தக மொழிந்திடல் என --- அதைப் பொருந்தச் சொல்லுக என்று கேட்க, வலாரி சாற்றுவான் --- இந்திரன் கூறுவான்.

     விருந்தோம்புவார்க்கு அகமகிழ்ச்சி, முகமலர்ச்சி, இன்னுரை என்னும் மூன்றும் வேண்டு மென்பதனை,"முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானாம் இன்சொ லினதே யறம்" என்னும் தமிழ்மறையான் அறிக.


களிக்கும் மஞ்ஞையை, கண்ணுளர்இனம்
      எனக் கண்ணுற்று,
அளிக்கும் மன்னரின், பொன்
      மழை வழங்கின அருவி;
வெளிக்கண் வந்த கார் விருந்து
      என, விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம்
      என, பொலிந்தன, கமலம்.   ---  கம்பராமாயணம், கார்காலப் படலம்.

இதன் பதவுரை ---

     களிக்கும் மஞ்ஞையை --- (கார்காலத்தில்) களித்து ஆடும் மயிலினங்களை; கண்ணுளர் இனம் என --- கூத்தர்களின் இனமான விறலியர் என்று கருதி; கண்ணுற்று --- (அவை ஆடும் கூத்தைப்) பார்த்து; அளிக்கும் மன்னரின் --- (பொன்னைப் பரிசாக) வழங்கும் அரசர்களைப் போல; அருவி --- மலையருவிகள்; பொன் மழை வழங்கின --- பொன்னை மிகுதியாகச் சொரிந்தன. வெளிக்கண் வந்த கார் --- விண்வெளியில் வந்த மேகங்களை; விருந்து என --- விருந்தாளிகள் எனக் கருதி; விருந்து கண்டு --- விருந்தினரைக் கண்டு; களிக்கும் மங்கையர் முகம் என --- மனம் மகிழும் மகளிரின் முகம் போல; கமலம் பொலிந்தன --- தாமரை மலர்கள் நீர்நிலைகளில் மலர்ச்சி பெற்றன.


No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...