008. அன்புடைமை - 09. புறத்து உறுப்பு





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

எட்டாம் அதிகாரம் - அன்புடைமை

     இந்த அதிகாரத்தில் ஒன்பதாவதாக அமைந்த இத் திருக்குறளில், "உடம்போடு பொருந்திய உயிரின் இயல்பு என்னும் உள் உறுப்பு ஆகி, இல்லற்றத்திற்கு உறுப்பாக அமைந்த அன்பு இல்லாத ஒருவருக்கு, புறத்திலே அமைந்த பிற உறுப்புக்களால் என்ன பயன்களைச் செய்ய முடியும்" என்று வினவுகின்றார் நாயனார். விடை, பயன் இல்லை என்பதே ஆகும்.

     புறத்து உறுப்பு என்பது இடமும் பொருளும் ஏவலும் என்பர்.  அன்பாகிய துணையோடு கூடாத இடத்து, அந்த இடத்திலே பொருள் முதலியவற்றால் பயன் இல்லை.

     துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய "நன்னெறி" என்னும் நூலில் பின்வரும் பாடல் இக் கருத்தை உறுதி செய்யும்.

இல்லானுக்கு அன்பு இங்கு இடம்பொருள் ஏவல்,மற்று
எல்லாம் இருந்தும் அவர்க்கு என்செய்யும்? - நல்லாய்
மொழி இலார்க்கு ஏது முதுநூல் தெரியும்?
விழி இலார்க்கு ஏது விளக்கு?

இப் பாடலின் பொருள்---        

     நற்குணம் உடையவளே! பேச வராத ஊமையகளுக்கு பழைமையான நூல்கள் என்ன பயனைத் தரும்? பார்வை அற்றவனுக்கு விளக்கால் என்ன பயன் விளையும்? அதுபோல, இந்த உலகில் பெரிய இடமும், நிறைந்த பொருளும், எவல் தொழில் செய்பவர்களும் நிறைந்து இருந்தாலும், அன்பு இல்லாதவனுக்கு அவைகளால் ஒரு பயனும் இல்லை.


     உயிரோடு கூடிய உடம்பிற்கு உள்ளே அமைந்து இருக்க வேண்டிய உறுப்பு ஆகிய அன்பு இல்லாத போது, உடம்பிற்கு புறத்திலே அமைந்துள்ள கண் முதலாகிய உறுப்புக்களால் பயன் இல்லை என்று கூறுவாரும் உண்டு என்றாலும், அது இல்லறத்தோடு பொருந்தாது என்கின்றார் பரிமேலழகர்.

இனி, திருக்குறளைக் காண்போம்.....

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்? யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இல் அவர்க்கு.         

இதற்குப் பரிமேலழகர் உரை ----

     யாக்கை அகத்து உறுப்பு அன்பு இல் அவர்க்கு --- யாக்கை அகத்தின்கண் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு உடையர் அல்லாதார்க்கு;

     புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் --- ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறம் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

     இத் திருக்குறளின் அருமையினை நன்கு ஓதி உணர்ந்ததோடு, பெரியபுராணம் என்னும் அரு நூலினையும் நன்கு ஓதித் தெளிந்த, குராம பாரதி என்னும் பெரியார், கண்ணப்ப நாயனாரின் செய்கையினை, தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், மேற்படி திருக்குறளுக்கு ஒப்புக் காட்டிப் பாடிய பாடல்....

புண்ணப்பர் கண்ணில்என்று புன்கண்உறுப்பு ஈர்ந்துஅப்பி
கண்ணப்பர் அன்பு உறுப்பில் கைசெய்தார், - வண்ணப்
புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும்? யாக்கை
அகத்துஉறுப்பு அன்புஇல் அவர்க்கு.                

         பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர் குலத்தில் அவதரித்தவர் திண்ணனார். அவர் வேட்டுவ குலத் தலைவனுக்கு அருமந்த புத்திரர். அவருக்குள்ள சிவபத்தி மேலீட்டைச் சிவகோசரியார் முன்பு உலகத்தோருக்கு அறிவிக்கச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். தமது கண்ணில் குருதிசோரக் காட்டினார். திண்ணனார் மிக அஞ்சி வருந்திப் புண்ணுக்கு புண்ணப்ப நினைந்து தன் கண்ணைப் பிடுங்கி அப்பினார். குருதி நிற்கக் கண்டு மகிழ்ந்திருக்கும்போதே மற்றொரு கண்ணிலும் குருதி பெருக, மீட்டும் திண்ணனார் தமது மற்றைக் கண்ணையும் பிடுங்கி அப்ப உறுதி கொண்டனர். அப்போது, "நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப" எனக் காளத்தியப்பர் கூறித் தமது திருக்கரத்தால் திண்ணனார் கரத்தைப் பற்றி, அவரைத் தமது பக்கத்தில் வீற்றிருக்கச் செய்தார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு. 

     இதனை, யாக்கை அகத்தின்கண் நின்று இல்லறத்துக்கு உறுப்பாகி.ய அன்புடையர் அல்லாதாருக்கு ஏனைப் புறத்து உறுப்புக்களாகிய இடம் பொருள் ஏவல் முதலியன,  அவ் அறம் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும் எனத் திருவள்ளுவர் கூறினர்.

         இதனை, மணிவாசகர் "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்புஇன்மை கண்டபின்" எனத் திருவாசகத்தில் எடுத்தாண்டமை காண்க.
                                                     

No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...