004. அறன் வலியுறுத்தல் - 09. அறத்தான் வருவதே





திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
        

     இந்த அதிகாரத்தின் ஒன்பதாம் திருக்குறள், அறச் செயல்களைச் செய்வதால் உண்டாவதே இன்பமாகும். மற்ற செயல்கள் எல்லாம் துன்பம் தரும் இயல்பினை உடையவை; புகழும் இல்லாதவை என்கிறது.

     இங்கே சொல்லப்படுகின்ற இன்பம், இன்பத்துப்பாலில் சொல்லப்பட்டுள்ளது அல்ல. அது காம நுகர்ச்சி.

     இன்பத்துக்குப் புறம்பானவை துன்பமே. பாவச்செயல்களாகிய பிறன்மனை விழைதல் முதலியவை, அச் சமயத்தில் இன்பமாய்த் தோன்றுமாயினும், பின்பு துன்பமாய் விளைவதால், அது இன்பத்திற்குப் புறம்பானது.

     இல்லறத்தோடு பொருந்தி வருவன எல்லாம் இன்பம் தரும். அதனால் புகழும் உண்டாகும்.

திருக்குறளைக் காண்போம்.....

அறத்தான் வருவதே இன்பம், மற்று எல்லாம்
புறத்த, புகழும் இல.        

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       அறத்தான் வருவதே இன்பம் --- இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது;

     மற்று எல்லாம் புறத்த --- அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த;

     புகழும் இல --- அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல.

          ('ஆறன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)

     இத்திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பல வாண முனிவர் தாம் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில், பின் வருமாறு பாடி உள்ளார்.

தருமர் பிறர்நெறியால் சார்ந்தது விண், ஈசன்
அருள் நெறியால் ஈனரும் மேலானார், ---  அருநூல்
அறத்தான் வருவதே இன்பம், மற்று எல்லாம்
புறத்த, புகழும் இல.  

         தருமர் --- பாண்டுவின் மகன்களில் முதல்வர். தருமர் கண்ணபிரானை வழிபட்டு வந்தவராதலால், பிறர் நெறியால் என்றார். தருமருக்கு அழிதன்மாலைய ஆகிய சுவர்க்க போகமே கிடைத்தது. இது பாரதத்துள் பாண்டவர் இவ்வுலகை நீத்த வரலாற்றைக் கூறும் பகுதிக்கு சொர்க்க ஆரோகண பருவம் என்ற பெயர் உள்ளதால் விளங்கும்.

     சுவர்க்க போகம் என்பது நிலையானது அல்ல. ஒருவர் செய்த நல்வினைப் பயனைச் சுவர்க்கத்தில் துய்த்து முடித்தாலும், மீண்டும் மண்ணுலகில் பிறந்து, வினைகளை ஒழித்தே நிலையான இன்பமாகிய இறைவன் திருவடி இன்பத்தைப் பெற முடியும். சுவர்க்க போகமும் முடிவில் பிறவித் துன்பத்தையே தரும். சுவர்க்க போகம் என்பது பதமுத்தி. வீடுபேறு என்பது பரமுத்தி. பரமுத்தியே அழியாத இன்பத்தைத் தரவல்லது. அதுவே, அழியாப் புகழையும் கொடுக்கும்.

     தாழ்ந்த குலத்திலே பிறந்தாலும், அறவழியிலே நின்று திருத்தொண்டு செய்து, இறைவன் திருவடி இன்பமாகிய வீடுபேற்றை அடைந்தவர்கள் திருநாளைப்போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணபத்திரர் முதலானோர். இதனால், ஈனரும் மேலானார் என்பது கூறப்பட்டது. அருள் நூல் என்பது சிவநூலைக் குறிக்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...