014. ஒழுக்கம் உடைமை - 04. மறப்பினும்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை

          இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், " கற்ற வேதத்தை மறந்துவிட்டாலும், ஒருவன் தனது வருணத்தால் பிராமணன் என்பதால், பின்னர் ஓதிக் கொள்ளலாம்; அவனது பிறப்பானது, தனது ஒழுக்கம் கெட அழியும்" என்கின்றது.

     தொன்றுதொட்டு ஒருவருக்கொருவரால் ஓதப்பட்டு வருவதால், வேதத்திற்கு "ஓத்து" என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. பிராமணர், வேதத்தின் பொருளையே பிரதானமாகக் கொண்டு பார்ப்பதால் அவர் "பார்ப்பார்" என்று சொல்லப்படுகின்றார். "வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்" என்று கலித்தொகையில் நச்சினார்க்கினியர் உரை கூறியது காண்க.

     சிறப்பு உடைய வருணத்தவர் ஆகிய பிராமணருக்கு, அவருக்கு உரிய ஒழுக்கம் குறைய, சாதி கெடும் என்று சொல்லப்பட்டதால், ஒழுக்கம் குறைய, சாதி கெடும் என்பதைப் பிற சாதியாருக்கும்  உபலட்சணமாகக் கொள்ளலாம்.

திருக்குறளைக் காணலாம்....

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்
பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஓத்து மறப்பினும் கொளலாகும் --- கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்,

     பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். --- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.

      (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே;
தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது.--- இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிது --- பிராமணர்க்கு, வேதத்தினை மறவாமை மிக இனிது; பந்தம் உடையான் படை ஆண்மை முன் இனிது --- (மனைவி மக்கள் முதலியோர் மாட்டுப்) பற்று உடையவன், சேனையை ஆளுந்தன்மை முற்பட இனிது; தந்தையே ஆயினும் தான் அடங்கான் ஆகுமேல் கொண்டு அடையான் ஆதல் இனிது ---(தன்னைப் பெற்ற) தந்தையே ஆனாலும், அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கண் சென்று) அடங்காதவனாக இருப்பின், அவன் சொல் கொண்டு அதன்வழி நில்லாதவனாக இருத்தல் இனிது.

     அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கால் அறிக. ஓதப்படுதலின் ஓத்து ஆயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தராம், ஆகலின், மறக்கலாகாது என்னுங் கருத்தால் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க.

     உறவினர் மாட்டுப் பற்று உடையவன் ஆயின், பழிக்கு அஞ்சித் தன் சேனையில் ஓர் உயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"               (குறள் - 506)

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிக இனிது' எனப் பொருள் உரைப்பாரும் உளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"           (குறள் - 834)

என்று இருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களின் அடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழி ஒழுகாமை இனிது என்றார்.
.

ஈத்த வகையான் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லார் உழைச்சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா
ஓத்து இலாப் பார்ப்பான் உரை.      --- இன்னா நற்பது

இதன் பதவுரை ---

     ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு  இன்னா --- கொடுத்த அளவினால் ஒரு பொருளைக் கொண்டு மகிழாதவர்க்குக் கொடுத்தல் துன்பத்தைத் தரும்; பாத்து உணல் இல்லார் உழை சென்று உணல் இன்னா --- தன்னிடத்தில் உள்ளதைப் பிறருக்கும் பகிர்ந்து உண்ணுதல், இல்லாதவரிடத்தில் போய் உண்ணுதல் துன்பத்தைத் தரும்; மூத்த இடத்து பிணி இன்னா --- முதுமை வந்த போது தோன்றும் நோய் துன்பத்தைத் தரும்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா பார்ப்பான் உரை இன்னா --- வேதத்தை ஓதுதல் இல்லாத பார்ப்பானுடைய சொல், துன்பத்தைத் தரும்.


இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று, சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று, --- வழுக்கு உடைய
வீரத்தின் நன்று விடாநோய், பழிக்கு அஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.   --- நல்வழி.

இதன் பதவுரை ---

     இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று --- இலக்கண வழுக்கினை உடைய பாட்டினை விடவும், அது இல்லாத வெற்று இசையே நல்லது. உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும் அது இல்லாத மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று --- தவறுதலை உடைய வீரத்தினும் தீராப் பிணி நல்லது ; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று --- பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

     இலக்கணப் பிழை உடைய பாட்டும், நல்லொழுக்கம் இல்லாத உயர்குலமும், தவறுதல் அடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை. --- முதுமொழிக்காஞ்சி.

     பிறப்பிலேயே மக்கட்பிறப்பு மிக உயர்ந்தது. ஆறறிவு பெற்றிருக்கின்றதால் நூல்களைக் கற்கும் வாய்ப்பும் அவர்களுக்கே உள்ளது. அவ்வாறு கற்கும் கல்வி அவர்களுக்குச் சிறப்பைத்தரும். ஆனால் அதைவிடச் சிறப்புடையது அவர்கள் கற்ற வழியில் நடந்து ஒழுக்கம் உடையவர்களாக இருத்தல். கற்றவர்கள் கற்றவழி நடந்தால், மனித சமுதாயம் மாண்பு உடையதாக விளங்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...