திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற
இயல்
ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத்
துணைநலம்
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறள், ஒருவனுடைய
இல்லாளிடத்தில் கற்பு என்னும் கலங்கா நிலைமை இருக்கப் பெறுமானால், அவன் அடையும்
பொருள்களுள்,
இல்லாளை
விடவும் உயர்வாகிய பொருள் எது உள்ளது என்கின்றது.
கொண்டானில் சிறந்த தெய்வம் இல்லை என்றும், அவனை தெய்வம்
என்றை வழிபடுக எனவும், இருமுதுகுரவர் கற்பித்தலானும், அந்தணர் திறத்தும், சான்றோர் தேயத்தும், ஐயர் பாங்கிலும், அமரர்ச்
சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலாலும் கற்பு ஆயிற்று என்பார்
நச்சினார்க்கினியர்.
கற்பு உடைய மனைவியானவள், அறத்தைச்
செய்தலுக்கும்,
பொருளைச்
செய்தலுக்கும்,
இன்பத்தைத்
துய்த்தலுக்கும் ஏதுவாக அமைவதால், கற்பு உடைய மனைவியைத் தவிர, அறம் பொருள்
இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களுக்கும் ஏதுவான பொருள் வேறு இல்லை என்றார்.
இனித்
திருக்குறளைக் காண்போம்.....
பெண்ணின்
பெருந் தக்க யாஉள, கற்பு என்னும்
திண்மை
உண்டாகப் பெறின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பெண்ணின் பெருந்தக்க யாஉள --- ஒருவன் எய்தும்
பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள;
கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்
--- அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.
(கற்புடையாள் போல அறம் முதலிய
மூன்றற்கும் ஏது ஆவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
இத் திருக்குறளின் கருத்தை நன்குணர்ந்த, பிறைசைச்
சாந்தக்கவிராயர் என்பார் தாம் இயற்றிய நீதி சூடாமணி என்கிற இரங்கேச வெண்பா
என்னும் நூலில்,பின் வரும் பாடலால், திருக்குறள் கருத்தானது விளங்கப் பாடி
உள்ளார்.
மாண்டவியர்
சாபத்தை வல்லிருளால் மாற்றினாள்
ஈண்டுஓர்
மடந்தை இரங்கேசா - நீண்டபுகழ்ப்
பெண்ணிற்
பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மை
யுண்டாகப் பெறின்.
இப்
பாடலின் பதவுரை ---
இரங்கேசா ---- திருவரங்கநாதக் கடவுளே! ஈண்டு ---
இந்த நில உலகில், ஓர் மடந்தை --- ஒப்பற்ற பெண்ணாகிய
நளாயினி என்பாள், மாண்டவியர் சாபத்தை ---
மாண்டவிய முனிவருடைய சாபத்தை, வல் இருளால்
மாற்றினாள் --- பேரிருளால் நீக்கினாள். (ஆகையால்
இது) கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் --- கற்பு என்கின்ற பலம்
உண்டாயிருந்தால், நீண்ட புகழ் --- பெரிய புகழை உடைய, பெண்ணின் --- பெண்ணைக் காட்டிலும், பெருந்தக்க --- பெரிய தகுதியைத் தருவது, யா உள --- எவை இருக்கின்றன (என்பதை
விளக்குகின்றது).
கருத்துரை --- காவல் தானே பாவையர்க்கு அழகு.
விளக்கவுரை --- மாண்டவிய
முனிவர் 'உள்ளியர் தெள்ளியர்
ஆயினும் ஊழ்வினை பைய நுழையும்' என்றபடி தீவினையால்
ஓரிடத்தில் கழுமரத்து ஏறி வருந்திக் கொண்டிருந்தார். நளாயினி என்னும்
இராஜகுமாரத்தி முன்செய் நல்வினையால் முனிவர் ஒருவருக்கு மனைவியானாள். அம் முனிவர், தம் மனைவியின் கற்பைச் சோதித்து உலகப்
பிரசித்தம் பண்ண விரும்பித் தம் தேகத்தில் குட்டரோகம் வருவித்துக் கொண்டு, சீயும் நீரும் வடிந்து நாறத்
தோன்றினார். ஆயினும், அவ்வம்மையார், 'புல்லென்றாலும் புருடன், கல்லென்றாலும் கணவன்' என்றபடி, கணவன் உடலின் துர்நாற்றத்தைச் சந்தன
மணமாகப் பாவித்து உபசரித்து வந்தாள்.
'பத்தாவுக்கு
ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம்' என்ற ஔவைப் பிராட்டியின் அருள்
வாக்கின்படி வாழ்ந்து வந்த நளாயினி,
ஒருநாள்
இரவில் தன் கணவன் விருப்பப்படி அவரை ஒரு தாசி வீட்டுக்கு கூடையில் சுவந்து கொண்டு
போய்த் திரும்பி வருகையில் இருளாய் இருந்தமையால் மேற்கூறிய மாண்டவியர் கழுமரத்தில்
கூடை மோதியது. உடனே அவர்க்கு உபத்திரவம் அதிகரித்தமையால், அவர் நளாயினியை நோக்கி, "ஏ பெண்ணே! நீ விடியும்
முன் மங்கலியம் இழக்கக் கடவை" என்று சபித்தார்.
அது கேட்ட நளாயினி, கணவருக்காக வருந்தி "இருள் விடியாது
இருக்கக் கடவது" என்று சபித்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டாள். பிறகு
பொழுது விடியாமையால் நித்திய கர்மானுஷ்டானங்கள், பயிர் பச்சை முதலியவைகள் ஓங்காமல், தேவர்கள் அனைவரும் மனம் வருந்திச்
சூரியனிடத்தில் சென்று கேட்டார்கள். அவன் நளாயினியைக் கேட்கச் சொன்னான். அவள்
மாண்டவியரைக் கேட்கச் சொன்னாள். அவர்கள் மாண்டவியரை வேண்டிக் கொண்டபோது, அவர் தமது சாபத்தை மாற்றினார்.
பிறகு நளாயினியும் தன் சாபத்தை மாற்றினாள். உடனே
பொழுது விடிந்து சூரியன் தோன்றினார். எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதுவே மாண்டவியர் சாபத்தை, நளாயினி வல் இருளால்
மாற்றின கதை.
இத் திருக்குறளின் கருத்து மேலும் நமக்குத்
தெளிய விளங்குமாறு, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள், தாம் இயற்றிய "முருகேசர் முதுநெறி
வெண்பா" என்னும் நூலில், பின்வரும் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார்.
கோது
இல் சுதரிசனன் சொல்திறம்பாக் கோதையொடு
மூதுஅஞர்
தீர்ந்து உய்ந்தான், முருகேசா! - பேதம் இலாப்
பெண்ணில்
பெருந்தக்க யாவுள, கற்பு என்னும்
திண்மை
உண்டாகப் பெறின்.
இதன்
பதவுரை ---
முருக ஈசா - முருகக் கடவுளே!, கோது இல் சுதரிசனன் --- குற்றமற்ற
சுதரிசனன் என்கின்ற பெயரை உடையவன்,
சொல் திறம்பாக் கோதையொடு --- தன்னுடைய
சொல்லுக்கு மாறுபடாத மனைவியோடு இல்வாழ்க்கை நடத்தி, மூது அஞர் தீர்ந்து உயந்தான் --- தமக்கு
நேர இருந்த மரணத் துன்பத்தைப் போக்கி நல்ல கதியை அடைந்தான்.
ஆகவே,
கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் ---
கற்பு என்று கூறப் பெறுகின்ற திட்பமானது அமையப் பெற்ற மனைவியை ஒருவன் வாழ்க்கைத்
துணையாகப் பெற்றால், பெண்ணில் --- அந்த மனைவியைப்
பார்க்கினும், பெருந்தக்க யாஉள --- பெருமை அடைதற்கு
வேறு என்ன இருக்கின்றன?
குற்றமற்ற சுதரிசனன் என்பவன் கற்பில்
சிறந்த தன்னுடைய மனைவியோடு துன்பம் தீர்ந்து நல்ல கதியை அடைந்தான். கற்பென்று
சொல்லப்பெறும் திட்பமானது அமையப் பெற்றால் ஒருவன் அடையத்தக்க சிறந்த பேறுகளுள்
பெண்ணைத் தவிரச் சிறந்தன வேறு யாவையுள்ளன என்பதாம்.
மூது அஞர் - முதுமை அஞர் - துன்பங்களுள்
எல்லாம் கொடிய துன்பம்.
சுதரிசனன் கதை
முன்னளிலே சுதரிசனன் என்னும் பெயருடைய
அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் சிவபெருமான் இடத்திலும் சிவனடியார்கள் இடத்திலும்
பேரன்பு உடையவன். அம் மறையவனுடைய மனைவியின் பெயர் யோகவதி. அந்தணன் தன்னுடைய
மனைவியைப் பார்த்து, "பெண்ணே! நீ
சிவனடியார்கட்கு வேண்டுவன புரிந்து அவர்களைப் போற்றுவாயாக. அவர்கள் நின்பால்
கலவியை விரும்பினும் மறாது அளிப்பாயாக" என்று கட்டளை இட்டான்.
இயமன் யோகவதியின் கற்புத் திண்மையை ஆராய்ந்து
பார்க்க எண்ணினான். சிவனடியார் கோலம் பூண்டு யோகவதியிடம் வந்தான். யோகவதி அவனுக்கு
வேண்டும் பணிவிடைகளைப் புரிந்தாள். அவன் தன்பால் காதல் கொண்டிருத்தலைக் குறிப்பால்
உணர்ந்து, அதற்கும் இசைந்தாள்.
உடனே நமன் தன்னுடைய இயற்கை வடிவத்தோடு
வெளிப்பட்டு நின்றான். அவளைப் பார்த்து, "நான்
வந்தது உன்னுடைய கற்பை ஆராய்ந்தறிதற்கே அல்லது கலந்து மகிழ்வதற்கு அன்று. கணவன்
மொழிக்கு மாறுபடாத நின்னுடைய கற்புடைமை கண்டு மகிழ்ந்தேன். உங்கள் இருவருடைய இயம வேதனையையும்
நீக்கினேன்" என்று கூறி மறைந்தான்.
சுதரிசனனும் அவனுடைய மனைவியும் இயமவேதனை
அற்றவர்களாய் நல்ல கதியை அடைந்தார்கள். கற்புடைய மனைவியைத் தவிரச் சிறந்த பொருள்
வேறொன்றுமில்லை என்பது யோகவதியினால் நன்கு பெறப்பட்டது.
அடுத்து, திருப்புல்லாணி என்னும்
திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருமால் மீது, திருப்புல்லாணி
மாலை
என்னும் நூலினை ஓர் அடியவர் பாடி உள்ளார். திருக்குறள் விளக்கத்திற்காகவே எழுந்த
இந்த நூலில்,
மேற்படி
திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல் பின்வருமாறு....
தரும்தக்க
நாண்மடம் அச்சம் பயிர்ப்புத் தரித்தபெண்ணில்
பெருந்தக்க
யாவுள, கற்பு என்னுந்
திண்மை உண்டாகப்
பெறில்,
பொருந்தச்
சொல் அத்தன்மை, புல்லைப் பிரான் திருப்
பூவடியை
வருந்தித்
தவம்புரி மாதர்கற்பு அல்லது மற்று இலையே.
திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்திலே
திருக்கோயில் கொண்டுள்ள திருமாலின் திருவடிகளைப் போற்றி வழிபடுகின்ற மாதர் செயலே
சிறந்த கற்பு என்பது இப் பாடலால் பெறப்படும் குறிப்பு.
No comments:
Post a Comment