006. வாழ்க்கைத் துணைநலம் - 05. தெய்வம் தொழாஅள்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்


     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாவது திருக்குறள், பிற தெய்வத்தைத் தொழாது, தனது கணவனையே தொழுது, துயில் எழுபவள் என்பாள், பெய் என்று சொல்ல, மழையானது பொழியும் என்கின்றது.

     தொழுது எழுவாள் என்பதற்குப் பரிமேலழகர், 'தொழாநின்று துயில் எழுவாள்' என்று உரை கூறியது அசம்பாவிதம் என்பார் வடிவேலுச் செட்டியார் அவர்கள். 'எழுந்து தொழுவாள்' என்பது அவருடைய பொருள்கோள்.

திருக்கோவையாரில் பின்வருமாறு ஒரு பாடல் உள்ளது.

தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து "தொழுதெழுவார்"
வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே

இதன் பதவுரை ---

     தொழுது எழுவார் வினை வளம் நீறு எழ --- தொழா நின்று துயிலெழுவாருடைய வினையினது பெருக்கம் பொடியாக;

     நீறு அணி அம்பலவன் தன் வெற்பில் --- தன் திருமேனிக் கண் நீற்றை அணியும் அம்பலவனது வெற்பில்;

     புனை வளர் கொம்பர் அன்னாய் --- கை புனையப்பட்ட வளர்கொம்பை ஒப்பாய்;

     தினைவளம் காத்து --- தினையாகிய வளத்தைக் காத்து;

     சிலம்பு எதிர் கூஉய் --- சிலம்பிற்க் எதிர் அழைத்து;

     சிற்றில் முற்று இழைத்து --- சிற்றிலை மிகவும் இழைத்து;

     சுனை வளம் பாய்ந்து --- சுனைப் புனலில் பாய்ந்து;

     துணை மலர் கொய்து --- ஒத்த மலர்களைக் கொய்து;

     அன்ன புனமயில் காண்டும் --- அத்தன்மைய ஆகிய புனமயிலைக் காண்பேம் யாம்.

     பேராசிரியர் உரையில், 'தொழுதெழுவார்' என்றது துயில் எழும் காலத்து அல்லது முன் உணர்வு இன்மையான் உணர்வு உள்ள காலத்து மறவாது நினைவார் என்றவாறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     எனவே, "தொழுது எழுவாள்" என்பதை, "எழுந்து தொழுவாள்" என்று பொருள்படுத்தப்பட வேண்டும் என்றார்.

வான்தரு கற்பின் மனையுறை மகளிர்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்.
                                                                                
என்று "மணிமேகலை" என்னும் காப்பியத்திலும், இத் திருக்குறள் எடுத்து ஆளப் பெற்று உள்ளது. மணிமேகலை ஆசிரியர், "வான் தரு கற்பு" என்றார். வான் என்றது, இங்கே வானம் தரும் மழையைக் குறித்து நின்றது. ஆக, கற்பு நெறியில் நின்ற பெண்டிர் வேண்ட மழைபெய்யும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி,  
கொண்டன செய்வகை செய்வான் தவசி, கொடிதுஒரீஇ
நல்லவை செய்வான் அரசன், இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.

என்கின்றது "திரிகடுகம்" என்னும் நூல். இதன்படி, தன்னைக் கொண்டவனுடைய குறிப்பினை அறிந்து அதன்படி ஒழுகுகின்ற மனைவி, தான் மேற்கொண்ட விரதங்களை முறைப்படி கடைப்பிடிக்கின்ற தவசி, தீயவற்றை விலக்கி, மக்களைக் காத்து, நன்மை பயக்கும் செயல்களை மேற்கொள்ளுகின்ற அரசன் ஆகிய இந்த மூவரும் பெய் என்றால் மழை பெய்யும் எனப்பட்டது.

வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை,
நீதி மன்னர் நெறிமுறைக்கு ஓர் மழை,
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை,
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே.

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

     கந்தபுராணம் மார்க்கண்டேயப் படலத்தில், பின்வருமாறு ஒரு பாடல் வருகின்றது...

காண் தகைய தம் கணவரைக் கடவுளார் போல
வேண்டல் உறு கற்பினர் தம் மெய்யுரையில் நிற்கும்,
ஈண்டை உள தெய்வதமும் மாமுகிலும் என்றால்,
ஆண்தகைமை யோர்களும் அவர்க்கு நிகர் அன்றே.

     கணவனைக் கடவுள் போல் எண்ணி வழிபடும் கற்பு உடைய மகளிரின் சொல்வழி தெய்வமும், மழைமேகமும் நிற்கும் என்னும்போது, அப் பெண்களுக்கு ஆடவர்கள் நிகர் ஆகார் என்கின்றது இப் பாடல்.

     பெரிய புராணத்தில், மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில், தெய்வச் சேக்கிழார் பெருமான், பின் வருமாறு பாடுகின்றார்...

குழைக்குஅலையும் வடிகாதில்
         கூத்தனார் அருளாலே
மழைக்குஉதவும் பெருங்கற்பின்
         மனைக்கிழத்தி யார்தம்பால்
இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த
         இப்பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்கும்நெறி தமக்கு உதவப்
         பெண்கொடியைப் பெற்று எடுத்தார்.

இதன் பொருள் ---

     குழையை அணிந்ததால் அசைகின்ற அழகிய காதுகளை உடைய கூத்தப்பெருமான் திருவருளால், மழை வேண்டும் பொழுது, அதனை உடன் உதவுதற்கு உரிய பெரும் கற்பினை உடைய தமது மனைவியார் திருவயிற்றில், ஒழிவு இன்றிப் பெருகிவரும் வினைப் பயன்களால் வரும் பிறவி என்னும் கொடிய சுழற்சியில் இருந்து, தப்பிப் பிழைக்கின்ற நல்ல நெறியினைத் தமக்கு உதவ வல்லது ஒரு பூங்கொடி போலும் சாயலை உடைய பெண் குழந்தையை மானக் கஞ்சாற நாயனார்  பெற்றெடுத்தார் என்கின்றது இப் பாடல்.

     இதனாலும், கற்புடைய பெண்கள் வேண்டினால் மழையானது பெய்யும் என்பது தெளிவாகின்றது.

இனி, திருக்குறளைக் காண்போம்.....

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.               

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என --- பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல;

     மழை பெய்யும் --- மழை பெய்யும்.

         (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)

     மேற்குறித்த திருக்குறள்,  அதன் கருத்துக்கு ஒப்பு ஆக அமைந்த அருட்பாடல்கள் என்னும் இவற்றின் சாரத்தை உள்ளடக்கி, மாதவச் சிவஞான யோகிகள், தாம் இயற்றிய சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலில் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.


மூவர் தடுப்பவும் கொண் மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசுயை, சோமேசா! - மேவுபிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

இதன்பொருள்---

         சோமேசா! மேவி --- பொருந்திய, பிற தெய்வம் தொழாஅள் --- பிற தெய்வங்களைத் தொழாது,  கொழுநன் --- தனக்குத் தெய்வமாகிய கணவனை, தொழுது எழுவாள் --- தொழாநின்று துயில் எழுகின்றவள், பெய்யென மழை பெய்யும் --- பெய் என்று சொல்ல மழை பொழியும். தூவாய் அனசூயை --- அகத்தூய்மை, புறத்தூய்மைகளை உடைய அனசூயை என்பவள், மூவர் தடுப்பவும் --- அயன், அரி, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளும் தடை செய்யவும் கூட,  கொண்மூவைப் பணிகொண்டாள் --- மேகத்தைத் தன் ஏவல் வழி நிற்கச் செய்தாள்.

         திரிமூர்த்திகள் திருவுள்ளப்படி வடநாட்டிலே பத்தாண்டுகள் வானம் வழங்காது பஞ்சம் நேர்ந்த போது, அத்தரி முனிவர் பத்தினியாகிய அநசூயை அன்பார் உயிர்கள் வாடுவதைக் கண்டு, தமது கற்பின் மாட்சியில் கங்கையானது பெருகவும், செடிகொடி முதலியன தழைக்கவும் மழை பொழிவித்தார்.

                                   
தெய்வம் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்     
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுள் பேணல் கடவியை யாகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது 
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை
ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை
ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது....---  மணிமேகலை.

இதன் பதவுரை ---

தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற --- பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று சொல்லப் பெருமழை பெய்யும் எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் --- தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய், பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு --- பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விசி பிணி முழவின் விழாக்கோள் விரும்பி --- கட்டப்பட்ட கட்டினையுடைய முழவுடன்கூடிய விழாக்காண்டலை விரும்பி, கடவுள் பேணல் கடலியை ஆகலின் --- வேறு கடவுளை வணங்கும் கடப்பாடுடைய ஆயினையாகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது --- நங்காய் நீ ஏவினாள் மழையும் பெய்யாது, நிறையுடைப் பெண்டிர் தம்மே போல --- நிறையுடைய மகளிரைப் போல, பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை --- பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையுடையையும் அல்லை, ஆங்கவை ஒழிகுவை ஆயின் --- முற்கூறிய நின் செயல்களை நீங்குவாயானால், ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது --- நங்காய் உயர்ந்த வானத்து மழையும் நீ ''பெய்'' என மொழியிற் பெய்யா நிற்கும் ;

         "தெய்வந் தொழாஅள...தேறாய்" என்றது இந்நூலாசிரியர் கருத்துத் தெய்வத்தின் கூற்றில் வைத்துணர்த்தப்பட்டது. சாத்தனார் இத் திருக்குறளை உரையளவையாகக் கொண்டு, வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறியது தெய்வப் புலவர்பால் அவருக்குள்ள பெருமதிப்பை இனிது புலப்படுத்தும்.


கடுங்கதிர் வெம்மையின் காதலன் றனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது, வளம்பிழைப்பு அறியாது,
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது,
பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ...   ---  சிலப்பதிகாரம்.

இதன் பதவுரை ---

     கடுங் கதிர் வெம்மையின் காதலன் தனக்கு --- ஞாயிற்றின் கொடிய வெம்மையினால் துன்பமுற்ற தன் கணவன் பொருட்டு, நடுங்கு துயர் எய்தி நாப் புலர வாடி --- கண்டார் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் புலர வாட்டமுற்று, தன் துயர் காணாத் தகை சால் பூங்கொடி --- தனது வழி நடைத் துன்பத்தினைச் சிறிதும் உணராத தகுதி மிக்க பூங்கொடிபோல் வாளாகிய, இன் துணை மகளிர்க்கு இன்றியமையா --- தம் கணவர்க்கு இனிய துணையாகப் பொருந்திய பெண்களுக்கு இன்றியமையாத, கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது --- கற்பாகிய கடனை மேற்கொண்ட இத் தெய்வமே யல்லாது, பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால் --- வேறு பொலிவினையுடைய தெய்வம் ஒன்றினை யாம் காணேம், வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது --- பருவ மழை பெய்தலினும் தவறாது நில வளமும் பிழையாது, நீள் நில வேந்தர் கொற்றம் சிதை யாது --- பெரிய நிலப் பரப்பினை ஆளும் மன்னரது வெற்றியும் அழிவுறாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு --- கற்புடை மகளிர் வாழும் நாட்டின்கண், என்னும் அத் தகு நல் உரை அறியாயோ நீ --- என்று பெரியோர் கூறும் அத் தகுதி வாய்ந்த நல்ல மொழியை நீ உணராயோ ;

பொற்பின் நின்றன. பொலிவு; பொய் இலா
நிற்பின் நின்றன. நீதி மாதரார்
அற்பின் நின்றன. அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன. கால மாரியே.  ---  கம்பராமாயணம், பாலகாண்டம்.

இதன் பதவுரை ---

     பொற்பின் நின்றன பொலிவு ---  (அந்த நாட்டு மக்களின்) அகத்து அழகால் நிலைத்திருந்தது புறத்தழகு;   பொய்யிலா  நிற்பின் நின்றன நீதி --- அவர்களது பொய்ம்மை இல்லாத  மெய்ந்நிலையால் நீதி நிலைத்து நின்றது; மாதரார் அற்பின்  நின்றன அறங்கள் --- (அந்த நாட்டுப்) பெண்களின்  அன்பால்  அறங்கள் நிலைபெற்றிருந்தன; அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே --- அப்பெண்களது கற்பினால் பருவமழை நிலைத்திருந்தது.

தங்கள் நாயகரின் தெய்வம்
   தான் பிறிது இலை என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத்
   தூயது; மற்றும் கேளாய்;
எங்கள் நான்மறைக்கும். தேவர்
   அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்
செங் கண் மால் இருந்து. மேல்நாள்
   செய் தவம் செய்தது அன்றே.    ---  கம்பராமாயணம், வேள்விப்படலம்.

இதன் பதவுரை ---

     தங்கள் நாயகரின் தெய்வம் தான் பிறிது இலை --- தங்களது
கணவரைக் காட்டிலும் தெய்வம் வேறு இல்லை;  என்றெண்ணும்
மங்கைமார் --- என்று கருதும் பெண்ணரசிகளது; சிந்தை போலத் தூயது --- மனத்தைப்போல (இச்சோலை) தூய்மையானது; மற்றும் கேளாய் --- பின்னும் சொல்லுகிறேன் கேட்பாயாக;  எங்கள்  நான் மறைக்கும் --- எங்களுடைய நான்கு வேதங்களுக்கும்;   தேவர்  அறிவிற்கும் --- தேவர்களின் நுட்பமான அறிவுக்கும்;   பிறர்க்கும்   எட்டாச் செங்கண்மால் --- மற்றவர்களுக்கும் (உள்ளம். உரை) செயல்களால் எட்டமுடியாத திருமால்;  இருந்து மேல் நாள் --- இங்குத் தங்கி முன் ஒரு காலத்திலே; செய்தவம் செய்ததன்றே --- செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா?


கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி, கொண்டன
செய்வகை செய்வான் தவசி, கொடிதுஒரீஇ
நல்லவை செய்வான் அரசன், இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.    ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி --- கொண்ட கணவனுடைய குறிப்பறிந்து நடக்கின்றவள் மனைவியாவாள் :

         கொண்டன செய்வகை செய்வான் தவசி --- தான் மேற்கொண்ட விரதங்களைச் செய்யும் முறைப்படி செய்பவன் தவசியாவன்;

         கொடிது ஒரீஇ நல்லவை செய்வான் அரசன் --- தீங்கினை நீக்கி, குடிகளுக்கு நன்மையானவற்றைச் செய்பவன் அரசனாவான்;

         இவர் மூவர் பெய் என மழைபெ ய்யும் --- ஆகிய இவர் மூவரும் மழையைப் பெய் என்றுசொல்ல மழை பொழியும்.

         குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத் தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும் என்பது.

         பெண்டு ஆட்டி - பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள், தவசி செய்கையாவன : மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.


மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்              
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன்
முத்தீப் பேணும் முறையெனக் கில்லென
மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள்... --- மணிமைகலை, சிறைசெய் காதை.

இதன் பதவுரை ---

     மண்திணி ஞாலத்து --- அணுச் செறிந்த நிலவுலகத்தில், மழைவளம் தரூஉம் பெண்டிர் ஆயின் --- வேண்டுங்கால் மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிர் ஆயின், பிறர் நெஞ்சு புகாஅர் --- ஏதிலார் உள்ளத்திற் புகுதலிலர், புக்கேன் பிறன் உளம் --- யானோ அயலான் உள்ளத்திற் புகுந்தேன், புரிநூல் மார்பன் முத்தீப்பேணும் முறை எனக்கு இல் என --- ஆகலின் முந்நூலணிந்த மார்பினையுடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாள் --- மிகப் பெரிய துன்பத்துடன் தன் மனையின்கண் செல்லாளாய் ;

         மழைவளம் --- மழையாகிய வளம் ; வளம் - வருவாய். புக்கேன் ஆகலின் என விரித்துரைக்க. புரிநூன் மார்பன் - கணவன். முத்தீ - காருகபத்தியம் ஆகவனீயம் தென் திசை அங்கி என்பன. பேணுதல் - கணவற்குத் துணையாயிருந்து அதனை வளர்த்தல்.


'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வையுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.' ---  கம்பராமாயணம், மீட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     இவள் உணர்வு சீறினால் --- தெய்வக் கற்பினளாய இவள் உணர்வு நிலை திரிந்து கோபம் அடைந்தால்;   மழை பெய்யுமே --- மழை பொழியுமா?  புவி பிளப்பது அன்றியே பொறை செய்யுமே?  ---   பூமி வெடிப்பது அல்லாமல் பொருளைத் தாங்குதல் செய்யுமா?;  அறம் நெறியில் செல்லுமே --- அறம் நேரான வழியில் நடக்குமா?;   உலகு உய்யுமே --- உலகம் பிழைக்குமா?; வையுமேல் --- (இவள்) சபித்தால்;   மலர்மிசை
அயனும் மாயும் --- மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகனும் இறந்து படுவான்.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...