007. மக்கள் பேறு - 06. குழல் இனிது




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "தம்முடைய மக்களின் இளம் சொற்களைக் கேட்கும் பேறு அற்றவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்பர்" என்கிறது.

திருக்குறளைக் காண்போம்...
  
குழல் இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      குழல் இனிது யாழ் இனிது என்ப --- குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்;

     தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் --- தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.

         ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதி பற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்களை, இத் திருக்குறளுக்கு ஒப்புமையாகக் கொண்டு சிந்தித்து மகிழலாம்....

குழவி தளர்நடை காண்டல் இனிதே;
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
வினைஉடையான் வந்து அடைந்து வெய்துறும் போழ்தும்
மனன்அஞ்சான் ஆகல் இனிது.  --- இனியவை நாற்பது

இதன் பதவுரை ---

     குழவி தளர்நடை காண்டல் இனிது --- குழந்தைகளது, - தளர்ந்த நடையைக் காணுதல் பெற்றோர்க்கு இனிமையைத் தரும்.

     அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிது --- அக் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் காதாரக் கேட்பது தேவாமுதத்தினும் இனிமையைத் தரும்.

     வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்தும் மனன் அஞ்சான் ஆகல் இனிது --- தீவினை செய்தவன் அதன் பயனாகிய துன்பம் தன்பால் வந்து சேர்ந்து, தான் வருந்தும் காலத்தும் மனம் அஞ்சாது நிற்றல் இனிமையைத் தரும்..

     அதியமான்,   தான் நெடிது உயிர் வாழ்தலினும் ஒளவையார் நெடிது வாழ்தலால் உலகுயிர்கட்கு ஆக்கமாகும் என்ற பேரருளால் தான் பெற்ற நெல்லிக் கனியைத்  தந்தருளியது கண்ட ஒளவையார் மனம் குழைந்து, நாக்குழறித் தாம்  நினைத்தவாறெல்லாம் அவனைப் பாராட்டக் கருதி, “நெடுமான்  அஞ்சி, நீ என்பால் மிக அருளுதலால் என் சொல் தந்தையர்க்குத்  தம் புதல்வர் சொல்லும் சொற்போல அருள் சுரக்கும் தன்மையனவாம்”என்று புறநானூற்றில் பின்வரும் இப்பாட்டால் கூறியுள்ளார்.


யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா,
பொருள் அறி வாரா, ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை,
என்வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி நீ அருளன் மாறே. --- புறநானூறு.

இதன் பொருள் ---

     யாழோசை போல இன்பமும் செய்யாது.  காலத்தொடும் பொருந்தி இராது. பொருளும் விளங்கிக் கொள்ள முடியாது ஆயினும், புதல்வர் தம் மழலை தந்தையர்க்கு அருளுதல் வந்தன போன்றது பிள்ளைகளுடைய இளஞ்சொல்.  என்னுடைய வாயின்கண் சொல்லும் அத்தன்மையனவே. பகைவரது காவலை உடைத்தாகிய மதிலையுடைய அரண்கள் பலவற்றையும் வென்ற நெடுமான் அஞ்சி  நீ! நான் நெடுநாள் வாழ உதவும் இந்த அரு நெல்லிக்கனியை எனக்கு அளித்த உனது அன்புடைமையை தான் வியந்து கூறும் இந்தப் புகழ் மொழியும் அந்தக் குழந்தையின் மழலைச் சொல் போன்றதே.

     புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ
அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்ன எனக் கூட்டுக.

      விளக்கம்: இளம் புதல்வர் வழங்கும் சொல்லோசையில் யாழினது இனிய ஓசை காணப்படாதாயினும், அவர்கள் சொல்வழிப் பிறக்கும் இன்பத்திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும். பெருந் துன்பம் வந்து வருத்துகின்ற போதும் தந்தையர்க்குப் புதல்வர் போந்து வழங்கும் சொல் நிரம்பாமையின் குறிக்கும் பொருள் விளங்காதாயினும், தந்தையர் அச்சொல்லைக் கேட்டற்குப் பெரிதும் விரும்புவர். மழலை - இளஞ் சொல். எழுத்து வடிவு பெறாது தோற்றும் இளஞ்சொல் என்றும் கூறுவர்.

     புதல்வர் மொழியும் மழலை, பொருள்நலமும் இடச்சிறப்பும் உடையன அல்ல. ஆயினும் தந்தையரால் அருள் சுரந்து கேட்கப்படுதல் போல என் வாய்ச் சொல்லையும் நீ அருள் சுரந்து கேட்கின்றாய்; நின் அருள் இருந்தவாறென்னே என்பதாம்.
என் சொல்லென்று ஒழியாது வாய்ச்சொல் என்றது, தமது பணிவு தோன்றி நின்றது.  இன்ன செய்கையை உடைய நீ, என்பால் அருள் மிகச் சுரந்து ஒழுகுவது, என்னை நின் மக்களுள் வைத்துப் பேணுகின்ற அன்பு மிகுதியைக் காட்டுகின்றது என்றவாறாயிற்று.


விளம்புவன் யான் ஒன்று உளம்புகு நெறியால்
எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி
குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே
ஆயினும் பயந்த தம் சேயவர் சொலும் மொழி
குழலினும் யாழினும் அழகிதாம் அதுபோல் .....
                                              --- திரும்மழுமல மும்மணிக் கோவை.

இதன் பொருள் ---

     அடியேன் என் மனம் சென்ற வழியால், ஒன்றைக் கூறுவேன். அது என்ன என்றால், பெற்ற தமது மக்கள் பேசும் சொற்கள், எழுத்துக்களைச் சிறிதும் ஒவ்வாது, கொண்டாடத் தகுந்த பொருள் ஏதும் இல்லாமல், இன்ன குறிப்பினை உடையன என்று அறியவும் படாமல், பயனில்லாத புன்சொற்களே ஆனாலும், குழல் இசையினும், யாழின் இசையினும், அழகினை உடையதாம். அது போல.....

யாழ்க்கும். இன் குழற்கும். இன்பம்
   அளித்தன இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர்
   கிஞ்சுகம் கிடந்த வாயாள்.
தாள் கருங் குவளை தோய்ந்த
   தண் நறைச் சாடியுள். தன்
வாள்-கணின் நிழலைக் கண்டாள்;
   வண்டு என ஓச்சுகின்றாள்.  ---  கம்பராமாயணம், உண்டாட்டுப் படலம்.

இதன் பதவுரை ---

     யாழ்க்கும் இன்குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன --- வீணையின் இசைக்கும். இனிய குழலிசைக்கும் இசை  இன்பம் கொடுத்தவை இவள் சொற்கள்தாம் என்னுமாறு;  கேட்கும்  மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் --- (இனிதான ஒலி) கேட்கச் செய்கிற மெல்லிய மழலை மொழியினையும். முருக்க மலர் அனைய சிவந்த  வாயினையும்  உடையாள் ஒருத்தி; தாள் கருங்கு குவளை தோய்ந்த தண்  நறைச் சாடியுள் --- தண்டினை உடைய கருங்குவளை  மலர்  இடப்பட்டுள்ள குளிர்ந்த கள்ளினை உடைய சாடியின் உள்ளே;  தன் வாள்க(ண்)ணின்  நிழலைக் கண்டாள் --- தன்னுடைய  வாள்போன்ற கண்களின் நிழலைப் பார்த்தாள் (நிழலென
அறியாது.);  வண்டென ஓச்சுகின்றாள் --- (உள்ளே உள்ள குவளை மலர்களில் மதுவுண்ண வந்த வண்டுகள்என்று) தன்கண் நிழலை ஓட்டலானாள்!

     எல்லா இனிமைப் பொருட்கும் இனிமைகொடுக்க வல்லவை குழலும் யாழும். அவற்றுக்கும் இனிமை கொடுக்க வல்லவை இவள் மழலைச் சொற்கள் என்க. சாடியுள் மணத்திற்காகக் குவளை. தாமரை முதலிய மலர்களை இட்டு வைத்தல் மரபு.  அந்த மலர்களை மொய்க்க வண்டுகள் வந்து விட்டன  என்று   கருதிச் சாடியுள் தெரிந்த தன் விழி நிழலை ஓட்டுகின்றாள்!   மதுப்பழக்கம் நகைப்பிற்கு இடம் ஆனவற்றையே செய்யும் என மேலும் உணர்த்தியவாறு.
    

குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய
மழலை மென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடுந் தடமணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும்தம்மையும் வேற்றுமை தெரிவு அரு நிலைய.
                                         ---  கம்பராமாயணம், ஊர்தேடு படலம்.

இதன் பதவுரை ---

     (இலங்கை மாடங்கள்) குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய --- குழல் வீணை யாழ் என்று கூறப்படுகின்ற இப்படிப்பட்ட இசைக் கருவிகள் மனம் நெகிழ; மென் மழலை மொழி --- மென்மையான மழலைச் சொற்களை; இருந்து - வீற்றிருந்து; கிளிக்கு அளிக்கின்ற மகளிர் --- கிளிகட்குச் சொல்லிக் கொடுக்கும் பெண்கள்; சுழலும் --- சுற்றிலும் உள்ள; நெடும் நல் --- பெரிய நல்ல; தடமணி சுவர்தொறும் --- பெரிய மணிகள் பதிக்கப்பெற்ற சுவர்தோறும்; துவன்றும் நிழலும் --- செறிந்துள்ள நிழலையும்; தம்மையும் ---  தங்களையும்; வேற்றுமை தெரிவு அரு நிலைய --- வேறுபாடு உணரமுடியாத நிலைமை உடையன.

     பெண்கள் தம்மையும் தம்முடைய நிழலையும் பிரித்து அறிய முடியாதபடி உள்ளன. மாடங்கள் மகளிர் தெரிவரும் நிலையில் உள்ளன.

 
'பொருளும், யாழும், விளரியும், பூவையும்,
மருள, நாளும்,மழலை வழங்குவாய் !
தெருளும் நான்முகன் செய்தது, உன் சிந்தையின்
அருளும், மின்மருங்கும், அரிது ஆக்கியோ? ---  கம்பராமாயணம், காட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     பொருளும் --- குழந்தைகளும்; யாழும் --- யாழும்; விளரியும் --- விளரிப்பண்ணும்; பூவையும் --- நாகணவாய்ப் பறவையும்; மருள --- ஏக்கமடைய; நாளும் --- தினமும்; மழலை வழங்குவாய் --- மழலை மொழி பேசுபவளே ! தெருளும் --- தெளிவடைந்த; நான்முகன் --- பிரம்மதேவன்; உன்சிந்தையில் --- உன் உள்ளத்தில்; அருளும் --- கருணையையும்; மின் மருங்கும் --- மின்னல் போலும் இடையும்; அரிது ஆக்கியோ --- இல்லாமல் ஆக்கிய பிறகோ; செய்தது - படைத்தது.


குழவு நுண் தொளை வேயினும்,
     குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும்
     இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த தாள்
     முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெங் கனல் கதுவியது
     ஒப்பன - பாராய்!        ---  கம்பராமாயணம், சித்திரகூடப் படலம்.

இதன் பதவுரை ---

     நுண் தொளை குழுவும் வேயினும் --- நுண்ணிய தொளை நிரம்பப் பெற்ற புல்லாங்குழல் ஓசையினும்;  குறி நரம்பு எறிவு உற்று எழுவு தண்தமிழ் யாழினும் --- ஓசையைக் குறித்து (எழுப்பவல்ல) நரம்புகளை (கை விரல்களால்) தடவி எழுப்பப்படுகின்ற குளிர்ந்த இனிய யாழ் ஓசையினும்; இனிய --- இனிமையான; சொல் கிளியே --- சொற்களைப் பேசுகின்ற கிளிபோல்பவளே!; முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு --- முற்றிலும் பூக்கள் பூத்துள்ள அடிமரத்தை உடைய முருக்க மரம்; இடை மிடைந்த பழுவம் --- இடையே நெருங்கி உள்ள காடு; வெங் கனல் கதுவியது ஒப்பன --- கொடிய நெருப்பினால் பற்றப்படுள்ளது போன்றவற்றை;பாராய்-.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...