திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
15 - பிறனில் விழையாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "இவளைச் சேருதல் எளிது
என்று நினைத்து,
பின்னர்
விளைவதைச் சிறிதும் நினையாமல், பிறன் மனைவியின் இடத்தில் செல்லுகின்றவன், எக்காலமும்
நிலைத்து நிற்பதாகிய பழியை அடைவான்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்...
எளிது
என இல் இறப்பான் எய்தும், எஞ்ஞான்றும்
விளியாது
நிற்கும் பழி.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
எளிது என இல் இறப்பான் --- 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன்
இல்லின்கண் இறப்பான்,
விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி
எய்தும் --- மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
(இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண்
நெறிகடந்து சேறல்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை" என்னும்
நூலில் இருந்து ஒரு பாடல்....
எய்த
மதன்கணை தாங்காது எளிது என இல்இறப்பான்
எய்தும்
எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி, எனலான்,
மைதவழ்
மேனியன் புல்லை எம் மாயன் மலர் அடிக்கீழ்
உய்திறஞ்
சேர்பவர் சேரார் பிறர் இல் உறும்பழியே.
இதன்
பொருள் ---
மன்மதனின் மலர் அம்புகளால் உண்டான
விரகதாபத்தைத் தாங்கமாட்டாமையால்,
பிறன்
மனைவியைச் சேருதல் எளிது என்று சென்று பிறனுடைய வீட்டில் சேர்பவன், எக்காலத்தும்
நீங்காது விளங்கும் பழியினை அடைவான் என்று திருவள்ளுவரால் அறிவுறுத்தப்பட்டு
உள்ளதால்,
திருப்புல்லாணி
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள, கருநிறக் கண்ணனின் திருவடியில் உய்ந்து
போவதற்கு அடைபவர், பிறன் மனை சேரும் பழியை அடையார் என்றது.
இறையருளை நாடினார்க்கு, காமன் மலர்க்கணைகள் துன்பத்தைச் செய்யா.
மதன்கணை - காமன் கணை. மைதவழ் மேனியன் - கருமை
பொருந்திய உடலை உடையவன். உய்திறம் சேர்பவர் - உய்யும் பொருட்டு அடைபவர்கள்.
பழிசேரார் - பழியை அடைய மாட்டார்கள்.
வம்பு
உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார்
இறந்தால் நமன்தமர் பற்றி
எற்றிவைத்து எரி எழுகின்ற
செம்பினால்
இயன்ற பாவையைப் பாவீ,
தழுவு என மொழிவதற்கு அஞ்சி,
நம்பனே!
எந்து உன் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய். --- திருமங்கை ஆழ்வார்.
இதன்
பொருள் ---
திருநைமிசாரணியத்துள் திருக்கோயில் கொண்டு
எழுந்தருளி உள்ள எமது தலைவனே! மணம் வீசும் கூந்தலை உடைய தனது மனைவியை விட்டு, பிறருடைய பொருள், பிறனுடைய மனைவி என்னும்
இவற்றை விரும்பியவர்கள் இறந்து போனால், இயமனுடைய தூதுவர்கள் பிடித்துப் புடைத்து, ஓரிடத்திலே
போட்டு,
செம்பாலே
செய்யப்பட்ட நெருப்புப் பொறி வீசும் ஒரு பெண்ணின் உருவத்தை, "பாவீ!
தழுவுவாய்" என்று சொல்வர். அதற்கு அஞ்சி உன்னுடைய திருவடிகளைத் தஞ்சமாக
அடைந்தேன்.
பண்டு
ஓர் ஆண் பெண் அமைத்து, அவ் இருவருக்கும்
மணம் இயற்றி, பரன் இரக்கம்
கொண்டு
அளித்த முறைகடந்து, கள்ளவழிப்
புணர்ச்சிசெயும் கொடியோர் தம்மை,
மண்டலமே
வாய்பிளந்து விழுங்காயோ?
அவர்தலைமேல் வான் உலாவுங்
கொண்டலே
பேரிடியை வீழ்த்தாயோ?
இதுசெய்யில் குற்றம் உண்டோ? --- நீதிநூல்
இதன்
பொருள் ---
ஆண்டவன் பழமையாகவே ஆண் பெண் இருவரையும்
அமைத்தருளிப் பேரிரக்கத்தால் மணமும் நிகழ்த்துவித்தனன். அம் மணமுறையைக் கடந்து தீய
வழியாகக் கூடி இன்பமடையும் கொடியவர்களை,
நிலமே! வாய் பிளந்து விழுங்கமாட்டாயா! வானில் திரியும் மேகமே! பெரிய இடியை அவர்
தலைமேல் விழச் செய்யமாட்டாயா! இப்படிச் செய்யின் ஏதேனுங் குற்றமுண்டோ?
பல்லார்
அறியப் பறை அறைந்து, நாள்கேட்டுக்
கல்யாணம்
செய்து, கடிப்புக்க - மெல்இயல்
காதன்
மனையாளும் இல்லாளா, என்ஒருவன்
ஏதின்
மனையாளை நோக்கு. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
நாள் கேட்டு --- நல்ல நாள் கேட்டறிந்து
பல்லார் அறியப் பறை அறைந்து --- அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல்
காதல் மனையாளும் இல்லாளா --- திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென் தன்மை
வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு ---
ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல்?
தன் மனைவி இல்லத்திலிருக்க ஒருவன்
அயலான் மனைவியைக் கருதுவது எதற்கு?
காணின்
குடிப்பழியாம், கைஉறின் கால்குறையும்
ஆணின்மை
செய்யும்கால் அச்சமாம் – நீள்நிரயத்
துன்பம்
பயக்குமால், துச்சாரி, நீ கண்ட
இன்பம்
எனக்கு எனைத்தால் கூறு. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
காணின் குடிப்பழியாம் --- பிறர் கண்டு
விட்டால் குடிப்பழிப்பாம்; கையுறின் கால்
குறையும் --- கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் ---
ஆண்மை இல்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் ---
நெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி --- தீயொழுக்கம் உடையவனே!
; நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு ---
நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ?
எனக்குச்
சொல்.
'செய்தாயேனும், தீவினையோடும்
பழி அல்லால்
எய்தாது, எய்தாது; எய்தின், இராமன்,
உலகு ஈன்றான்,
வைதால்
அன்ன வாளிகள் கொண்டு,
உன் வழியோடும்
கொய்தான்
அன்றே, கொற்றம்
முடித்து, உன் குழு எல்லாம்?
--- கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.
இதன்
பதவுரை ---
செய்தாயேனும் ---- (என் கருத்தை மீறி) நீ செயல்பட்டாலும்; தீ வினையோடும் பழி அல்லால் --- பாவமும் பழியும்
அன்றி (வேறு நன்மை); எய்தாது எய்தாது --- உனக்கு
நிச்சயம் கிடைக்காது; எய்தின் --- ஒருவேளை உன் எண்ணப்படி (சீதையைச் சிறைபிடிப்பதில்
வெற்றி பெற்றாலும்; உலகு ஈன்றான் இராமன் --- உலகையெல்லாம் படைத்தளிக்கும்
இராமபிரான்; வைதால் அன்ன வாளிகள் கொண்டு
--- (முனிவர்) சாபம் போன்ற கூரிய அம்புகளால்; உன் குழு எல்லாம் --- உன் இனம் முழுவதையும்; உன் வழியோடும் --- உன் சந்ததிகளோடும் சேர்த்து; கொற்றம் முடித்து --- உங்கள் வெற்றி (வரலாறு) முடித்து; கொய்தான் அன்றே --- நிச்சயமாய் அழித்து விடுவான்.
பாவம் மறுமையையும், பழி இம்மையையும் அழிக்கும் என்பது கருத்து. உன்னால் உன் குலமும் அழியும் என
எச்சரித்தான்.
இச்சைத்
தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி, நாளும்நகை உற, நாண் இலன்,
பச்சை
மேனிபுலர்ந்து, பழி படூஉம்
கொச்சை
ஆண்மையும், சீர்மையில் கூடுமோ ?
--- கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.
இதன்
பதவுரை ---
இச்சைத் தன்மையினில் --- ஆசையின் இயல்பினால்;பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற --- அயலார் மனைவியை
விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை
இகழ்ந்து சிரிக்க; நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து --- வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு
(காமதாபத்தால்) உலரப் பெற்று; பழிபடூ உம் கொச்சை ஆண்மையும் --- பழிப்பை
அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும்; சீர்மையின் கூடுமோ? ---
சிறந்த குணங்களில்
ஒன்றாகச் சேருமா ? (சேராது என்றபடி).
'ஆசு இல் பர தாரம்அவை அம்
சிறை அடைப்பேம்;
மாசு
இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது
மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது
மானுடரை; நன்று, நம கொற்றம்!
--- கம்பராமாயணம், இராவணன் மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
ஆசு இல் பரதாரம் அவை --- ஒரு குற்றமும் இல்லாத வேறு ஒருவன் மனைவியை; அஞ்சிறை அடைப்பேம் --- அழகிய சிறையிலே அடைத்து வைப்போம்; மாசு இல் புகழ் காதல் உறுவேம் --- குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்; வளமை கூர --- பெருமை மிக; பேசுவது மானம் --- பேசுவதோ வீர உரைகள்; இடை பேணுவது காமம் ---
அதற்கிடையிலே விரும்புவது காமம்; கூசுவது மானுடரை --- அஞ்சுவது
மானிடர்களைப் பார்த்து; நம் கொற்றம் நன்று ---
நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.
பெண்டிர்
வெய்யோர்க்குப் படுபழி எளிது. --- முதுமொழிக் காஞ்சி.
இதன்
பொருள் ---
பெண்டிரை மிக விரும்பினார்க்கு உண்டாகும் பழி
எளிது.
"பெண்டிரை விரும்பி
அவர் சொல்வழி வருவார்க்குப் படும்பழி எளிது" - பிரதிபேதம்.
காமம் மிக்கவர் எளிதில் நிந்தை அடைவர்.
காமமிகுதியால் பெண் வழிச்சேறலும் பிறன்மனை விழைதலும் ஆகிய ஒழுக்கத் தவறுகள்
உண்டாகும், உண்டானால் உலகத்தில்
அபவாதம் மிகும். "மனை விழைவார் மாண்பயன் எய்தார்."
No comments:
Post a Comment