009. விருந்தோம்பல் - 03. வருவிருந்து வைகலும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல் 

     விருந்தோம்பல் என்பது, தம்மிடம் புதிதாய் வந்த விருந்தினரைப் பாதுகாத்தல் என்னும் பொருள்படும்.

     உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை தந்து, அன்போடு உபசரிப்பதால், "அன்புடைமை" என்னும் அதிகாரத்தின் பின்னர், "விருந்தோம்பல்" என்னும் அதிகாரம் வந்தது.

     தொடர்பு உடைய மக்களிடம் அன்பு செலுத்தி, இல்லறத்தைப் பேணும் நல்வாழ்வினை உடையவன், தொடர்பு இல்லாத புதிய விருந்தினரிடமும், அன்பு செலுத்த வேண்டும் என்பதை விளக்கவே, மக்கள் பேறு, அன்புடைமை, விருந்தோம்பல் என்று அதிகாரங்கள் முறையாக வருகின்றன என்பது சிந்தனைக்கு உரியது.

முதலில் பசியின் தன்மையைக் காண்போம்...

     "அடையப் பசி", அதாவது, முற்றிய பசி என்றார் அருணைவள்ளல். உயிர்கட்கு மூன்று நோய்கள் இருக்கின்றன. உடம்புக்கு, அதாவது வயிற்றுக்கு இடையறாது வருகின்ற நோய் ஆகிய பசி.  உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற நோய் ஆகிய காமம். உயிருக்கு என்றும் அகலாது வருகின்ற நோய் ஆகிய பிறவி. இவற்றை, பசிநோய், காமநோய், பிறவிநோய் என்று கூறுவர்.

     இவற்றுள் பசிநோய் என்பது அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள்; பசி நோயுடன் சில மணி நேரம் கூடப் போராட முடியாது.

     பசி வந்தவுடன் மானம், குலம், கல்வி, வண்மை, பெருமிதம்,தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம், என்ற பத்துக் குணங்களும் பறந்து போய்விடும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.                     --- ஔவையார்.

     பசி அடைந்தவுடன் நாடி, ஊன், உள்ளம், உணர்வு முதலிய கருவி கரணங்கள் தன்னிலை அழிந்து சோர்ந்து விடுகின்றன. ஆகவே பசித்தோர்க்கு உணவு தருவதே மேலான அறமாகும்.

     வறுமை காரணமா, ஒருவனுக்கு உண்ண உணவு இல்லாமல் போகின்றது. வறுமை வந்தால் எல்லாம் போய்விடும் என்று அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அனுபூதிப் பாடல் ...

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

இதன் பொருள் ----

     அடி அந்தம் இல்லா --- முதலும் முடிவும் இல்லாத, அயில் வேல் அரசே --- கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசரே!, மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே ---. வறுமை என்கிற ஒரு பாவி வந்து விட்டால், வடிவும் --- உடல் அழகும், தனமும் --- செல்வங்களும், மனமும் --- நல்ல மனமும், குணமும் --- நல்ல குணநலங்களும், குடியும் --- பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும், குலமும் --- பிறந்த குலத்தின் பெருமையும், குடி போகியவா --- நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே).


அடுத்து, விருந்தினர் என்பவர் யார் என்ற பார்ப்போம்....

     "விருந்தே புதுமை" என்பது தொல்காப்பியம். புதுமை என்ற பொருளுடைய விருந்து, புதிதாக வந்தவரையே உணர்த்தி நிற்கும். அவர்கள், முன்னே அறிந்து வந்தவர்களும், அறியாது வந்தவர்களும் என இரு பிரிவினர் ஆகும்.

     "இருவகை விருந்தினர்" என்றார் பரிமேலழகர். முன் அறிந்து இருக்கின்றமை பற்றி வந்த அதிதிகளும், புதிதாக வந்த அதிதிகளும் விருந்தினர் ஆவர்.

     விதுரரின் வீட்டிற்குக் கண்ணனும், அப்பூதி அடிகள் வீட்டிற்கு, அப்பர் சுவாமிகளும் விருந்தினராகச் சென்றது காண்க. விதுரருக்குக் கண்ணனை முன்பே தெரியும். அப்பூதி அடிகளுக்கு அப்பர் சுவாமிகளை முன்பே தெரியாது.

     அறிந்தும் அறியாதும் வந்த இரு பிரிவினரையும் உபசரிப்பதே "விருந்து ஓம்பல்" ஆகும்.

     விருந்தினர் என்பவர் குறித்து "அறநெறிச்சாரம்" என்னும் நூல் விளக்குவது காண்போம்...

அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டு உண்ணா மாட்சி உடையவர்--அட்டு உண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை.

இதன் பொருள் ---

     சமைத்து உண்டு வாழுகின்றவர்களுக்கு விருந்தினர் என்பவர், எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார்.
சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு, அவ்வாறு சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல், மலையின் உச்சியில் இருந்து விழுபவர்க்கு, அவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று சொல்லுதல் போல் ஆகும்.

      (அடுதல் - சமைத்தல். மாட்சி - பெருமை, அதிதிகள் - விருந்தினர்)

     இன்றைய காலத்தில், விருந்து என்பது நமக்கு உள்ள சுற்றத்தாரையும், நண்பர்களையும் குறிப்பதாக அமைந்து விட்டது. அதையாவது செம்மையாகச் செய்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு அமைந்துள்ளதையும் நாம் அறிவோம். இது காலத்தின் கோலம் ஆகும்.

அடுத்து, விருந்தோம்பலின் சிறப்புப் பற்றிக் காண்போம்...

     பசியைத் தீர்த்துக் கொள்ள வகை உடையோருக்கு, உணவு அளிப்பது, அறச் செயலை விலை பகர்வது போல் ஆகும். பசியினை ஆற்றிக் கொள்ள வகை இல்லாத வறிஞருக்கு உணவு அளிப்பதே உண்மையான நெறியுள்ள வாழ்க்கை என்கின்றது "மணிமேகலை" என்னும் நூல்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை,
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...  --- மணிமேகலை

இதன் பதவுரை ---

     ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ---பொறுக்கும் வன்மை உடையோர் ஆகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரே ஆவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை --- வறிஞர்களின் தீர்த்தற்கு அரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை,  மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் --- மண் செறிந்த இந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே --- உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோர் ஆவர்,

     புறநானூற்றுப் பாடல் ஒன்றும் இக் கருத்தையே வலியுறுத்தி நின்றது.

மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
 நல்லிசை நிறுத்தல் வேண்டினும், ற்று அதன்
தகுதி கேள், னி மிகுதி ஆள,
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,
உண்டி முதற்றே உணவின் பிண்டம்,
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே,
நீரு நிலனும் புணரியோர், ண்
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
வித்தி வான் நோக்கும் புன்புலம், கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே, அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது, வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே,
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

இதன் பொருள் ---

     வளப்பம் பொருந்திய பழைய ஊரினை உடைய வலிமை பொருந்திய வேந்தனே! மறுமையில் செல்லும் வானுலகத்துக்கு வேண்டிய செல்வத்தை நீ வேண்டினாலும், இந்த உலகத்தைக் காத்து, மன்னர் பலமையும் வென்று, வேந்தர் வேந்தனாக நீ ஒருவனே அரசாள நினைத்தாலும், மிக்க புகழுடனே இந்த உலகில் நீ வாழ விரும்பினாலும், உனது ஆசை நிறைவேறுவதற்கான வழிகளைச் சொல்லுகின்றேன், கேட்பாயாக. நீர் இன்றி வாழமுடியாத இந்த உயிர் பொருந்தி உள்ள உடம்பின் பசி நீங்க உணவு கொடுப்பவர்கள், அந்த உடலுக்கு உயிரைக் கொடுத்தவர்கள் ஆவர். எனவே, உடலுக்கு உயிர் போன்றது ஆகும் உணவு. எனவேதான், நீரும் நிலமும் திருத்தி விளைவுக்கு உதவியவர்கள் படைத்து அறித்துக் காத்தோர் என்னும் புகழுக்கு உரியவர்கள் ஆகின்றனர். என்னதான் பரப்பளவில் உயர்ந்தது என்றாலும், நெல் முதலியவற்றை விளைத்து விட்டு, வான் மழையை எதிர்பார்த்துக் கிடக்கும் வறண்ட நிலத்தால், அதனை ஆளும் மன்னவனுக்கு ஒரு பயனும் விளையாது. பள்ளத்தாக்குகளிலே நீரினைத் தேக்கி, நீர் நிலைகளை உண்டாக்கியவர்களே, இவ்வுலக இன்பத்தையும், தாம் செல்லும் வானுலக இன்பத்தையும் பெற்றவர்கள் ஆவர்.

"தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ"....

என்கின்றது இன்னோரு புறநானூற்றுப் பாடல்...

     தன்னை எதிர்ப்பவர் பகையை மட்டுமல்ல, தன்னைத் தேடி வந்தவர்களின் பசியாகிய பெரிய பகையையும் அழிப்பதில் வல்லவன் சோழன் நலங்கிள்ளி.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வாணிகன் ஆய் அலன், பிறரும்
சான்றோர் சென்ற நெறி என
ஆங்கு பட்டன்று அவன் கை வண்மையே.

என்கின்றது இன்னொரு புறநானூற்றுப் பாடல்...

     இந்தப் பிறவியில் செய்கின்ற தான தருமங்கள் அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி நிலைக்கு உதவும் என்ற எண்ணத்தில், தருமம் செய்வதை வியாபாரப் பொருள் ஆக்குகின்றவன் ஆய்வேள் அல்லன். அவனது செயல்களும், வார் வழங்கும் வள்ளன்மையும், கற்று அறிந்த பெரியோரும் மற்றவரும் கடைப்பிடித்து ஒழுகிய நல் வழியில் செல்லுதல் ஒன்றையே கடமையாகக் கொண்டது.

இதனை மேலும் விளக்குவது பின்வரும் நாலடியார் பாடல்....

ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது
அற்றாதார்க்கு ஈவதாம் ஆண் கடன், - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப! மாறு ஈவார்க்கு ஈதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.          --- நாலடியார்.

இதன் பொருள் ---

     பயன் கருதாது தன்னை நாடி வந்தவர்களுக்குத் தந்து உதவுவதே நல்ல ஆண்மகனுக்கு உரிய இலக்கணம் ஆகும். அப்படி இல்லாமல், இன்ன உதவியை இன்னார்க்குச் செய்தால், இன்ன பயனைப் பெறலாம் என்று எண்ணி, பலனை எதிர்பார்த்துச் செய்கின்ற உதவி, உதவி ஆகாது. கொடுக்கல் வாங்கல் என்னும் கைம்மாற்று போன்றதே ஆகும்.

     "இறைக்கும் கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்" என்பது பழமொழி. தன்னிடத்தே உள்ளதை, இல்லை என்று சொல்லாமல், வந்தவர்க்குக் கொடுத்து உதவுவது செல்வத்தை மேலும் மேலும் வளர்க்கும் என்கின்றது "பழமொழி நூனூறு" என்னும் நூல்.

இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணி
கரப்பவர் கண்டு அறியார் கொல்லோ --- பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்குநீர் சேர்ப்ப!
இறைத் தொறும் ஊறும் கிணறு.   ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

     கடல் பரப்பிலே, துறைமுகத்தில் இருந்து செல்வனவும், துறைமுகத்தை நோக்கி வருவனவும் ஆக, தோணிகள் நிலையாக உலவிக்கொண்டு இருக்கின்ற நீர்ப் பெருக்கினை உடைய கடல் நாடனே! தம்மிடத்தில் வந்து யாசித்தவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பதனால், தமது செல்வம் குறைந்து போய்விடும் என்று நினைத்து, செல்வத்தை மறைத்து வைப்பவர்கள், இறைக்கும் பொழுது எல்லாம் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்தாவது, பொருளின் உண்மைத் தன்மையை அறியமாட்டார்களோ? என்பது மேற்குறித்த பாடலின் பொருள்.

     "கொடுத்து ஏழை ஆனவர் இல்லை" என்பது பழமொழி. இதனை விளக்குவது பின்வரும் பாடல்...

அடுத்து ஒன்று இரந்தார்க்கு ஒன்று ஈந்தாரைக் கொண்டார்
படுத்து ஏழை ஆம் என்று போகினும் போ,
அடுத்து ஏறல் ஐம்பாலாய்! யாவர்க்கே ஆயினும்
கொடுத்து ஏழை ஆயினார் இல்.    --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

     நெருங்கி வளர்ந்து இருக்கின்ற இருண்ட கரிய ஐவகையாக முடிக்கும் கூந்தலை உடையவளே! தம்மை வந்து அடைந்து யாசித்தவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்தவர்களை, அப்படிக் கொண்டவர்களே "பிற்காலத்தில் இவர் ஏழை ஆவார்" என்று சொல்லிப் போனாலும் போகட்டும். யாருக்காயினும் கொடுத்து, அதனால் ஏழை ஆனவர்கள் இல்லை.

     இவற்றை எல்லாம் கருத்தில் வைத்து, பின் வருமாறு அருளாளர்கள் பாடி வைத்தார்கள்.

ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, உயர் செல்வம் எல்லாம்
அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், நல்லறமும் நட்பும்
நன்று என்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்று என்று இரு, மனமே! உனக்கு உபதேசம் இதே.   --- பட்டினத்தார்.

      ஐயம் இட்டு உண்”                  --- ஒளவையார்.

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாய் உறை,
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி,
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன் உரை தானே.    --- திருமூலர்.

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு,பிடி சோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.    --- கந்தர் அலங்காரம்.

     பசித்தவர்க்கு அன்னம் அமைதியாகக் கொடுக்க வேண்டும். அன்புடன் தரவேண்டும்; இன்னுரை கூறி, அகமும் முகமும் மலர்ந்து தரவேண்டும்.

     பசித்தவனுக்கு அன்னம் தந்தால், உண்டவனுக்கு ஊன் குளிரும்; உள்ளம் குளிரும்; உணர்வு குளிரும்; உயிரும் குளிரும்; உயிருக்கு உயிரான சிவமும் குளிரும்.

     எனவே, திருவள்ளுவ நாயனார் பின்வருமாறு திருக்குறளை, விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் அமைத்து நமக்குத் தந்தார்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை,
பருவந்து பாழ்படுதல் இன்று.             

இதற்குப் பரிமேலழகர் உரை....

     வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை --- தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை;

     பருவந்து பாழ்படுதல் இன்று --- நல்குரவால் வருந்திக் கெடுதல் இல்லை.

     (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனால் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)

     இந்த அறநூல்களையும் மற்றும் அருள்நூல்களையும், திருக்குறளையும் ஓதி உணர்ந்தோர் பலர், திருக்குறளின் பெருமையை உலகறியச் செயயும் முகத்தான் பல்வேறு நூல்களை அருளிச் செய்து உள்ளனர். அவற்றுள் ஒன்று, தரும்புரம் ஆதீனம் கமலை வெள்ளியம்லவாண முனிவர் அருளியது "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூல். திருக்குறளாகிய முதுமொழியை மேல் வைத்து, அதன் கீழ் பொருந்திய ஒரு வரலாற்றை அமைத்துப் பாடியது இந்த நூல். இதல் மேற்படி, திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல் ஒன்றைப் பார்ப்போம்....

ஈசன்அடியார் விருந்து என்றுஇட்டு, உலவாக்கோட்டைபெற்ற
நேசர் குறைவு இன்றி நிற்றலான், நாடி
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை,
பருவந்து பாழ்படுதல் இன்று.                  

     உலவாக் கோட்டை ---  எடுக்க எடுக்கக் குறைவுபடாத அரிசி மூட்டை. மதுரையில் இருந்த வேளாள அன்பர் ஒருவர் அடியாரைத் தேடி அமுது ஊட்டி வருதலைத் தம் பணியாகக் கொண்டு ஒழுகி வந்தார். வயல்கள் வளம் குன்றி, வருவாய் இல்லாத காலத்திலும் அவர் தம் வைராக்கியத்தை விடாமல் இருந்ததைக் கண்டு சோமசுந்தரக் கடவுள் அவருக்கு  உலவாக்கோட்டை அளித்து அருளினார் என்பது திருவிளையாடல் புராணம். உலவாக் கோட்டை அருளிய படலத்தில் விரிவாகக் காணலாம்.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்களில் மேலும் ஒன்று, திராவிட மாபாடியக் கர்த்தர் ஆன மாதவச் சிவஞான யோகிகள் அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" ஆகும். அந்த நூலில், மேல் குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்ததொரு பாடல்...

பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால்
சொன்னம் மிகப் பெற்றாளே, சோமேசா! - பன்னில்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

இதன்பொருள்---

     சோமேசா! பன்னில் --- ஆராய்ந்து சொல்லுமிடத்து, வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை --- தன்னை நோக்கி வந்த விருந்தை நாடோறும் பாதுகாத்து உபசரிப்பவனது இல்வாழ்க்கையானது,  பருவந்து பாழ்படுதல் இன்று --- வறுமையால் வருந்திக் கெடுகின்ற தன்மை இல்லை.  பொன்னனையாள் - பொன்னனையாள் என்னும் மாது, அன்பருக்கே போனகம் ஈந்து --- சிவபெருமானிடத்து அன்புடைய மெய்யடியார்களுக்கே அன்னம் முதலியவற்றைக் கொடுத்து, உன் அருளால் சொன்னம் மிக பெற்றாள் --- தேவரீரது திருவருளால் பொன்னை மிகுதியாகப் பெற்றாள் ஆகலான் என்றவாறு.

     நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனால் பொருள் தொலையாது மேன்மேலும் கிளைக்கும் என்பது கருத்து.

இதன் வரலாறு பின்வருமாறு....

     திருப்பூவணம் என்னும் திருப்பதியில் பொன்னனையாள் என்னும் ஒரு விலைமாது சிவனடிக்கு அன்பு பூண்டு, சிவபூசை வழுவாது நடத்தி, சிவனடியார்களைச் சிவன் எனப் பாவித்து, அருச்சித்து, வழிபட்டு, அவர் மனம் களிக்க அறுசுவை உண்டி அருத்தி, எஞ்சினதையே தான் உண்டு வரும் நாளில், சிவ அநுக்கிரகத்தால் தான் ஒரு விக்கிரகம் வார்க்க வேண்டும் என்று ஆசை கூர்ந்தாள். அதற்காக கருக்கட்டியும் வைத்தாள். நாள்தோறும் செய்யும் அடியார் பூசைக்கே தன் வருவாய் முற்றும் செலவழிந்தமையின் விக்கிரகம் வார்த்தற்கு இடம் பெறாது வருந்தினாள். அவளுடைய ஆதரம் கண்ட சிவபெருமான் ஒரு சித்தராய் வந்து பொன்னனையாள் திருமாளிகைப் புறத்து ஒருபக்கம் வீற்றிருந்தார். அது உணர்ந்த அவள், அறை உள்ளே எழுந்தருளித் திருவமுது செய்யும்படி இரந்து வேண்டினாள். அப்போது அவர் அவள் தேகம் இளைத்திருத்தற்குக் காரணம் வினவ, அவளும் பெருமான் விக்கிரகம் அமைத்தற்கு இடம் பெறாமை எனச் சொல்ல, அதன்மேல் வந்த சித்தர் உன் வீட்டில் உள்ள பித்தனை, ஈயம், செம்பு, இரும்பு முதலியவற்றால் ஆகிய பாண்டங்களை எல்லாம் கொணர்ந்து ஓரிடத்தில் இடுக எனப் பணித்தார். பொன்னனையாள் சித்தர் சொன்னவண்ணமே செய்தாள். அவ்வாறு செய்தவுடன், சித்தர் அப்பாண்டங்களின் மேல் விபூதியைத் தூவி, அன்று இரவு அவற்றை நெருப்பில் இடும்படிக் கட்டளை இட்டார். அவள் அவரை நோக்கி, "ஐயரே! நீர் இன்றிரவு இங்குத் தங்கித் திருவமுது செய்து நாளை காலையில் செல்லுக" என்று குறையிரக்கவும், அவர் அதற்கு இசையாது மறைந்தார். அதுகண்டு வியந்து பலவாறு ஏத்திப் பின் தான் எண்ணியவாறே விக்கிரகம் அமைத்துப் பிரதிட்டை செய்து திருவிழா நடத்தி மகிழ்ந்து சிலநாள் கழித்து வீடு பெற்றாள். இது திருவிளையாடல் புராணத்து உள்ளது.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த மற்றுமொரு நூல், "முருகேசர் முதுநெறி வெண்பா" என்பது ஆகும். இதனை அருளியவர் சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் ஆவார். அவர் மேல் காணும் திருக்குறளுக்கு விளக்கமாக அருளிய பாடலைக் காண்போம்....

துன்னுவனத்தும் தருமன் சூழ்முனிவர்ப் பேணுதலான்,
முன்னுவளம் பெற்றான், முருகேசா! - உன்னின்,
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

இப் பாடலின் பதவுரை....                         

     முருகேசா --- முருகப் பெருமானே,  தருமன் --- பாண்டவர்களில் முதல்வராகிய தருமர்,  துன்னும் வனத்தும் --- தாம் அடைந்திருந்த காட்டிலும், சூழ் முனிவர் பேணுதலால் --- தம்மைச் சூழ்ந்திருந்த முனிவர்களாகிய விருந்தினரைப் போற்றி உணவிட்டபடியினால்,  முன்னு வளம் பெற்றான் --- எண்ணிய செல்வத்தை இனிது அடைந்தான். 

ஆகவே,

     வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை --- தன்னை நோக்கி வந்த விருந்தினரை நாள்தோறும் உணவு முதலியவன அளித்துப் போற்றுபவனுடைய வாழ்க்கைச் சிறப்பானது,  பருவந்து பாழ் படுதல் இன்று --- குற்றத்தை அடைந்து கெட்டுப் போவது இல்லை.

     தருமர் தாம் தங்கியிருந்த காட்டிலும் தம்மைச் சூழ்ந்திருந்த முனிவர்கட்கு விருந்திட்டுப் போற்றிய பண்பினாலே தாம் எண்ணிய செல்வத்தைப் பெற்றார்.  தன்னிடம் வருகின்ற விருந்தை நாள்தோறும் போற்றுபவன் வாழ்க்கையானது குற்றத்தை அடைந்து கெட்டுப்போதல் இல்லை என்பதாம். 

(முன்னுதல் - எண்ணுதல். முன்னு வளம் - தருமர் எண்ணிய அரசாட்சிச் சிறப்பு)

                                    தருமர் விருந்திட்ட கதை

நாடு நகரங்களை எல்லாம் துரியோதனன்பால் இழந்த தருமர், தம்முடன் பிறந்தார்களோடு காட்டை அடைந்து தங்கியிருந்தார். தமக்குக் கிடைத்த தெய்வத் தன்மை பொருந்திய கலத்தின் உதவியைக் கொண்டு, தம்மை எக்காலத்தினும் சூழ்ந்திருந்த பல முனிவர்கட்கும் பிறருக்கும் விருந்து அளித்தலாகிய பணியை நாளும் குறைவின்றிச் செய்து கொண்டிருந்தார். இந்த நல்வினையினாலே அவர் பன்னிரண்டு ஆண்டுகளும் கழிந்த பிறகு தாம் எண்ணியவாறு தம்முடைய நாடு நகரங்கள் முதலியவைகளைப் பெற்று மகிழ்ந்தார். விருந்தினரைப் போற்றுபவருடைய வாழ்க்கை கெட்டொழிந்து போகாது என்பது தருமரிடம் நன்கு விளங்கியது.
                                   
இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடல்கள் அமைந்து இருத்தலைக் காணலாம்...

வேற்று அரவம் சேரான், விருந்து ஒழியான், தன் இல்உள்
சோற்று அரவம் சொல்லி உண்பான்ஆயின் ---  மாறுஅரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடுஇல் அரசனாய்
வாளால் மண்ஆண்டு வரும்.            --- ஏலாதி.

இதன் பதவுரை ---

     வேறு அரவம் சேரான் --- தீச்சொற்களைப் பேசாமலும், விருந்து ஒளியான் --- விருந்தினர்க்குப் பொருளை மறையாமலும், தன் இல்லுள் --- தன் வீட்டில், சோறு அரவம் சொல்லி --- உணவிடுதற்குரிய இன்சொற்களைப் பசித்தவர்களுக்குச் சொல்லி அழைத்து, உண்பான் ஆயின் --- அவர்களுக்கு இட்டுத் தானும் உண்பானாயினும், மாறு அரவம் கேளான் --- பகைவர் சொற்களைக் கேளாமல், கிளை ஓம்பின் --- தனக் குறவினரைப் பாதுகாப்பானாயினும், கேடு இல் அரசனாய் --- அழிதலில்லாத (நிலையான) அரசனாய், வாளால் --- வாள் வலத்தோடு, மண் ஆண்டு வரும் --- நாட்டை அரசாண்டு வருவான்.

         பழிதரும் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க்கு அஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்து உண்ணும்படியாகத் தான் உண்ணும் செய்தியை அறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லும் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமை உடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.

     அசோகவனத்தில் இருந்த சீதையின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டிய கம்பநாட்டாழ்வார், பின்வருமாறு ஒரு பாடலைப் பாடி உள்ளார். இது விருந்தோம்பலின் இன்றியமையாமையைக் காட்டும்.

"அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்,
விருந்து கண்டபோது என் உறுமோ என்று விம்மும்,
மருந்து உண்டுகொல் யான் கண்ட நோயுக்கு என்ற மயங்கும்,
இருந்த மாநிலம் செல் அரித்திடவும் ஆண்டு எழாதாள்".

இதன் பொருள் ---

     தான் இருந்த இடம் கரையான் அரிக்கவும், அவ்விடத்தை விட்டு எழுந்திராத சீதை, "மெல்லிய இலை உணவு முதலியவற்றை யார் பரிமாற இராமபிரான் உண்பாரோ? என்று எண்ணி வருந்துவாள். விருந்தினர் வந்தபோது, உபசரிப்பவர் இல்லாமையால் எப்படி அவர் துன்புறுவாரோ? என்று நினைத்து உள்ளம் விம்முவாள். நான் கொண்டுள்ள இந்த மனநோய்க்கு மருந்தும் உண்டோ? என்று எண்ணி மயங்குவாள்.



1 comment:

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...