திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
எட்டாம் அதிகாரம் - அன்புடைமை
இந்த அதிகாரத்தில் வரும் இறுதித் திருக்குறள், "அன்பின் வழிப்பட்டது உயிரின்
வளர்ச்சி ஆகும்;
அவ்வன்பு
இல்லாதவர்க்கு உள்ள உடம்பு, எலும்பைத் தோலினால் போர்த்தியது போன்றது ஆகும்"
என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்...
அன்பின்
வழியது உயிர்நிலை, அஃது இலார்க்கு
என்பு
தோல் போர்த்த உடம்பு.
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு
முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது;
அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த
--- அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
(இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின..)
திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளங்கச் செய்ய
வந்த நூல்களுள், குமார பாரதி என்பார்
அருளிய ":திருத்தொண்டர் மாலை" ஒன்று ஆகும். இந்நூலில், இத் திருக்குறளுக்கு
விளக்கமாக,
பெரிய
புராணத்தில் வரும், பத்தராய்ப் பணிவார்கள் புராணத்தைக் காட்டிப் பாடிய பாடல்....
வாய்ப்பஅர
னைத்தொழுது வாய்குழறிக் கண்அருவி
தோய்ப்பநடுங்க
கிப்புளகித்து ஓர்பத்த - ராய்ப்பணிவார்
அன்பின்
வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல்
போர்த்த உடம்பு.
சிவனடியார்களைக் கண்டால் அவர்களுடைய
மரபை விசாரியாமல் அவர்களைச் சிவன் எனவே பாவித்து வணங்கித் தொண்டு பூண்டு ஒழுகுதல்
வேண்டும். மனமகிழ்ந்து மிக்க ஆசையுடன் பசுவுக்குப் பின் கன்று அணைதல்போல அணைதல்
வேண்டும். அடியார் உயர்வும் தமது தாழ்வும் கருதிப் பேசும்போது கூசவேண்டும். அவர்
கருமம் தம் கருமமாகச் செய்தல் வேண்டும். சிவபெருமானைப் பத்தியுடன் யாரேனும்
விதிப்படி அருச்சித்தால் மனம் மகிழவேண்டும். சிவபெருமானையும் அவருடைய
அடியார்களையும் மிக்க விருப்புடன் சிவாகம விதிப்படி அருச்சித்தல் வேண்டும். தாம்
இயற்றும் புண்ணியங்களைச் சிவபெருமானுடைய திருவடிக்கே கொடுத்தல் வேண்டும்.
சிவசரிதங்களை மெய்யன்புடனே கேட்டல் வேண்டும்.
சிவபெருமானை வணங்கி மனம் நெக்குநெக்கு உருக, மெய்சிலிர்ப்ப, கண்களில் ஆனந்த அருவி பொழிய, நாத் தழுதழுப்பப் பரவசமாதல் வேண்டும்.
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் உண்டாலும் துயின்றாலும்
விழித்தாலும் ஒருபோதும் மறவாது இருத்தல் வேண்டும். சிவவேடம் தரித்துச் சிவனடியார்
போல நடித்து அதனால் சீவனம் செய்யலாகாது.
இவைகளை உடையோர் பத்தராய்ப் பணிவார்கள் என்று சொல்லப்படுவார்கள்.
அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே
உயிர் நின்ற உடம்பாவது. அவ் அன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால்
போர்த்தனவாம். உயிர் நின்றன ஆகா என்றார் திருவள்ளுவ நாயனார். உயிர்நிலை என்றது
உடம்பினை.
அடுத்து, திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளங்கச்
செய்ய வந்த நூல்களுள், சிதம்பரம் பச்சைக்
கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் என்பார் அருளிய ":சிவசிவ வெண்பா"
ஒன்று ஆகும். இந்நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடிய பாடல்....
வேந்துஉரையாற்
பூசைபுரி வேடன்மனை வெந்து,முன்போல்
சேர்ந்துபணி
செய்தாள், சிவசிவா! -
ஓர்ந்தஇடத்து
அன்பின்
வழிய துஉயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல்
போர்த்த உடம்பு.
பிரமோத்தர காண்டம். வேடன் மனைவி சிவ
வேள்வியில் வீழ்ந்து உயிர் நீத்தாள். அருளால் உய்த்து எழுந்து பணி
புரிந்தாள். "இந்திரியங்கள் ஐந்தும்
மலராக, எனது காயம் கந்தமார்
புகையுள் கூட்டும் அகிலாக, கருத்து நீடும்
சுந்தர தீபமாக, பிராணன் துய்ப்பனவே
ஆக, அந்த நால்கரணம்
முற்றும் அருக்கியமாகக் கொண்டே," எனவும், "செங்கயல் அனைய
கண்ணாள் செழுந்தழல் பிழம்பு தன்னுள், பங்கய
மலரில் செல்லும் திரு எனப் பாய்ந்து மாயப் பொங்கிய சாம்பர் ஆகக் கண்டனன் புளகம்
ஓங்கி அங்கையின் அடலை ஏந்தி ஈசனை அருச்சித்தானே" எனவும், "இறையவன் பூசை முற்றி
இறுதியில் கழித்த எல்லாம் பிறைநுதல் என்றும் ஏற்கும் பெற்றிபோல், அற்றைப் போது மறைமுதல் பூசைச் சேடம்
வாங்குவாள் வந்து தோன்றி, நிறையுடன் நின்றாள்
கண்டு நெடுந்தகை நினைவில் தேர்வான்"
எனவும் வரும் பிரமோத்தர காண்டப் பாடல்களைக் கருத்தில் கொள்க.
இத்
திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்கள்.....
--
அன்பொடு
அருள்உடையர் ஏனும் உயிர்நிலை,மற்று
என்புஇயக்கம்
கண்டும் புறந்தரார் - புன்புலால்
பொய்க்குடில்
ஓம்புவரோ போதத்தால் தாமவேய்ந்த
புக்கில்
குடிபுகுது வார். --- நீதிநெறி விளக்கம்.
இதன்
பதவுரை ---
போதத்தால் தாம் வேய்ந்த --- ஞானத்தால் தாம்
அமைத்த, புக்கில் --- பேரின்ப
வீட்டிலே, குடிபுகுதுவார் ---
குடிபுகுதற்குச் சித்தமாயிருப்பவர்கள், புன்புலால்
பொய்க்குடில் ஓம்புவரோ --- முடைநாறும் ஊன் பொதிந்த பொய்க் குடிசையாகிய
தம்முடம்பைப் பாதுகாப்பரோ? (காவார்); (காவாதொழிவதால்) அன்பொடு அருள் உடையர்
ஏனும் --- அன்பும் அருளும் உடையவராயினும், உயிர்நிலை --- உயிர்க்கு நிலைக்களமாகிய
தம்முடல் (உணவில்லாமையால் மெலிந்து), என்பு
இயக்கம் கண்டும் --- எலும்புகள் தோன்றுவதைக் கண்டபோதுங் கூட, புறந்தரார் --- (அவ்வூனுடம்பைப்)
பாதுகாவார்.
என்பு
என்பது, யாக்கை என்பது,
உயிர்என்பது, இவைகள் எல்லாம்
பின்பு
என்ப அல்லவேனும்,
தம்முடை நிலையில் பேரா,
முன்பு
என்ப உளது என்றாலும்
முழுவதும் தெரிந்த ஆற்றல்
அன்பு
என்பது ஒன்றின் தன்மை
அமரரும் அறிந்தது அன்றால். ---
கம்பராமாயணம், மருந்துமலைப்
படலம்.
இதன்
பதவுரை ---
என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள எல்லாம்
--- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடு இயைந்த) உயிர் என்பதும் ஆகிய இவையெல்லாம்; பின்பு என்ப அல்ல முன்பு
--- (அன்பினை நோக்கப்) பிற்பட்டது என்பது
அல்லாமல், (அவ்வன்பு விளங்கித் தோன்றுவதற்கு ஏதுவாக, அதன்) முன்பே தோன்றி இயைந்து
நிற்பனவாகி; என்றும் தம்முடை நிலையின் பேரா --- எக்காலத்தும்
(அன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக அதன் முன்பே தோன்றுதலாகிய) தம்முடைய நிலையில் மாறுதலின்றி
நிற்கின்றன; என்றும் உளதென்றாலும் --- இப்படிப்பட்ட தொடர்பு (உடலுயிர்
ஆகியன அன்பு தோன்றி விளங்குதற்குக் காரணமாய் முன்தோன்றுவதும், பின்பு, அன்பு அவை மாட்டுத் தோன்றி விளங்குவதுமாகிய
தொடர்பு) என்றும் உள்ளதென்றாலும்; முழுவதும் தெரிந்தவாற்றால்
--- முழுவதுமாக ஆராய்ந்து
பார்த்தால்; அன்பு என்பது ஒன்றின்
தன்மை --- அன்பு என்பதாகிய ஒன்றனுடைய (உடலுயிர் ஆகியவற்றைத் தளிர்ப்பச் செய்தலும், சிதைப்பச் செய்தலுமாகிய) இருவேறுபட்ட தன்மையினை; அமரரும் அறிந்ததன்றே ---
தேவர்களும் அறிந்தவர்களல்லவே?
இப்படாலின் கருத்தை, “அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு என்னும் குறள் வழி நின்று காணுதல் வேண்டும்.
பிறவி என்பது உடலும் உயிரும் இணைவது. அறிவற்றதும்
மாயாகாரியமும்
ஆகிய உடம்பு என்னும் பருப்பொருளை, அறிவு வடிவானதும், அருவமானதுமான உயிர் இயைந்து
இருப்பது அருளார்ந்த அறிவு வெளியாக இருக்கின்ற இறைவனை அடைந்து அனுபவித்தற்காகும். இதற்குப்
பிறவிதோறும் உடம்போடு கூடி உயிர் அன்பினைப் பெருக்கிக் கொண்டு அருள் நிலைக்கு உயர்தல் வேண்டியிருக்கின்றது. எனவே, அன்பு தோன்றி விளக்கம் பெறுதற்கு உடலோடு
உயிர் இயைதல் தேவையாகின்றது. உடலோடு உயிர் இனணந்த பின்பேதான் அன்பு தோன்றி விளக்கம்
பெறுதல் முடியும். எனவேதான் “என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது இவைகள் எல்லாம்
அன்பிற்குப் பின்பு அல்ல முன்பு” என்றார்.
உடலும் உயிரும் சேர்ந்தவழி தோன்றிச் சிறக்கின்ற
அன்பு, அன்பிற்கு
உரியார் அருள் செய்த போது அவ்வுடலுயிர்கள் இன்புறும் வண்ணம் தளிர்ப்பதும்; அங்ஙனம் இன்றி அவ்வன்பிற்கு
உரியார் பிரிகின்ற காலத்து அவ்வுடலுயிர்கள் சிதைவு பெற்றழிய அவ்வன்பே காரணமாதலும் காணுகின்றோம்.
எனவே அன்பு, தளிர்ப்பச் செய்தலும்
சிதைப்பச் செய்தலுமாகிய இருகூறுகளை உடைய தன்மைகளை உடைத்தாகின்றது.
அன்பு, உடல் உயிர் இணைவிற்குப்
பின்பு அவற்றிடத்து நின்று தோன்றினும் அவை மென்மேலும்
இன்புற்றுச் சிறக்கவோ, அன்றி அவை இரண்டும் தனிப்பட்டுப்
பிரியவோ அதுவே காரணம் ஆகின்றது. நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை புலப்படும். இதனைத் தேவர்களும் உணரார்கள் என்கின்றார்
கம்பநாட்டாழ்வார்.
‘என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம்
வன்
பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு
பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின்
நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?
--- கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப்படலம்.
இதன்
பதவுரை ---
என்பு தோல் உடையார்க்கும் --- எலும்பும் தோலும்
உடையார் ஆகி உள்ள முனிவர்களுக்கும்; இலார்க்கும் --- அவை இல்லாது தேவசரீரம் பெற்ற தேவர்களுக்கும்; தம் வன்பகைப் புலன் ---
தம்முடைய வலிய பகையாகிய புலன்களை; மாறசு அற --- குற்றம் இல்லாமல்; மாய்ப்பது என்? --- அழிப்பது என்ன பயனைத் தரும்; மூ உலகத்தினும் --- மூன்று உலகங்களிலும்; முன்பு பின்பு இன்றி ---
தனக்கு மேம்பட்டதும் பிற்பட்டதும் இல்லாமல்
சிறந்து நிற்கிற; அன்பின் -- அன்பைவிட; நல்லது ஓர் ஆக்கம் --- நல்லதாகிய ஒரு செல்வம்; உண்டாகுமோ --- உளதாகுமோ’
(இல்லை
என்றபடி.)
இந்திரிய வசம் செய்வதைவிட, அன்புடையராயிருத்தல் யார்க்கும் பெருஞ் செல்வம் ஆகும் என்பதாம். “உரிவை தைஇய ஊன் கெடு மார்பின், என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்” என்ற (முருகு 12 9 -130) அடிகளையொட்டி ‘என்பு தோல் உடையார்’ என்ற முனிவரரை அறிக. தேவர்கள்புண்ணிய சரீரம்
உடையவர், பூதபௌதிக உடம்பு உடையவர் அல்லர்
ஆதலின் ‘இலார்க்கும்’ என்றார். ‘முன்பு, பின்பு இன்றி’ இறந்த காலத்தும், எதிர்காலத்தும் இல்லாமல் நிகழ்காலத்தும் அன்பின்நல்ல ஆக்கம்
இல்லை என உரைத்து, முக்காலத்திற்கும் ஒப்ப உயர்ந்த ஆக்கம் அன்பே என்றார்.
No comments:
Post a Comment