009. விருந்தோம்பல் - 10. மோப்பக் குழையும்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்

     இந்த அதிகாரத்தில் வரும் இறுதித் திருக்குறள், "மெல்லிய அனிச்ச மலரானது, மோந்து பார்த்த அளவில் வாடும்; விருந்தினர், முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடி விடுவர்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---

மோப்பக் குழையும் அனிச்சம், முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
  
இதற்குப் பரிமேலழகர் உரை ---   

     அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப் பூ மோந்துழி அன்றிக் குழையாது;

     விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும் --- விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.

         (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்.

         இதனால் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்னும் பெரியார் தாம் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், சிறப்புலி நாயனாரின் வரலாற்றை வைத்துப் பாடியுள்ள பாடல்...

எய்தமகிழ்ந்து இன்சொல்உரைத்து ஈசன்அடி யார்க்குஇதமே
செய்துஅனமே செய்தார் சிறப்புலியார் - வெய்துற்றார்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

         சோழநாட்டிலே ஆக்கூரிலே அந்தணர் குலத்திலே சிறப்புலி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சினடியார்கள் எழுந்தருளி வந்தபொழுது அவர்களை வணங்கி, மகிழ்வினால் இன்சொற்களைச் சொல்லி, அவர்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டும் திரவியங்களையும் கொடுப்பவர்.  பஞ்சாக்கரத்தை மிகுந்த பத்தியோடு செபிப்பவர். பரமசிவனைக் குறித்து வேள்விகள் செய்பவர். அவர் இன்னும் பல சிவபுண்ணியங்களைச் செய்துகொண்டு இருந்து சிவபதம் அடைந்தார்.

         அனிச்சம் பூ மோந்துழி அன்றிக் குழையாது. விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் என்றார் திருவள்ளுவ நாயனார்.

         சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதன மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் செய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டிய வழி அல்லாது வாடாத அனிச்சம்பூவினும், விருந்தினர் மெல்லியர் என்பதாம்.  இதனால் விருந்தோம்புவாருக்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது என உரை விளக்கம் கண்டார் பரிமேலழகர்.
 பின்வரும் பெரியபுஆணப் பாடல்கள்சிறப்புலி நாயனாரின் சிறப்பினைக் காட்டுவன....

ஆளும் அங்கணருக்கு அன்பர்
     அணைந்த போது, டியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க
     முன்புநின்று இனிய கூறி
நாளும்நல் அமுதம் ஊட்டி
     நயந்தன எல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி
     நிதிமழை மாரி போன்றார்.

இதன் பொழிப்புரை ---

     அவர் (சிறப்புலி நாயனார்)  உலகங்கள் எல்லாவற்றையும் ஆளுகின்ற சிவபெருமானின் அன்பர்கள் தம்பால் வந்து அணையின், அவர்கள் அடியில் தாழ்ந்து வணங்கி, மூண்டெழும் அன்பு மேன்மேல் பொங்க, அவர்களுக்கு இனிய சொற்களைக் கூறி, நாடோறும் நல்ல உணவுகளை அளித்து, உண்பித்து, அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அளித்து, அதனால் மேன்மேலும் பெருகி வளர்கின்ற இன்பத்துள் வாழ்ந்து, செல்வத்தை மழைபோல் சொரிகின்ற மேகம் என விளங்கி வந்தார்.


அஞ்செழுத்து ஓதி, அங்கி
     வேட்டு, நல் வேள்வி எல்லாம்
நஞ்சுஅணி கண்டர் பாதம்
     நண்ணிடச் செய்து ஞாலத்து,
எஞ்சல்இல் அடியார்க்கு என்றும்
     இடையறா அன்பால், வள்ளல்
தம்செயல் வாய்ப்ப, ஈசர்
     தாள்நிழல் தங்கினாரே.

     இதன் பொழிப்புரை : திருவைந்தெழுத்தை ஓதி, முத்தீ வளர்த்து, நஞ்சு விளங்கும் கழுத்தரான சிவபெருமானின் திருவடிகளில் பொருந்த நல்ல வேள்விகளைச் செய்து, உலகில் யாதும் குறைவிலராய் வாழும் சிவனடியார்களுக்கு எக்காலத்தும் இடையறாது செய்யும் அன்பினால், வள்ளல்களினும் வரையாது அளித்து வாழ்ந்து, இறைவரின் திருவடி நிழலில் நிலை பெறும் பேற்றைப் பெற்றார்.

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திருப்புல்லாணி மாலை என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...


மூக்கிற்கு மோப்பக் குழையும் அனிச்சம், முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து, ன்பரால்சென்று நூற்றுவர்பால்
ஏக்கு உற்றிடாது விதுரன் மனை விருந்து என்னநின்றான்,
காக்கத் தனிப்பொருள் ஆனான் புல்லாணியில் கார்வண்ணனே. 

இதன் பொருள் ---

     உலகத்து உயிர்களை எல்லாம் காத்து அளிக்கும் ஒப்பற்ற பரம்பொருளாக உள்ளவனாகி, திருப்புல்லாணி என்னும் திவ்விந தேசத்தில் எழுந்தருளி இருக்கும் கார்வண்ணன் ஆகிய பெருமான், கிருஷ்ணாவதாரத்தில், துரியோதனாதியரிடம் சென்று ஏமாந்து விடாமல், விதுரன் மனைக்கு விருந்தாகச் சென்றான். எனவே, திருவள்ளுவ நாயனார், மெல்லிய அனிச்ச மலரானது மோந்து பார்க்க வாடும். ஆனால், விருந்தினரோ, முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடிவிடுவர் என்றார்..

ஏக்குற்றிடாது --- ஏமாந்துவிடாமல். அந்நாளில் கண்ணபிரான் விதுரன் மனைக்குச் சென்றதை இது சுட்டி நின்றது.  கார்வண்ணன் --- கரிய நிறத்தை உடையவன்.

பின்வரும் புறநானூற்றுப் பாடலைக் காண்க....

எழு இனி நெஞ்சம், செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்வழி
அருகில் கண்டும் அறியார் போல
அகம் யக வாரா முகன்அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்,
 வருக எனல் வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளி முன்பின் ஆளி போல
 உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்என
நோவாதோன் வயின் திரங்கி
 வாயா வன்கனிக்கு உலமரு வோரே.  ---  புறநானூறு.

 இதன் பொருள் ---

     நெஞ்சமே! எழுந்திரு, நாம் வேறு எங்காகினும் போகலாம். விருப்பம் இல்லாது தருகின்ற பரிசை யாராவது விரும்பி ஏற்பார்களா? கண்டும் காணாதவர் போல் செல்லும், உள்ளன்பு இல்லாதவர் தருகின்ற பரிசு நமக்கு எதற்கு? இப்படிப்பட்டவர்கள் பரிசிலரும் அல்லர். பரிசில் வேண்டி வருவோரை வரவேற்றுப் பரிசில் தருவோர் உலகம் பெரியது. பரிசில் பெறும் நம் போன்றவர்களும் நாட்டில் மிக உண்டு. ஏனவே, ஆளி போலும் வலிவுடையவனே! உள்ளன்போடு விரும்பி வரவேற்றுப் பரிசில் தராதவர்களை நாடி, என் போன்றவர்கள் பரிசில் பெற விரும்பார். கனியாத பழங்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் சென்று இரங்கி நிற்பதை விட, விரும்பி வரவேற்றுப் பரிசில் தரக் காத்திருப்போரை நாடி, நெஞ்சமே! நாம் போவோம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...