005. இல்வாழ்க்கை - 01. இல்வாழ்வான் என்பான்




திருக்குறள்
அறத்துப்பால்
                                   
இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை.
  
இல்லின்கண் இருந்து தானம் முதலாயின செய்தல்.

     வாழும் திறம்  ---  இல்வாழ்க்கை

     அதற்குத் துணையான மனைவி இலக்கணம் --- வாழ்க்கைத் துணைநலம்

     இல்லறப் பகுதியான பிரமசரியம், காருகத்தம் என்னும் இரண்டின் உள்ளும், பிரமசரியத்திற்கு ஆதாரமாகிய புதல்வரைப் பெறுதல்  ---  புதல்வரைப் பெறுதல்

         காருகத்த இலக்கணம் ---  நல்கூர்ந்தார், நல்குரவின் நீங்கினார், செல்வர், வள்ளியோர் என்னும் நால்வரினும்,

      நல்கூர்ந்தாரால் செய்யப்படுவன---

1.    அன்புடைமை
2.    விருந்தோம்பல்
3.    இனியவை கூறல்
4.    செய்ந்நன்றி அறிதல்
5.    நடுவு நிலைமை
6.    அடக்கம் உடைமை
7.    ஒழுக்கம் உடைமை.

      இவரால் மனம், மொழி, மெய்களால் தவிரப்படுவன---

1.    பிறனில் விழையாமை
2.    பொறை உடைமை
3.    அழுக்காறாமை
4.    வெ­ஃகாமை
5.    புறங்கூறாமை
6.    பயனில சொல்லாமை
7.    தீவினை அச்சம்

      இவற்றோடும் கூட, நல்குரவின் நீங்கினாரால் செய்யப்படுவது,  ஒப்புரவு அறிதல்.
      இவற்றோடும் கூட,  செல்வரால் செய்யப்படுவது, ஈகை.
      இவற்றோடும் கூட,  வள்ளியோரால் செய்யப்படுவது,புகழ்.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஒருவன், இயற்கைத் தன்மையை உடைய மாணாக்கர், தவசீலர், அருளாளர் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் விளங்குகின்ற துணை ஆவான் என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---
                                     
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இல்வாழ்வான் என்பான் --- இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்;

     இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை --- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
        
         (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல்,  உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.)

இக் கருத்தை, திருவிளையாடல் புராணத்துள் உள்ள, பின்வரும் பாடல் உணர்த்தும்....

துறவினர், ஈசன் நேசத்
         தொண்டினர் பசிக்கு நல் ஊண்
திறவினைப் பிணிக்குத் தீர்க்கும்
         மருந்து உடல் பனிப்புக்கு ஆடை
உறைவிடம் பிறிது நல்கி
         அவரவர் ஒழுகிச் செய்யும்
அறவினை இடுக்கண் நீக்கி
         அருங்கதி உய்க்க வல்லார். --- தி.வி.புராணம், திருநாட்டுச் சிறப்பு.

இதன் பொருள் ---

துறவினர் --- துறந்தோரும், ஈசன் நேசத் தொண்டினர் --- சிவபிரானிடத்து அன்பினையுடைய திருத்தொண்டரும் ஆகியவர்களின், பசிக்கு நல்ஊண் --- பசியைப் போக்க நல்ல உணவும், வினைத் திறப் பிணிக்கு --- வினைவகையாலாகிய நோய்க்கு, தீ ர்க்கும் மருந்து --- நீக்குதற்குரிய மருந்தும், உடல் பனிப்புக்கு ஆடை --- மெய்யின் குளிரைப்போக்க உடையும், உறைவிடம் --- தங்குமிடமும், பிறிதும் --- வேறு பொருளுமாகிய இவற்றை, நல்கி --- கொடுத்து, அவர் அவர் ஒழுகிச் செய்யும் --- அவரவர்கள் தத்தம் நிலையில் வழுவாது ஒழுகிச் செய்கின்ற, அறவினை இடுக்கண் நீக்கி --- அறத் தொழிலுக்கு நேரும் இடையூறுகளைப் போக்கி, அருங்கதி உய்க்க வல்லார் --- அரிய வீட்டு நெறியில் (அவர்களைச்) செலுத்தவல்லவராவர்.

"இல்வாழவா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை"

என்னும் திருக்குறளும், "இவர் இவ் வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், இச் செலவிற்குப் பசிநோய் குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி அவ்வந் நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் ‘நலலாற்றின் நின்ற துணை’ என்றார்" எனப் பரிமேலழகர் கூறிய உரையும் இங்கே நோக்கற்பாலன.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...