014. ஒழுக்கம் உடைமை - 02. பரிந்தோம்பிக் காக்க





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை

          இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "அறங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால், உயிருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக வருவது ஒழுக்கமே. ஆதலால், ஒழுக்கத்தை எவ்விதத்திலும் குறைவு படாமல் வருந்திப் பாதுகாக்கவேண்டும்" என்கின்றது.
  
திருக்குறளைக் காண்போம்.....

பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க --- ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க,

     தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே --- அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும்,  துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.

      ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

     மனவாக்குக் காயங்களால் செய்யவேண்டியவற்றைச் செய்வதும், தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து ஒழுகுவதும், ஒழுக்கம் எனப்படும்.

     இதனை விரித்து, வாகீச முனிவர் இயற்றிய "ஞானாமிர்தம்" என்னும் நூல் கூறுமாறு காண்க.

"பொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும்
உள்ளச் செய்தி தெள்ளிதின் கிளப்பின்,
இருள்தீர் காட்சி, அருளொடு புணர்தல்,
அரும்பொறை தாங்கல், பிறன்பொருள் விழையாமை,

செய்தநன்று அறிதல், கைதவம் கடிதல்,
பால்கோடாது பகலில் தோன்றல்,
மான மதாணி ஆணின் தாங்கல்,
அழுக்காறு இன்மை, அவாவின் தீர்தல்,
அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை

அழல்தோய்வு அன்னர் ஆகி, ஆனாக்
கழலும் நெஞ்சின் கையற்று இனைதல்,
பன்னரும் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்கு
அறிவும் பொறியும் கழிபெரும் கவினும்,
பெறற்கரும் துறக்கம் தம்மின் ஊஉங்கு

இறப்ப வேண்டும் என்று எண் அரும்பெரும் குணம்;
வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள
அறம்பெரிது கரைதல், புறங் கூறாமை,
வாய்மை, கல்வி, தீமையின் திறம்பல்,
இன்மொழி இசைத்தல், வன்மொழி மறத்தல்,

அறிவுநூல் விரித்தல், அருமறை ஓதுதல்,
அடங்கிய மொழிதல், கடுஞ்சொல் ஒழிதல்,
பயன்நின்ற படித்தல், படிற்று உரை விடுதல்,
காயத்து இயைந்த வீயா வினையுள்
அருந்தவம் தொடங்கல், திருந்திய தானம்,

கொடைமடம் படுதல், படைமடம் படாமை,
அமரர்ப் பேணல், ஆகுதி அருத்தல்,
ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை,
உடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார்
அடைந்த காலை அவண்இயல் துயரம்

தேரார் அல்லர் தெரிந்தும் ஆருயிர்
பெரும் பிறிதாக இரும்பிணம் மிசைஞரின்
ஓராங்குப் படாஅ மாசில் காட்சி,
ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்,
இந்தியப் பெரும்படை இரிய நூறும்

வன்தறு கண்மை, வாள்இட்டா அங்கு
நோவன செய்யினும் மேவன இழைத்தல்,
தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து,
பாத்தூண் செல்வம், பூக்கமழ் இரும்பொழில்,
தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை

அன்னையின் தீரா நன்னர் ஆண்மை,
கார்கோள் அன்ன கயம்பல கிளைத்தல்,
கூவல் தொட்டல், ஆதுலர் சாலை,
அறம்கரை நாவின் ஆன்றோர் பள்ளி,
கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்,

இனையவை முதல நினைவரும் திறத்த
புரத்தல் அரத்துறை; மறத்துமறை இவற்றின்
வழிப்படாது எதிர்வன கெழீஇ
உஞற்றல் என்ப உணர்ந்திசி னோரே".

இதற்குப் பதவுரை ---

     பொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும் --- நிலையற்ற இந்தப் பரு உடம்பில் கூட்டப்பட்டுள்ள மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் (ஈட்டப்படும் கன்மங்களுள்)

     உள்ளச் செய்தி தெள்ளிதின் கிளப்பின் --- மனத்தால் செய்யப்பட வேண்டுவன ஆகிய கன்மங்களை தெளியும்படிச் சொல்வதாயின்,
    
     இருள்தீர் காட்சி --- ஐயம், திரிபு ஆகிய குற்றங்களின் நீங்கிய மெய்யுணர்வு,

     அருளொடு புணர்தல் --- எக்காலமும் அருள் உணர்வோடு கூடி இருத்தல்,

     அரும்பொறை தாங்கல் --- பொறுக்க முடியாத சினம் உண்டாகிய போதும், பொறுக்க முடியாத துன்பம் உண்டாகிய போதும், அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல்,

     பிறன்பொருள் விழையாமை ---  தனது சுகத்திற்காகப் பிறரிடம் உள்ள பொருளைக் கவர விரும்பாமை,

     செய்த நன்று அறிதல் --- பிறர் தனக்குச் செய்த உதவியை, நன்மையை மறவாது இருத்தல்,

      கைதவம் கடிதல் - மனத்தில் வஞ்சக எண்ணத்தை ஒழித்தல்.

     பால்கோடாது பகலில் தோன்றல் --- விருப்பு வெறுப்பு இல்லாமல் எங்கும் ஒரு தன்மைத்தாக விள்கும் சூரியன் போல, நண்பர் பகைவர் முதலிய எவரிடத்தும் ஒரு பக்கம் சாயாமல், நடுவி நிலையோடு இருத்தல்,

     மான மதாணி ஆணின் தாங்கல் --- மானம் என்னும் அணிகலனைப் பெருமையோடு (ஆண்மையோடு) தரித்தல்.

     அழுக்காறு இன்மை --- பிறரிடத்தில் உள்ள செல்வம் முதலிய சிறப்புக்களைக் கண்டு பொறாமைப் படாது இருத்தல்.

     அவாவின் தீர்தல் --- பிறப்பிற்கு ஏதுவாகிய ஆசையில் இருந்து விடுபடுதல்.

     அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை --- பிற உயிர்களுக்குப் பெரும் துன்பம் உண்டான காலத்தில்,

     அழல்தோய்வு அன்னர் ஆகி --- நெருப்பில் இட்டது போன்ற துயரத்தைத் தாமும் அடைந்து,

     ஆனா --- அளவுக்கு அடங்காமல்,

     கழலும் நெஞ்சின் கையற்று இனைதல் --- நெகிழ்ந்து உருகும் உள்ளத்தினராய், துன்ப மிகுதியால் செயலற்று வருந்துதல்,

     பன்ன அரும் சிறப்பின் மன்ன உயிர்த் தொகைகட்கு --- சொல்லுதற்கு அரிய சிறப்பினை உடைய நிலைபெற்ற உயிர்த் தொகுதிகளுக்கு,
    
     அறிவும் பொறியும் --- ஞானமும், செல்வமும்,

     கழிபெரும் கவினும் --- மிகப் பெரிய வடிவழகும்,
    
     பெறற்கு அரும் துறக்கம் --- பெறுதற்கு அரிய சுவர்க்க இன்பம்,

     தம்மின் ஊஉங்கு --- தம்மைக் காட்டிலும்,

     இறப்ப வேண்டும் என்று எண் அரும்பெரும் குணம் --- மிகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்ற அரிய பெரிய குணம் (ஆகிய இவைகளே ஆகும்)

     மனத்தால் தோன்றும் நல்ல நினைவுகளைச் சொல்லி, அல்லாத வழித் தோன்றும் தீய நினைவுகளையும் குறிப்பால் பெறவைத்த வாகீச முனிவர், இனி, அந்த நினைவுகளின் வழி, சொல்லால் செய்யப்படும் வினைகளை இனிக் கூறுகின்றார்.

     வாக்கொடு சிவணிய நோக்கின் --- வாக்கினால் பொருந்திய வினைகளைக் கூறுங்கால்,

     மீக்கொள அறம்பெரிது கரைதல் --- மேன்மையான அறங்களை எடுத்துக் கூறுதல்,

     புறங் கூறாமை --- ஒருவரைக் காணாத இடத்து, அவரைப் பற்றிப் பிறரிடம் இகழ்ந்து கூறாது இருத்தல்.

     வாய்மை --- உண்மையே பேசுதல்,

     கல்வி --- உயர்ந்த அறிவு நூல்களைக் கற்றல்,

     தீமையின் திறம்பல் --- தீய சொற்களில் இருந்து நீங்குதல்,

     இன்மொழி இசைத்தல் --- இனிய சொற்களைக் கூறுதல்,

     வன்மொழி மறத்தல் --- வன்மை தரும் சொற்களை அடியோடு மறந்து விடுதல்,

     அறிவுநூல் விரித்தல் --- அறிவு நூல்களை ஓதுதல்,

     அருமறை ஓதுதல் --- அரிய வேத ஆகமங்களை ஓதுதல்,

     அடங்கிய மொழிதல் --- பணிவான செற்களைச் சொல்லுதல்,

     கடுஞ்சொல் ஒழிதல் --- கடுமையான சொற்களைச் சொல்லாது இருத்தல்,
    
     பயன்நின்ற படித்தல் --- பிறர்க்குப் பயன்படும் சொற்களைச் சொல்லுதல்,

     படிற்று உரை விடுதல் --- பயன் இல்லாத ஒஎற்றுச் சொற்களைப் பேசாது விடுத்தல்,

     (இனி, காயத்தால் செய்யப்படும் வினைகள் விரித்துக் கூறப்படுகின்றன)

     காயத்து இயைந்த வீயா வினையுள் --- உடம்பினால் செய்யட்டும் கெடாத வினைகளைச் சொல்லப் புகுங்கால்,

     அருந்தவம் தொடங்கல் --- மனமானது ஐம்புலன்களின் வழிப் படர்வதை விடுத்து, விரதங்களான உண்டி சுருக்குதல் முதலியவற்றை மேற்கொண்டு, அரிய தவத்தைச் செய்தல்,

     திருந்திய தானம் --- அறநெறியில் வந்த பொருள்களைத் தக்கார்க்கு மகிழ்ந்து கொடுத்தல்,

     கொடைமடம் படுதல் --- இன்னார், இனியார் என்று பாராது, தன்னிடம் உள்ளதை, வரையாது கொடுத்தல்,

     படைமடம் படாமை --- போரில் வீரர் அல்லாதார் மேலும், புறமுதுகு இட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தோர் இறையோர் மேலும் செல்லாமை,

     அமரர்ப் பேணல் --- தேவர்களைப் போற்றி வழிபடுதல்,

     ஆகுதி அருத்தல் --- வேள்விகளைச் செய்து, ஆகுதிகளைத் தேவர்க்கு உண்ணக் கொடுத்தல்,

     ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை --- தனது நிலைக்கு ஏற்ற ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் சிறப்பு,

     உடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார் அடைந்த காலை --- வாளை ஏந்திக் கொண்டு, தனது உடலை வெட்டுவதற்குப் பலர் கூடி வந்த போது,

     அவண் இயல் துயரம் தேரார் அல்லர் --- அவ்விடத்து தனது உடலும் உள்ளமும் என்ன துயரத்தை அடையும் என்பதை

     தெரிந்தும் --- தெரிந்து இருந்தும்,

     ஆருயிர் பெரும் பிறிதாக --- அருமையான உயிரை (புலால் உணவிற்காக) உதன் உடலில் உர்நுத பிரியச் செய்து,

     இரும்பிணம் மிசைஞரின் --- பிணம் ஆகிய அந்த உடலைத் தின்பவருடன்,

     ஓராங்குப் படாஅ --- நட்புக் கொண்டு கூடாது,

     மாசில் காட்சி ---  குற்றம் அற்ற அறிவு உடைமை,

     ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல் --- கொலை, களவு, கள் உண்டல், குரு நிந்தை, பொய் என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பாதகமாகிய ஆழ்கடலில் வீழாமல் தப்புதல்,

     இந்தியப் பெரும்படை இரிய நூறும் வன் தறுகண்மை --- இந்திரியங்கள் ஆகிய வெல்லுதற்கு அரிய பெரிய படையானது பின்னிட்டு ஓடுமாறு, அதனை வென்று இழக்கும் வலிய பேராண்மை,

     வாள்இட்டா அங்கு நோவன செய்யினும் மேவன இழைத்தல் --- வாளால் அறுப்பது போன்ற பெரும் துன்பத்தை ஒருவர் தனக்குச் செய்தாலும், அவரே பின் ஒரு காலத்தில் வந்து, ஒரு செயலை முடித்துக் கொடுக்கும்படி வேண்டி நிற்கும் நிலை வந்தால், பழையதை நினைத்துப் பாராது, அவர் வேண்டியதை, வேண்டியவாறே செய்து கொடுத்தல்,

     தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து --- தன்னிடம் உள்ளது மிகச் சிறியது ஆயினும், மிகப் பலராகிய விருந்தினரோடு,

     பாத்தூண் செல்வம் --- பகிர்ந்து உண்டு மகிழும் சிறப்பு,

     பூக்கமழ் இரும்பொழில் --- பூக்களின் மணம் கமழும் பெரிய சோலைகளை அமைத்தல்,

     தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை --- தன்னுடைய மனையாளைத் தவிர, பிற மாதரை,

     அன்னையின் தீரா நன்னர் ஆண்மை --- தனது தாயைப் பொன்று நினைத்துப் பார்ப்பதில் நீங்காத நல்ல பெரிய ஆண்மை,

     கார்கோள் அன்ன கயம் பல கிளைத்தல் --- கடலைப் பொன்ற பெரிய ஏரி, குளம் பலவற்றை அமைத்தல்,
    
     கூவல் தொட்டல் --- கிணறு அமைத்தல்,

     ஆதுலர் சாலை ---  மருத்துவச் சாலையை உண்டாக்குதல்,
    
     அறம்கரை நாவின் ஆன்றோர் பள்ளி --- நல்லறங்களை எடுத்துச் சொல்லும், நாவினை உடைய ஆன்றோர்கள் வாழ்தற்கு உரிய தவப்பள்ளிகளை அமைத்தல்,

     கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம் --- கடவுளர்கள் எழுந்தருளி உள்ள உயர்ந்த ஆலயங்களை எடுத்தல்,

     இனையவை முதல --- இத் தன்மைகளை உடையவை முதலாக,
    
     நினைவரும் திறத்த புரத்தல் --- நினைத்தற்கு அரிய புண்ணியச் செயல்களைச் செய்தல்,

     அரத்துறை --- அறத்துறை ஆகிய வினைகளை ஆவன.

     மறத்துமறை --- மறத்துறை என்பது,

     இவற்றின் வழிப்படாது --- இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்யாது,

     எதிர்வன கெழீஇ உஞற்றல் என்ப --- இவற்றிற்கு மாறுபாடானவற்றை, பொருந்தச் செய்தல் என்று சொல்லுவர்,

     உணர்ந்திசினோரே --- அண்மையை உணர்ந்த பெரியோர்.

கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு. --- நன்னெறி.

     வெள்ளம் வரும் முன், ஆற்றில் அணைகட்டி வைக்காதவர் வெள்ளம் வந்தபிறகு என்ன செய்யக்கூடும். அது போ, உயிரைக் கவரந்து செல்கின்ற கொடிய கூற்றுவன் ஒருவனைக் கொல்வதற்கு நெருங்கும் முன்னமே மனம் கனிந்து அறங்களைச் செய்து ஈடேற்றம் பெறவேண்டும்.

         கொள்ளும் - உயிரைக் கொள்ளும். குறுகுதல் - அடைதல். பெருகுதற்கண் - வெள்ளம் வந்த பொழுது.

தருமம் என்று ஒரு பொருள் உளது, தாவிலா
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால்,
அருமையில் வரும்பொருள் ஆகும் அன்னதும்
ஒருமையினோர்க்கு அல்லால் உணர்தற்கு ஒண்ணுமோ?
               --- கந்தபுராணம், காசிபன் உபதேசப் படலம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...