திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
பத்தாம்
அதிகாரம் - இனியவை கூறல்
இந்த அதிகாரத்தில் வரும், ஆறாம் திருக்குறள், "நல்லனவற்றை
மேற்கொண்டு,
இனிய
சொற்களைப் பேசினால், அறம் அல்லாதவை நீங்கி, அறம் வளரும்"
என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்....
அல்லவை
தேய அறம் பெருகும், நல்லவை
நாடி
இனிய சொலின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
நல்லவை நாடி இனிய சொலின் --- பொருளால்
பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்;
அல்லவை தேய அறம் பெருகும் ---
அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
(தேய்தல்
: தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன்
நில்லாதாம் பாவம்" (நாலடி.51)
என்பதூஉம்
இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான்
மறுமைப்பயன் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாம, குமார பாரதி
என்னும் பெரியவர் பாடிய "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில்
இருந்து ஒரு பாடல்...
அல்லல்
உண்டாக்கிய அல்லவை தேய அறம்பெருகும்
நல்லவை
நாடி இனிய சொலின் என்று நாட்டுதலால்,
கல்எனும்
பாவம் கரையும், தருமம் கலிக்கும், அன்பில்
சொல்இனிதாகத்
தென் புல்லை நல்லானைத் துதிப்பவர்க்கே.
இதன்
பொருள் ---
பிறருக்கு நன்மையைத் தரும் இனிய சொற்களை
ஒருவன் பேசினால், அவனுக்கு அல்லலை
உண்டாக்கிய பாவங்கள் தேய, புண்ணியமானது பெருகும் என்று
உறுதியாகச் சொல்லப்பட்டு உள்ளதால்,
தென்
திசையில் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை
உள்ளன்போடு துதிப்பவர்க்கு, வன்மையான தீமையை உண்டாக்கிய பாவங்கள் தேயும், புண்ணியங்கள்
தழைத்து ஓங்கும்.
அல்லல் உண்டாக்கிய - தீமையை
ஏற்படுத்திய. கல்லெனும் பாவம் - கெட்டியான
தன்மை உடைய தீவினை.
இத் திருக்குறளுக்கு ஒப்புமையாகப் பினவரும்
பாடல்கள் அமைந்து இருத்தலைக் காண்க.
விளக்குப்
புகஇருள் மாய்ந்தாங்கு, ஒருவன்
தவத்தின்முன்
நில்லாதாம் பாவம், - விளக்குநெய்
தேய்விடத்துச்
சென்றுஇருள் பாய்ந்தாங்கு, நல்வினை
தீர்விடத்து
நிற்குமாம் தீது. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ---
ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் நில்லாது பாவம் ---
ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்த தீவினை நில்லாது, விளக்கு நெய் தேய்விடத்து --- விளக்கின்
நெய் குறையுமிடத்தில், சென்று இருள்
பாய்ந்தாங்கு --- இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை தீர்விடத்து நிற்கும் தீது ---
நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.
விளக்கென்பது தவம், விளக்கு எரிவதற்குக் காரணமான நெய் என்பது, தவம் நிகழ்தற்குக் காரணமான நல்வினை.
முன் நல்வினையினாலேயே தவம் நிகழும் என்பது, "தவத்தால் தவம் செய்யாதார்" என்று
வந்தமையின் பெறப்படும்.
தவம் என்பது, பிற உயிர்க்குத் தீங்கு நினையாமையே
ஆகும்.
வினை
உயிர் கட்டு வீடு இன்ன விளக்கித்
தினை
அனைத்தும் தீமைஇன்று ஆகி--நினையுங்கால்
புல்அறத்தைத்
தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை
நாட்டும் இடத்து. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
நினையுங்கால் --- ஆராயுமிடத்து, நல்அறத்தை நாட்டுமிடத்து ---
நல்லறத்தினை நிலைநிறுத்தக் கருதின்,
(அந்
நல்லறமானது) வினை உயிர் கட்டு வீடு இன்ன விளக்கி ---வினையும் ஆன்மாவும் பந்தமும்
வீடுபேறும் ஆகிய இவற்றை நன்கு உணர்த்தி, தினை
அனைத்தும் --- தினையளவும், தீமை இன்று ஆகி ---
குற்றமில்லாததாய், புல்லறத்தை -- பாவச் செயல்களை, தேய்த்து --- அழித்து, உலகினோடும் பொருந்துவதாம் ---
உயர்ந்தோர் ஒழுக்கத்தோடும் பொருந்துவதாகும்.
No comments:
Post a Comment